முடிவுக்கு வந்த முகாபே ஆட்சி: காதலுக்கும் நட்புக்கும் இடையிலானதொரு கதை

🕔 November 16, 2017

– மப்றூக் –

லகின் வயதான ஆட்சியாளர் – சிப்பாவேயின் ஜனாதிபதி ரொபட் முகாபே, அந்த நாட்டு ராணுவத்தினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிம்பாவேயின் ஆட்சியை அந்த நாட்டு ராணுவம் நேற்று முன்தினம் கைப்பற்றியது.

இந்த நிலையில், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள முகாபேயுடன் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜகொப் சுமா தொலைபேசி மூலம் நேற்று புதன்கிழமை உரையாடியுள்ளார். இதன்போது, தான் நலமாக உள்ளதாக ரொபட் முகாபே கூறியதாக, தென்னாபிரிக்க ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தனது தூதுவர்கள் இருவரை தென்னாபிரிக்க ஜனாதிபதி, சிம்பாவேக்கு அனுப்பியுள்ளார்.

37 வருடங்களாக சிம்பாவேயை ஆட்சி புரிந்து வரும் ரொபட் முகாபே, தனது  உப ஜனாதிபதி மனன்காக்வேயை கடந்த வாரம் பதவியிலிருந்து நீக்கினார். இதனையடுத்து மனன்காக்வே நாட்டை விட்டும் வெளியேறினார்.

உப ஜனாதிபதி மனன்காக்வேயும், சிம்பாவே ராணுவத் தளபதி சிவன்காவும் நண்பர்களாவர். 1970களில் இவர்கள் இருவரும் – அப்போது தமது நாட்டினை அடிமைப்படுத்தி ஆட்சி புரிந்த சிறுபான்மை வெள்ளையின அரசாங்கத்துக்கு எதிராக போராடியவர்களாவர்.

எனவே, மனன்காக்வே பதவியிலிருந்து நீக்கப்பட்டமையானது, ராணுவத் தளபதி சிவன்காவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்தே ஆட்சிக் கவிழ்ப்பில் ராணுவம் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிம்பாவே ஜனாதிபதி ரொபட் முகாபேயின் மனைவி கிரேஸ், அந்த நாட்டின் ஆளுங்கட்சியில்  – முகாபேக்கு அடுத்த இடத்தினைப் பிடிப்பதற்கு முயற்சித்தார். இதற்குத் தடையாக உப ஜனாதிபதி மனன்காக்வே இருந்தார். அதனால், உப ஜனாதிபதியை பதவி நீக்குமாறு தனது கணவரிடம் கிரேஸ் கோரிக்கை விட, அதனை முகாபே நிறைவேற்றினார்.

93 வயதான ரொபட் முகாபேக்கு, அவருடைய 52 வயதான மனைவி கிரேஸ் மீதுள்ள காதல்தான் இத்தனைக்கும் காரணமாகும் என்றும் கூறப்படுகிறது.

எது எவ்வாறாயினும், அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் முகாபேயின் ஆட்சியை விரும்பவில்லை. அவரை ஒரு சர்வதிகாரியாகவே இந்த நாடுகள் சித்தரித்து வந்தன.

இந்த நிலையில், ரொபர் முகாபேயின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்குப் பின்னணியில், மேற்சொன்ன நாடுகள் இருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்