எகிப்து பள்ளிவாசலில் தற்கொலை குண்டு தாக்குதல்; 235 பேர் பலி: 03 நாட்கள் துக்க தினமாக அரசாங்கம் அறிவிப்பு

🕔 November 24, 2017

கிப்தின் சினாய் மாகாணத்திலுள்ள பள்ளிவாசலொன்றின் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கான நேரத்தின் போது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் ஆகக்குறைந்தது 235 பேர் பலியாகியுள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பள்ளிவாசலுக்கு வந்திருந்த பாதுகாப்புப் படையினரின் ஆதரவாளர்களை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஜும்ஆ தொழுகைக்கு முன்னர் பிரசங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அல் ரவ்தா பள்ளிவாசலில் குண்டு வெடித்ததாகவும், இதில் பாதிக்கப்படாதவர்கள் தப்பி ஓடியபோது, அவர்களை துப்பாக்கிதாரிகள் சுட்டுக் கொன்றதாகவும், உயிர் பிழைத்தவர்கள் கூறியுள்ளனர்.

இந்த தாக்குதலையடுத்து மூன்று நாட்களை துக்க தினமாக எகிப்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை உரிமை கோரவில்லை. ஆயினும், கடந்த காலங்களில் நடைபெற்ற தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எல். எனும் அமைப்பு உரிமை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்