உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரை, சகல தேர்தல்களிலும் சுயேட்சையில் போட்டி; சாய்ந்தமருது பிரகடனத்தில் தீர்மானம்

🕔 November 1, 2017

– எம்.வை. அமீர் –

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை அரச வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக பிரசுரிக்கப்படும் வரை, சகல தேர்தல்களிலும் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மாப் பள்ளிவாசல்கள் பரிபாலனசபையின் நெறிப்படுத்தலின் கீழ், கட்சி சாராத சுயேட்சைக் குழுவை தேர்தலுக்கு முன்னிறுத்தும் தீர்மானமொன்று இன்று புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.

சாய்ந்தமருது உள்ளுராட்சிசபை கோரிக்கையை முன்வைத்து, மூன்று நாள் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் அதன் இறுதி நாளான இன்று பள்ளிவாசலின் முன் திரண்டிருந்த மக்களின் முன்னிலையில் சாய்ந்தமருது பிரகடனம் மக்களின் தக்பீர் முழக்கத்துடன் வெளியிட்டது.

சாய்ந்தமருது – மாளிகைக்காடு நம்பிக்கையாளர் சபை, உலமா சபை மற்றும் பொது அமைப்புகள் ஒன்றியம் ஆகியவை ஒன்றிணைந்து வெளியிட்ட இந்த பிரகடனத்திலேயே, மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேற்படி பிரகடனத்தை சாய்ந்தமருது உலமாசபையின் தலைவர் அஷ்செய்க் எம்.எஸ்.எம்.சலீம் (ஸர்கி) வசித்தார்.

அந்த பிரகடனத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;

  1. சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபையை பெற்றுக்கொள்வதற்கான அனைத்து வளங்களும், அடிப்படைத் தகுதிகளும் சந்தேகமின்றித் தெளிவாகவே இருக்கின்றன என்பதை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெளிவுபடுத்துகின்றோம்.

  2. சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை அரச வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக பிரசுரிக்கப்படும் வரை, சாய்ந்தமருது – மாளிகைக்காடு எல்லைக்குள் எல்லா அரசியல் கட்சிகளினதும் சகல விதமான கட்சி அரசியல் நடவடிக்கைகளுக்கும் ஆதரவோ ஒத்துழைப்போ வழங்குவதில்லை.

  3. சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை அரச வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக பிரசுரிக்கப்படும் வரை, இதற்குப் பிறகு நடைபெறும் சகல தேர்தல்களிலும் சாய்ந்தமருது – மாளிகைக்காடு பள்ளிவாயல்கள் பரிபாலனசபையின் நெறிப்படுத்தலின் கீழ், கட்சி சாராத சுயேட்சைக் குழுவை தேர்தலுக்கு முன்னிறுத்துதல்.

  4. சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை அரச வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக பிரசுரிக்கப்படும் வரை,  சாய்ந்தமருது – மாளிகைக்காடு எல்லைக்குள் இடம்பெறுகின்ற எந்தவிதமான நிகழ்வுகளுக்கும் கட்சி சார்ந்த உள்ளுர் அரசியல் பிரமுகர்களை அழைக்காதிருத்தல்.

  5. சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை அரச வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக பிரசுரிக்கப்படும் வரை, இப்பிரதேச எல்லைக்குள் எந்தவிதமான கட்சி அரசியல் நடவடிக்கைகளுக்கும், கட்சி செயலகங்களுக்கும் இடமளிக்காதிருத்தல்.

  6. சாய்ந்தமருது மக்களுக்கு நியாயபூர்வமாகக் கிடைக்க வேண்டிய தனியான உள்ளுராட்சி சபைக்கான கோரிக்கையை மழுங்கடிக்கும் விதமாக, நீண்டகாலமாக தீர்க்கமுடியாமல் இருக்கின்ற ஒன்றினை முன்னிலைப்படுத்தி, கல்முனையை நான்காகப் பிரித்தே சாய்ந்தமருதுக்கான தனியான சபை வழங்கப்பட வேண்டும் என்பது நியாயமற்ற கோரிக்கையாகும்.

  7. மேற்படி தீர்மானங்களை மீறும் விதமாகச் செயற்படும், செயற்பட முயற்சிக்கும், அல்லது அவ்வாறு செயற்படுகின்றவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற எமதூரைச் சேர்ந்த அனைவரும் இவ்வூரின் ஜமாஅத் கட்டுப்பாட்டை மீறியவராகக் கருதப்படுவர்.

  8. சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபையை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளை மழுங்கடிக்கும் விதமாக நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த செயற்பாட்டையும் முன்னெடுக்கும் தனிநபர்கள் அனைவரும் துரோகிகளாவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்