ஹக்கீம் வெட்டிய ‘காய்’

🕔 August 11, 2015

Article - 07ரசியல் என்பது ஒரு சதுரங்க ஆட்டம். எதிராளியின் நகர்வுகளை துல்லியமாகக் கவனித்து, அவருடைய அடுத்த எத்தனம் எதுவாக இருக்குமென ஊகித்து, அதனை வெட்டி வீழ்த்துகின்றாற்போல், காய்களை நகர்த்தத் தெரிந்தவர்கள், இந்த ஆட்டத்தில் வென்று விடுகின்றனர்.

இது தேர்தல் காலம் என்பதால், சதுரங்க ஆட்டம் – சூடும் சுவாரசியமும் நிறைந்தவையாக மாறியிருக்கிறது.

அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியலைப் பொறுத்தவரை, இங்கு மு.கா. தலைவர் ஹக்கீம், முன்னாள் அமைச்சர் அதாஉல்லா, மற்றும் அ.இ.ம.காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுத்தீன் ஆகியோர் சதுரங்க ஆட்டத்தில் நேரடியாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஒருவரை அடுத்தவர் வெட்டி வீழ்த்துவதற்காக தமது காய்களை நகர்த்துவதும், கணிப்புகள் தவறுகின்றபோது, காய்கள் வெட்டி வீழ்த்தப்படுவதுமென்று – சதுரங்க ஆட்டம் பரபரப்பாகியிருக்கிறது.

இந்தக் கட்டுரை எழுதப்படும்போது, அதாஉல்லா மற்றும் றிசாட் பதியுத்தீன் ஆகியோர் நகர்த்திக் கொண்டிருந்த ‘சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை’ என்கிற காயை, பிரதமர் ரணிலை வைத்து, மு.கா. தலைவர் ஹக்கீம் வெட்டி வீழ்த்தியிருக்கின்றார்.

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை என்கிற விவகாரமானது, அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியலில் – தட்டிக் கழிக்க முடியாத விவகாரமாக மாறியிருக்கிறது.

சாய்ந்தமருது என்பது, முற்றுமுழுதாக முஸ்லிம்களைக் கொண்டதொரு பிரதேசமாகும். தொகை மதிப்பு, புள்ளிவிபர திணைக்களத்தின் 2012 ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பின்படி, சாய்ந்தமருது பிரதேசத்தில் 25 ஆயிரத்து 412 பேர் வசிக்கின்றனர். சுமார் 09 சதுர கிலோமீற்றர் பரப்பளவினைக் கொண்ட இப் பிரதேசத்துக்கென, உள்ளுராட்சி சபையொன்று இல்லை என்பது இங்குள்ள மக்களின் பெருங்குறையாகும்.

சரியாகச் சொன்னால், சாய்ந்தமருது பிரதேசம் – தனக்கான உள்ளுராட்சி சபையினை இழந்திருக்கிறது.

1928 ஆம் ஆண்டிலிருந்து, சாய்ந்தமருதுக்கென உள்ளுராட்சி சபையொன்று இருந்துள்ளது. அதன் பெயர் ‘கரைவாகு தெற்கு கிராம சபை’ என்பதாகும். அந்த சபையில் 10 உறுப்பினர்கள் அங்கம் வகித்துள்ளனர். ஆயினும், 1987 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரதேச சபைகள் சட்டத்தின் காரணமாக, கல்முனை உள்ளுராட்சி சபையுடன் சாய்ந்தமருது இணைக்கப்பட்டு விட்டது.

இப்போது, ‘நாங்கள் இழந்த சபையை எங்களுக்கு மீண்டும் தாருங்கள்’ என்கின்றனர் சாய்ந்தமருது மக்கள்.

