நாட்டை ஐ.தே.கட்சினர் நாசப்படுத்துவதாக ஜனாதிபதி கூறிக் கொண்டு, இரவில் ரகசியமாக அவர்களைச் சந்திக்கின்றார்: நாமல் குற்றச்சாட்டு

🕔 February 21, 2018

நாட்டின் பொருளாதாரத்தை ஐக்கிய தேசியக் கட்சிதான் நாசப்படுத்தியதாக கூறிய ஜனாதிபதி, அதே கட்யினரோடு சேர்த்து ஆட்சியமைக்க முயற்சித்து வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

அதனால்தான் இரவுகளில் ஐக்கிய தேசியக் கட்சியினரை ரகசியமாக அவர் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றார் எனவும் நாமல் கூறியுள்ளார்.

மேலும், பிரதமரை கூட தீர்மானித்துக்கொள்ள முடியாத சூழலில், பொதுமக்களை அசௌகரியத்துக்கு உட்படுத்தாது உடன் பொதுத்தேர்தலுக்கு செல்ல வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையில் ஆஜரான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே, மேற்கண்ட விடயங்களை அவர் கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

“மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தொடர்பில் பிரதமர் மட்டுமன்றி ஜனாதிபதியும் பொறுப்புக்கூற வேண்டும். அர்ஜுன் மகேந்தரின்  சிங்கப்பூர் பிரஜையென்று தனக்கு தெரியாது என்றும், மறுநாள் பத்திரிகையூடாகவே தெரிந்துகொண்டதாகவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் தப்பிக்க முடியாது.

ராஜபக்ஷவினரை சிறையில் அடைந்தால் எல்லாம் சரியாகி விடும் என அமைச்சர் ராஜித கூறுகிறார்.

அர்ஜுன் மகேந்திரன் சுதந்திரமாக உள்ளார். அர்ஜுன் மகேந்திரனின் இடத்தில் பொது எதிரணியினர் யாராவது இருந்திருப்பின், சிவப்பு அறிவித்தல் பெற்று இந்நேரம் கைது செய்திருப்பார்கள்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர், மற்றும் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினர் எல்லோரும் பொது எதிரணி உறுப்பினர்களை மட் டுமே குறி வைக்கின்றனர்.

பழிவாங்கும் இந்த எண்ணம் வேண்டாம். அதனை ஒரு பக்கம் வைத்து விட்டு, மக்களுக்கு பசளையைக் கொடுங்கள், மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாயுங்கள், நாட்டின் பொருளாதாரத்தை ஐ.தே.க. நாசப்படுத்தியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார். எனினும் அப்படிப்பட்ட ஐ.தே.கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைக்கவே ஜனாதிபதி முயற்சிக்கின்றார்.

அதனாலேயே அவர் இரவுகளில் ரகசியமாக அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றார். இந் நிலையில் ஸ்திரமான அரசாங்கத்தை அமைப்பதற்கு முடியாமலும், பிரதமரை கூட தீர்மானித்துக்கொள்ள முடியாத சூழலிலும், பொதுமக்களை அசௌகரியத்துக்கு உட்படுத்தாது – உடனடியாக பொதுக் தேர்தலுக்கு செல்லவேண்டும் என நாம் கோருகின்றோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்