அம்பாறை மாவட்டத்தில் யானைக்கு புள்ளடியிடுவது, முஸ்லிம்கள் தங்களுக்கே தோண்டிக் கொள்ளும் படுகுழியாகும்: வேட்பாளர் மஹ்தூம்

🕔 January 11, 2018

– அஹமட் –

ம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்துக்கு வாக்களிப்பதென்பது, இங்குள்ள முஸ்லிம்கள் தமக்குத் தாமே தோண்டிக் கொள்ளும் படுகுழியாகும் என்று, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் மயில் சின்னத்தில் போட்டியிடும் வை.பி. மஹ்தூம் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;

“சிங்கள கட்சிகளிடம் சிக்கிக் கிடந்த முஸ்லிம் சமூகத்துக்கு, ஓர் அரசியல் அடையாளத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காகத்தான், நமது பெருந்தலைவர் அஷ்ரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை உருவாக்கினார். அதன் மூலம் முஸ்லிம் சமூகத்துக்கென்று ஓர் அரசியல் கட்சி கிடைத்தது, சின்னம் கிடைத்தது, அடையாளம் கிடைத்தது. அதனால்தான் முஸ்லிம் காங்கிரசை கடந்த காலங்களில் நான், நீங்கள், நமது பெற்றோர்கள் என்று அனைவரும் ஆதரித்தோம். ஆனால், அவ்வாறு நாம் ஆதரித்த முஸ்லிம் காங்கிரஸ் எங்கே என்று, நான் கேட்க விரும்புகிறேன்.

வேதனை

ஒரு பிரதேச சபைத் தேர்தலிலேயே தனது சொந்தச் சின்னமான மரச்சின்னத்தில் போட்டியிட முடியாமல், யானைச் சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் களமிறங்கியிருப்பது வேதனைக்குரிய விடயமாகும். அரசியல் ரீதியாக ஐக்கிய தேசியக்கட்சியின் யானைச் சின்னத்துக்கு வாக்களித்து வந்த நமது முஸ்லிம் சமூகத்தை மீட்டு, அந்த மக்களுக்காக பெருந்தலைவர் அஷ்ரப் உருவாக்கித் தந்த, முஸ்லிம் காங்கிரஸ், இப்போது ஐக்கிய தேசியக் கட்சியிடம் அடகு வைக்கப்பட்டுள்ளமையானது பெரும் வேதனைக்குரிய விடயமாகும்.

அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்துக்கு வாக்களிப்பதென்பது, இங்குள்ள முஸ்லிம்கள் தமக்குத் தாமே தோண்டிக் கொள்ளும் படுகுழியாகும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

பலம் பெறுவார் தயா கமகே

அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியானது அமைச்சர் தயா கமகேயின் கைகளுக்குள்தான் இருக்கிறது என்பதை யாரும் மறுத்து விட முடியாது. அதனால்தான் தயா கமகேவுக்கு அமைச்சுப் பதவியினை ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ளதோடு, தயா கமகேயின் மனைவி, அனோமாக கமகேவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்கியுள்ள ரணில் விக்ரமசிங்க, அவருக்கும் ஒரு அமைச்சுப் பதவியினை வழங்கியுள்ளார். இதை வைத்தே, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தயா கமகேவுக்கு உள்ள அதிகாரம் என்ன என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

எனவே, அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும், அதன் யானைச் சின்னமும் வெற்றி பெறுமானால், அதனால் கிடைக்கும் அத்தனை அனுகூலங்களும் தயா கமகேயைத்தான்  போய்ச் சேரும். அதனால், ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் அரசாங்கத்துக்குள்ளும், தயா கமகேயின் கைகள்தான் மிகவும் ஓங்கும்.

தயா கமகேயின் கைகள், அரசாங்கத்துக்குள் ஓங்கினால் நமக்கு என்ன பிரச்சினை என்பதையும் இங்கு நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அம்பாறை மாவட்ட முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த பேரினவாதிகள் மேற்கொள்ளும் அதிகமான நடவடிக்கைகள், தயா கமகேயின் ஆசிர்வாதங்களுடன்தான் நடந்து வருகின்றன.

கமகேயின் இனவாதம்

இறக்காமத்தில் மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டமையின் பின்னணியில் தயா கமகேதான் இருந்தார். அதை ஒத்துக் கொள்ளும் வகையில், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் கூட்டமொன்றின் போதும், தயா கமகே பேசியிருந்தார். அதாவது, இறக்காமத்தில் வைக்கப்பட்டுள்ள சிலையை அரசாங்கம் அகற்றினால், எனது அமைச்சர் பதவியை நான் ராஜிநாமா செய்வேன் என்று, தயாகமகே ஒரு தடவை பேசியிருந்தார். அதற்குப் பயந்துதான், அந்த சிலையினை அகற்றாமல் ரணில் விக்ரமசிங்க அங்கேயே வைத்திருக்கின்றார்.