இந்த உள்ளுராட்சி சபைக் கோரிக்கையினை வைத்து, இங்குள்ள அரசியல்வாதிகள் விளையாடத் துவங்கினார்கள். உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சராக அதாஉல்லா பதவி வகித்தபோது, ‘சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபையொன்றினைப் பெற்றுத் தருவேன்’ என்றார். அதற்காக, தனக்கு வாக்களிக்க வேண்டும் என நிபந்தனை விதித்தார். ஆயினும், அந்த சபையினை அவரால் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. இருந்தபோதும், அதாஉல்லா தனது வாக்குறுதியை இன்னும் கைவிட்டபாடில்லை. ‘சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையினை, தன்னைத் தவிர – வேறு யாரும் பெற்றுத் தரப் போவதில்லை’ என்று, அண்மையில் கூட, சாய்ந்தமருது பிரதேசத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் வைத்து, முன்னாள் அமைச்சர் அதாஉல்லா கூறியிருந்ததாக செய்தியொன்றைப் படிக்கக் கிடைத்தது.

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையினை அதாஉல்லா பெற்றுக் கொடுக்கத் தவறிமையினையடுத்து, மு.கா. தலைவர் ஹக்கீம் வந்தார். சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையை, மு.காங்கிரஸ் பெற்றுத் தருமென்றார். ஆனால், சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை கிடைக்கவில்லை. ஹக்கீமிடம் காரணம் கேட்டால், ‘சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையினை உருவாக்குவது தொடர்பில், நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருந்தோம். அதற்குப் பொறுப்பான அமைச்சர் கரு ஜெயசூரியவுடனும் பேசினோம். அதற்குள் நாடாளுமன்றம் கலைந்து விட்டது’ என்கிறார்.

இந்த நிலையில், அம்பாறை அரசியல் களத்துக்கு புதிதாக வந்துள்ள அமைச்சர் றிசாத் பதியுத்தீனும், சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை என்கிற விவகாரத்தினை கையில் எடுத்து – ஆடத் துவங்கியுள்ளார்.

அமைச்சர் றிசாத்தின் அ.இ.ம.காங்கிரஸ், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் – அதன் மயில் சின்னம் சார்பாக, அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றமை தொடர்பில் அறிவீர்கள். இந்தக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களில் முக்கியமானவர் சிராஸ் மீராசாஹிப். இவர் சாய்ந்தமருதைச் சேர்ந்தவர், மு.காங்கிரஸ் சார்பாக – கல்முனை மாநகர மேயராகப் பதவி வகித்தார். பிறகு நடத்த குழப்படியில், மு.கா.வைப் விட்டுப் பிரிந்தவர் – இப்போது மயில் கட்சி சார்பாக, பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.

அமைச்சர் றிசாத்தோடு அண்மையில் சேர்ந்து கொண்ட இன்னுமொருவர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல். இவரும் சாய்ந்தமருதுக்காரர். முஸ்லிம் காங்கிரசில் மிக நீண்டகாலமாக இருந்து வந்தவர் – அண்மையில் விலகி, றிசாத்தோடு சேர்ந்து விட்டார். இதேவேளை, ஐ.தே.கட்சி சார்பாக – தன்;னுடைய அ.இ.ம.காங்கிரசுக்குக் கிடைக்கும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை, ஜெமீலுக்கு வழங்குவேன் என, அமைச்சர் றிசாத் கூறிவருகிறார்.

இந்த நிலையில், சாய்ந்தமருது பிரதேசத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில், அமைச்சர் றிசாத் அண்மையில் கலந்து கொண்டார். இதன்போது, சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையினை பெற்றுத் தருவதாக அவர் வாக்குறுதியொன்றினை வழங்கினார். ஆனாலும், அந்த வாக்குறுதியினை றிசாத் நேரடியாக வழங்கவில்லை. ‘சாய்ந்தமருதைச் சேர்ந்த ஜெமீலை, நான் நாடாளுமன்ற உறுப்பினராக்குவேன். அவர் உங்களின் நீண்ட காலக் கோரிக்கையான உள்ளுராட்சி சபையினைப் பெற்றுத் தருவார்’ – இதுதான் றிசாத் வழங்கிய வாக்குறுதி.

