நேரடி அரசியலில் ஈடுபடப் போவதில்லை; கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் அறிவிப்பு

🕔 August 8, 2015

Jameel - 021
– எம்.வை. அமீர் –

ட்சி மாறுவதற்காக, தான் கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டதாக சிலர் கூறிவருகின்றனர். அப்படி, பணத்துக்காக நான் அணிமாறியிருந்தால் அல்லாஹ் என்னை தண்டிப்பான் என்று, கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், மு.காங்கிரசிலிருந்து – அ.இ.ம.காங்கிரஸ் கட்சிக்கு மாறியவருமான ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வேட்பாளரும், கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிபை ஆதரித்து, சாய்ந்தமருது பொலிவோரியன் திறந்த வெளியரங்கில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பிரச்சாரக்கூட்டத்திலேயே, மேற்கண்டவாறு ஜெமீல் கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருக்கின்ற தலைவரையோ அல்லது அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களையோ பின்பற்றி, நான் அக்கட்சியில் இணைந்து கொள்ளவில்லை.

ஒரு காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய அரசியலைத் தீர்மானிக்கின்ற சக்தியாக இருந்தது. அந்தக் காலத்தில்,  நமது நாட்டில் நிலவிய குழப்பமான சூழ்நிலை காரணமாக, பல்கலைக்கழக கல்வியை நமது மாணவர்கள் தொடர்வதில் பாரிய சிக்கல்கள் இருந்தன.  எனவே, இப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தரக் கூடியவர், மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப்தான் என உணர்ந்ததன் காரணமாகவே, அவருடன் இணைந்து செயற்பட்டு, தென்கிழக்குப் பல்கலைக்கழகம் என்ற பெரிய நிறுவனத்தை உருவாக்கினோம். அப்போது, அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் எனக்க இருந்ததில்லை.

எங்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலும், தற்போது சித்து விளையாட்டைக் காட்ட ஆரம்பித்துள்ளார்கள். அண்மையில் இடம்பெற்ற பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவின்போது,  நமது பிரதேசத்தைச் சேர்ந்த தகுதியானவர்கள் இருவர் இருந்தும், அவர்களை திட்டமிட்டு புறக்கணித்து விட்டு, அவர்களுக்கு வாசியான வெளியூர்காரர் ஒருவரை உபவேந்தராக நியமித்துள்ளார்கள்.

தேர்தல் காலங்களில் மட்டும் நமது பிரதேசங்களுக்கு வந்து, பசப்பு வார்த்தைகளைக் கூறி, வாக்குகளைப் பெற்றுக்கொண்டு, பின்னர் எங்களை நட்டாற்றில் விடும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தற்போதைய தலைமைத்துவத்தையும், அதனோடு ஒட்டிக்கொண்டிருப்பவர்களையும் இன்னும் நாம் ஆதரிக்க வேண்டுமா?

மறைந்த தலைவரைப் போன்று, முஸ்லிம் மக்களின் மீது உண்மையான அக்கறையுடன் செயற்படும் அமைச்சர் றிசாத் போன்ற தலைவர்களை ஆதரிப்பதனூடாக, தலைவர் அஷ்ரப் விட்டுச்சென்ற பணிகளை தொடர முடியும்.

எதிர்காலத்தில் நேரடி அரசியலில் நான் இறங்கப்போவதில்லை. வாக்கு கேட்டு மக்களிடம் வரமாட்டேன். சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபையை, ஸ்ரீலங்கா முஸ்லிம் கங்கிரஸ் பெற்றுத்தராது. சாய்ந்தமருதின் கனவுகளை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுத்தீனால் மட்டுமே உண்மையாக்க முடியும்.

என்னையும் சிராஷையும் பிரித்து வைத்து, சிலர் தங்களது நிகழ்ச்சி நிரல்ளை நிறைவேற்றுகின்றனர். இனிமேல் அது நடக்காது. சாய்ந்தமருதின் அபிவிருத்திக்கு நாங்கள் இணைந்து செயற்படுவோம் என்றார்.Jameel - 023

Comments

புதிது பேஸ்புக் பக்கம்