அது மட்டுமல்ல, தீகவாபி பன்சலைக்கு சொந்தமான சுமார் 12 ஆயிரம் ஏக்கர் காணிகள், கல்முனை தொடக்கம் பொத்துவில் வரை உள்ளதாகவும், அந்தக் கூட்டத்தில் தயா கமகே பேசியிருந்தார். அப்படியென்றால், அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? கல்முனை தொடக்கம் பொத்துவில் வரையுள்ள எந்தவொரு இடத்திலும் நாங்கள் சிலைகளை வைக்க முடியும், அதனை யாரும் தடுக்க முடியாது என்று, தயாகமகே சொல்ல வருகின்றார்.

இவ்வாறான தயாகமகே, அம்பாறை மாவட்டத்தில் தலைமை தாங்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்துக்கு வாக்களிக்குமாறுதான், முஸ்லிம் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் கேட்கிறது. அப்படி நாம் யானைச் சின்னத்துக்கு அம்பாறை மாவட்டத்தில் வாக்களிப்பதென்பது நமக்கு நாமே தோண்டிக் கொள்ளும் படுகுழி என்று கூறுவதில் ஏதாவது தவறு இருக்கிறதா என்று இப்போது சொல்லுங்கள்.

நன்மையில்லா கூட்டணி

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து, முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டால், அதன் மூலம் முஸ்லிம் காங்கிரசுக்கும் நன்மை கிடைக்க வேண்டும். ஓர் அரசியல் கூட்டணி அமைத்தால் அதிலுள்ள எல்லாக் கட்சிகளுக்கும் நன்மை கிடைக்க வேண்டும். ஆனால், இம்முறை அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில், யானைச் சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதால், முஸ்லிம் காங்கிரசுக்கு எதுவித நன்மையும் கிடையாது. அத்தனை நன்மைகளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கே கிடைக்கும் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அப்படியென்றால், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதால் முஸ்லிம் காங்கிரசுக்கு எந்தவித நன்மைகளும் கிடையாது என்பது நமக்கு விளங்குகிறது. எனவே, முஸ்லிம் காங்கிரசுக்கு நம்மையளிக்காத ஓர் அரசியல் கூட்டணியில் அந்தக் கட்சி ஏன் இணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்கிற கேள்வி இங்கு எழுகிறதல்லவா?

ஹக்கீமுக்கு ஆதாயம்

நன்றாக விளங்கிக் கொள்ளுங்கள், யானைச் சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதால், முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சிக்குத்தான் நன்மைகள் இல்லை. ஆனால், முஸ்லிம் காங்கிரசின் தலைவருக்கு தனிப்பட்ட ரீதியில் மிகப்பெரும் ஆதாயங்கள் இருக்கின்றன.

அதாவது, தனது தனிப்பட்ட ஆதாயத்துக்காகத்தான், முஸ்லிம் காங்கிரசை யானைச் சின்னத்தில் ரவூப் ஹக்கீம் இங்கு போட்டியிட வைத்துள்ளார்.

அம்பாறை மாவட்ட முஸ்லிம்களுக்கு என்ன அநியாயம் நடந்தாலும் பரவாயில்லை. இறக்காமத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைக்கு அருகில் பாரிய பன்சலை அமைக்கப்பட்டாலும் பரவாயில்லை. தீகவாபிக்கு சொந்தமானது என்று, இங்குள்ள முஸ்லிம்களின் காணிகள் பறிக்கப்பட்டாலும் பரவாயில்லை. தயாகமகே எனும் இனவாத அமைச்சரின் கைகள் ஓங்கினாலும் பரவாயில்லை. தனக்கு ஆதாயம் கிடைத்தால் மட்டும் போதும் என்று நினைத்து, யானைச் சின்னத்தில் முஸ்லிம் காங்கிரசை களமிறக்கியுள்ள ரஊப் ஹக்கீமை, நாம் ஏன் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதுதான் இங்குள்ள கேள்வியாகும்.

எனவே, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் யானைச் சின்னத்தை தோற்கடிப்பதுதான் இங்குள்ள முஸ்லிம்கள் தம்மை காப்பாற்றிக் கொள்வதற்கான உபாயமாகும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்