ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு, அம்பாறை மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியது

🕔 December 11, 2017

 

முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு, இன்று திங்கட்கிழமை அம்பாறை மாவட்டத்திலுள்ள பல உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடும் பொருட்டு, கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

மேற்படி ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு – மயில் சின்னத்தில் போட்டியிடுவதால், அச்சின்னத்துக்குரிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் எஸ். சுபைர்தீன், இன்று காலை அம்பாறை மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தினார்.

அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை, பொத்துவில் பிரதேசசபை, இறக்காமம் பிரதேச சபை, நிந்தவூர் பிரதேச சபை, அட்டாளைச்சேனை பிரதேசசபை, காரைதீவு பிரதேச சபை, கல்முனை மாநகர சபை, சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் நாவிதன்வெளி பிரதேச சபை ஆகியவற்றில் போட்டியிடும் பொருட்டு ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும்,பசீர் சேகுதாவூத், எம்.ரி. ஹசனலி தலைமையிலான ஐக்கிய சமாதான கூட்டமைப்பும் அங்கம் வகிக்கின்றன.

இந்த நிலையில், நிந்தவூர் பிரதேச சபைக்கான தேர்தலில் அச்சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் அச் சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபைக்கான தேர்தலில் அச்சபையின் முன்னாள் தவிசாளர் ஏ.எம்.எம். நௌசாட் ஆகியோர், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்