றிசாத்தின் இந்தக் கதை சாய்ந்தமருதில் கொஞ்சம் பலிக்கத் தொடங்கியது. ‘றிசாத்தின் கட்சியில் நமது ஊரைச் சேர்ந்த இருவர் இருக்கின்றார்கள். அந்தவகையில், றிசாத்தின் வாக்குறுதியினை நம்பினால்தான் என்ன’ என்று ஒரு சிலர் யோசிக்கத் தலைப்பட்டார்கள். போதாக்குறைக்கு – சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை தொடர்பில், அமைச்சர் றிசாத்தை நம்புமாறு சிராசும், ஜெமீலும் சாய்ந்தமருது மக்களிடம் மன்றாடினார்கள். இந்தக் காட்சிகள் அனைத்தினையும் பார்த்துக் கொண்டிருந்த ‘மிதக்கும் வாக்காளர்’ கூட்டம், சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்றம் தொடர்பிலான, அமைச்சர் றிசாத்தின் வாக்குறுதியின் பக்கமாக அசையத் துவங்கினர்.

இந் நிலையினை மு.கா. தலைவர் ஹக்கீம் புரிந்து கொண்டார். இந்த சதுரங்க ஆட்டத்தில், அதாஉல்லாவை விடவும், றிசாத் நகர்த்தும் காய்கள் ஆபத்தானவை என்பதை கணித்துக் கொண்ட ஹக்கீம், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, தனது சதுரங்க ஆட்டத்தில் – ரணில் என்கிற ‘ராஜா’வால், றிசாத்தின் காய்களை வெட்டியெறிந்துள்ளார்.

ஐ.தே.கட்சியின் சார்பில் போட்டியிடும் மு.காங்கிரசின் வேட்பாளர்களை ஆதரித்து, கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று இடம்பெற்றது. மு.காங்கிரசின் அழைப்பின் பேரில் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். மு.கா. தலைவர் ஹக்கீமும் கூட்டத்துக்கு வந்திருந்தார்.

இங்கு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ‘தேர்தலின் பின்னர் சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையினை ஏற்படுத்தித் தருவேன்’ என்கிற வாக்குறுதியினை வழங்கினார். இதை, சும்மா கூறியிருந்தாலும் பரவாயில்லை. ‘அமைச்சர்கள் ஹக்கீமும், கரு ஜெயசூரியவும் பேசி எடுத்த தீர்மானத்தின்படி, சாய்ந்தமருது பிரதேச சபையினை ஏற்படுத்தித் தருவேன்’ என்று ரணில் கூறியதுதான், இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

உண்மையாகச் சொன்னால், சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபைக் கோரிக்கை தொடர்பில் – உள்ளுர் அரசியல்வாதிகளோ, முஸ்லிம் அரசியல் தலைவர்களோ வழங்குகின்ற வாக்குறுதிகளை, அப் பிரதேச மக்கள் நம்புவதற்குத் தயாராக இல்லை. இந்த விவகாரத்தினைப் பேசிப் பேசியே, முஸ்லிம் அரசியல்வாதிகள் – பல தேர்தல்களைக் கடத்தி விட்டனர். அதனால், கிட்டத்தட்ட, இந்த விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர்களை, இனி நம்புவதில்லை என்கிற மனநிலைக்கு சாய்ந்தமருது மக்கள் வந்துவிட்டனர்.

இதனால்தான், பிரதம மந்திரி ரணிலை வைத்து, மு.கா. தலைவர் ஹக்கீம், தனது சதுரங்கத்தினை ஆடியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க – ஒரு கனவான் அரசியல்வாதி என்கிற கருத்து எல்லோரிடமும் இருக்கிறது. ரணில் – சொன்னால் செய்வார் என்பது அவருக்குள்ள நல்ல பெயராகும். எனவே, சாய்ந்தமருதுக்கு பிரதேச சபையொன்றினை ஏற்படுத்தித் தருவேன் என்று, ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ள வாக்குறுதியானது, அப்பிரதேச மக்களிடம் எடுபட்டுள்ளது.

இதனால், சாய்ந்தமருதுவில் மு.கா.வுக்கான ஆதரவில், ஓர் அதிகரிப்பு ஏற்படுமென எதிர்பார்க்கலாம். அந்த ஆதரவு – இந்தத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் மு.கா. வேட்பாளர்களுக்கான வாக்குகளாக மாறக் கூடும்.

