பொலிஸாரிடம் சிக்கிய ஞானசாரருக்கு பிணை

🕔 May 26, 2015

Gnanasara thero - 01பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் – இன்று காலை கறுவாத் தோட்டம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு,  கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்துக்கு வாக்கு மூலமொன்றினை வழங்குவதற்காக, ஞானசார தேரர் வருகை தந்தபோதே – அவர் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்ற உத்தரவினை மீறி, லஞ்ச ஊழல் ஆணைக்குழு அலுவலகத்துக்கு முன்பாக – கடந்த மாதம் ஞானசார தேரர் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தார். இது தொடர்பில்,  நீதிமன்றில் ஆஜராகுமாறு ஞானசார தேரருக்கு உத்தரவிடப்பட்டிருந்தபோதும், குறித்த திகதியில் – அவர் நீதிமன்றுக்கு வருகை தரவில்லை.  இதன் காரணமாக, ஞானசார தேரரைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணையொன்றினைப் பிறப்பித்திருந்தது.

ஆயினும், கடந்த வாரம் ஞானசார தேரர் வெளிநாடொன்றில் இருந்ததாகவும், நேற்றைய தினமே அவர் நாடு திரும்பியதாகவும், பொதுபலசேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை கைது செய்யப்பட்ட ஞானசார தேரர், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது – அவரை 05 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், 10 லட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையிடும் விடுவிக்குமாறு – கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றின் பிரதம நீதவான் ஜிஹான் பில்பிட்டிய உத்தரவிட்டார்.

Comments