பருவச் சீட்டு வைத்திருக்கும் மாணவர்களை ஏற்றுவதில்லை; போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று டிப்போ பஸ்கள் மீது புகார்

🕔 February 19, 2018

– அஹமட் –

லங்கை போக்குவரத்து சபை பஸ்களில் பயணிப்பதற்காக பருவச் சீட்டுக்களை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்களை, பொத்துவில் – அக்கரைப்பற்று வீதியில் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகளில் ஏற்றுவதற்கு, மறுப்புத் தெரிவிக்கப்படுவதாக, பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் புகார் தெரிவிக்கின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபையினரின் இந்த நடவடிக்கை காரணமாக, பாடசாலை செல்லும் ஏழை மாணவர்கள் கடுமையான அசௌகரியங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.

அக்கரைப்பற்று பஸ் டிப்போவுக்கு சொந்தமான பஸ் வண்டிகளின் சாரதி மற்றும் நடத்துநர்களே, இவ்வாறு பருவச் சீட்டு வைத்திருக்கும் மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கு மறுத்து வருவதாக, பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறுகின்றனர்.

பொத்துவில் – அக்கரைப்பற்று வீதியில் இன்று திங்கட்கிழமை பயணித்த, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான அனைத்து பஸ் வண்டிகளும், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கு மறுப்புத் தெரிவித்தமையினால், இன்று பாடசாலை முடிந்த பின்னர், தமது வீடுகளுக்கு மாணவர்கள் பல கிலோமீற்றர்கள் நடந்து சென்றதாகவும் கூறுகின்றனர்.

எனவே, இது குறித்து இலங்கைப் போக்குவரத்து சபையின் மேலதிகாரிகள் உடனடியாகக் கவனம் செலுத்துமாறு, அந்தப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Comments