எது எவ்வாறாயினும், சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபைக் கோரிக்கையின் நியாயம் குறித்தும், இங்கு பேச வேண்டியுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் மொத்தமாக 20 உள்ளுராட்சி சபைகள் உள்ளன. இந்த மாவட்டத்திலுள்ள பொத்துவில், சம்மாந்துறை, அம்பாறை மற்றும் கல்முனை ஆகிய 04 தேர்தல் தொகுதிகளிலும் மேற்சொன்ன 20 உள்ளுராட்சி சபைகளும் அடங்கியிருக்கின்றன. இவற்றில் பொத்துவில் தொகுதிக்குள் 09 சபைகளும், சம்மாந்துறை தொகுதிக்குள் 03 சபைகளும், அம்பாறைத் தொகுதிக்குள் 07 சபைகளும் உள்ளடங்கியுள்ளன. ஆனால், கல்முனை தொகுதிக்குள், கல்முனை மாநகரசபை என்கிற ஒரேயொரு உள்ளுராட்சி சபை மட்டுமே அமைந்துள்ளது.
இதை இன்னும் இலகுபடுத்திச் சொன்னால், கல்முனை தேர்தல் தொகுதியானது ஒரேயொரு உள்ளுராட்சி சபையாகவும் உள்ளது.

சாதாரணமாக, இந்த மாவட்டத்தில், சுமார் 18 ஆயிரம் சனத்தொகையினைக் கொண்ட காரைதீவு மற்றும் மகாஓயா போன்ற பிரதேசங்களுக்கெல்லாம் உள்ளுராட்சி சபைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், கிட்டத்தட்ட 01 லட்சத்து 20 ஆயிரம் மக்களை – கல்முனை மாநகரசபையின் அதிகாரத்துக்குள் பிடித்து வைத்திருப்பதென்பது, என்ன நியாயமென்று புரியவில்லை.

சாய்ந்தமருதுக்கென உள்ளுராட்சி சபையொன்று கிடைக்கும்போது, கல்முனை மாநகரசபையின் நிருவாகச் சுமை குறைவடையும் நிலையொன்று உருவாகும். உதாரணமாக, கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள குப்பைகளை அகற்றுவதற்கு, கல்முனை மாநகரசபையினர் படாதபாடு படுகின்றனர். அப்படி அகற்றும் குப்பைகளையும், கொட்டுவதற்கு இடமில்லாமல் தவிக்கின்றனர். இந்த நிலையில், கல்முனை மாநகரசபையிலிருந்து சாய்ந்தமருதைப் பிரித்து, அந்தப் பிரதேசத்துக்கென உள்ளுராட்சி சபையொன்றினை வழங்கும்போது, சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக்கென்று குப்பையகற்றும் இயந்திரங்கள், அதற்கான ஆளணிகள், அவர்களுக்கான சம்பளங்கள் என்று ஏராளம் கிடைக்கும். இதனால், தீமைகள் என்று எவையும் ஏற்படப்போவதில்லை.

கல்முனை மாநகரசபையின் அதிகார எல்லையிலிருந்து சாய்ந்தமருதைப் பிரித்து விட்டால், கல்முனை மாநகரசபையில் முஸ்லிம்களின் பெரும்பான்மை இல்லாமல் போய்விடும் என்று, சில முஸ்லிம் அரசியல்வாதிகள் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அப்படியெதுவும் ஆகப்போவதில்லை என்பதுதான் உண்மை நிலைவரமாகும்.

எது எவ்வாறாயினும், அரசியல் சதுரங்க ஆட்டத்தில், யாரின் காயை யார் வெட்டினாலும், சாய்ந்தமருதுக்கான மக்களின் நீண்டநாள் கோரிக்கையான – உள்ளுராட்சி சபையொன்று கிடைப்பதற்குரிய சாத்தியங்கள் அதிகரித்திருக்கிறதென்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.

சாய்ந்தமருது மக்கள் – இந்தச் செய்தியை இனிப்புக் கொடுத்துக் கொண்டாடலாம்.

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்