நசீரை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதில் சிக்கல்கள் இல்லை: மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் உறுதிப்படுத்தினார்

🕔 January 27, 2018

– மப்றூக் –

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு, அட்டாளைச்சேனையையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நசீரை நியமிப்பதில் சிக்கல்கள் இல்லை என்பதை, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முகம்மட்  ‘புதிது’ செய்தித்தளத்துக்கு உறுதிப்படுத்தினார்.

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அப்பதவியில் இல்லாமலாகும் போது ஏற்படும் வெற்றிடத்துக்கு, அந்தக் கட்சியின் அங்கத்தவர் எவரொருவரையும் நாடாளுமன்ற உறுப்பினராக, சம்பந்தப்பட்ட கட்சியின் செயலாளர் – பெயர் குறித்து நியமிக்க முடியும் என்று, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் முகம்மட் இதன்போது விளக்கிக் கூறினார்.

மு.காங்கிரஸ் சார்பான ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் ராஜிநாமா செய்தமையினை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நசீரை நியமித்துள்ளமை தொடர்பில் வினவிய போதே, அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்தார்.

“கட்சியொன்றின் தேசியப்பட்டிலுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக ஆரம்பத்தில் நியமிக்கப்படுபவர், அந்தக் கட்சியின் தேசியப்பட்டியல் வேட்பாளராக பெயர் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். அல்லது அந்தக் கட்சி சார்பாக –  அந்த முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஏதாவதொரு மாவட்டத்தில் போட்டியிட்டிருக்க வேண்டும். அவ்வாறான ஒருவரைத்தான் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முதலாவதாய் நியமிக்க முடியும்.

ஆனால், முதலாவதாக நியமிக்கப்பட்டவர் அந்தப் பதவியில் இல்லாமலாகும் போது ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்காக பெயர் குறிப்பிடப்படும் நபர், தேசியப்பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்ட வேட்பாளராகவோ, அல்லது – அந்த முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில், குறித்த கட்சி சார்பாக போட்டியிட்டவராகவோ இருக்க வேண்டும் என்கிற எவ்வித நிபந்தனைகளும் கிடையாது” எனவும் அவர் கூறினார்.

ஆகவே, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியலில் நசீரின் பெயர் இடம்பெறவில்லை என்ற போதிலும், கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக அவர் போட்டியிடவில்லை என்ற போதிலும், சல்மான் ராஜநாமா செய்தமையினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு நசீரை – நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதில் தடைகள் எவையும் கிடையாது என்பது உறுதியாகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்