எல்லை நிர்ணய குழுவில் அங்கம் வகிக்க, அம்பாறைக்குக் கிடைத்த வாய்ப்பினை, தட்டி விட்ட ஹக்கீமின் துரோகம்

🕔 October 14, 2017

– முன்ஸிப் அஹமட் –

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமை கிழக்கு மாகாண மக்கள், பிரதேச வாதம் பார்க்காமல் 16 வருடங்களாக தலையில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பில், அதுவும் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் குறித்து, ஹக்கீமுக்கு எப்போதும் நல்லபிப்பிராயம் இருந்ததில்லை. கிழக்கைச் சேர்ந்தவர்களை உயரிய இடத்தில் வைத்துப் பார்க்க, மு.கா. தலைவருக்கு விருப்பமில்லை என்பதற்கு பல்வேறு நிகழ்வுகளை உதாரணங்களாகக் கூற முடியும்.

மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேறியமையினை அடுத்து, மாகாண சபைத் தேர்தலுக்கான தொகுதி எல்லை மீள் நிர்ணயக் குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது.

முன்னாள் நில அளவையாளர் நாயகம் கே. தவலிங்கம் தலைமையில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லா, கலாநிதி அனில டயஸ் பண்டார, முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் பி.எம். சிறிவர்த்தன மற்றும் பேராசிரியர் சங்கர விஜய சந்திரன் ஆகியோர் மேற்படி குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்தக் குழுவுக்கு முஸ்லிம்கள் சார்பாக முன்னாள் நீதவான் கலாநிதி ஏ.எல்.ஏ. கபூர் அவர்களின் பெயர்தான் ஆரம்பத்தில் சிபாரிசு செய்யப்பட்டது.

கலாநிதி ஏ.எல்.ஏ. கபூர் – அட்டாளைச்சேனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பாலமுனையில் திருமணம் செய்துள்ளார். சட்டத்துறையில் கலாநிதி படிப்பினை நிறைவு செய்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் சர்ச்சைக்குரிய காணிகள் மற்றும் எல்லைகள் தொடர்பில் சிறந்த அறிவினைக் கொண்டுள்ளார்.

மாகாண சபைத் தேர்தலுக்கான தொகுதி எல்லை மீள் நிர்ணயக் குழுவுக்கு அமைச்சரவையில் வைத்து, கலாநிதி கபூரை முஸ்லிம்கள் சார்பாக உள்ளுராட்சி மற்றும் மாகாண அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆகியோர் சிபாரிசு செய்திருந்தனர். ஆனால், ஹக்கீமுக்கு இது பிடிக்கவில்லை. குறித்த குழுவுக்கு கபூரை நியமிக்கக் கூடாது என்று, ஹக்கீம் மிகவும் ஆக்ரோசமாக கூறி எதிர்த்தார். இதனால், அமைச்சர்களான பைசர் முஸ்தபா, றிசாத் பதியுதீன் ஆகியோருக்கும் ஹக்கீமுக்கும் இடையில் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து இவ்விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட்டு, பேராசிரியர் ஹஸ்புல்லாவை சிபாரிசு செய்திருந்தார். ஜனாதிபதியின் சொல்லைத் தட்ட முடியாமல், பேராசிரியர் ஹஸ்புல்லாவை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.

மேலே கூறிய இந்த விடயம் அநேகமானோருக்கு தெரியாது. இப்போதுதான் வெளியில் கசிந்து வருகிறது. அம்பாறை மாவட்டத்தை தளமாக வைத்து, தனது அரசியலைச் செய்து, அதனூடாக தனக்கும் தனது குடும்பத்தினருக்கும்  கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்துள்ள மு.கா. தலைவர் ஹக்கீம்; அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை, எல்லை மீள் நிர்ணயக் குழுவுக்கு நியமிப்பதை ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றார் என்பது, அம்பாறை மாவட்ட மக்களுக்குச் செய்துள்ள பெரும் துரோகங்களில் ஒன்றாகும்.

ஹக்கீமுடைய இந்த கேவலமான செயற்பாடு இப்போது வெளியில் வரத் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து, ஹக்கீமுக்கு அம்பாறை மாவட்டத்தில் அரசியல் தரகர் வேலை செய்யும் சிலர், இதனை நியாயப்படுத்துவதற்கு முயற்சித்து வருகின்றனர்.

அதாவது, கலாநிதி கபூர் அவர்கள், அமைச்சர் றிசாத் பதியுதீனின் ஆதரவாளர் என்றும், அதனால்தான் குறித்த குழுவுக்கு அவரை நியமிப்பதை, ஹக்கீம் எதிர்த்ததாகவும் மேற்படி அரசியல் தரகர்கள் பிரசாரம் செய்து வருகின்றார்கள்.

இது வேடிக்கையானதொரு பிரசாரமாகும். ஒரு சமூகம் சார்பான தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு,  அச் சமூகத்திலுள்ள புத்தி ஜீவிகளின் உதவிகளை அரசியல்வாதிகள் நாடி நின்றால், குறித்த புத்தி ஜீவிகள் உதவுவது வழமையாகும்.

வில்பத்து பிரச்சினை ஏற்பட்டுள்ளமையினை அடுத்து, அது தொடர்பில் அனைத்துத் தரப்பினருக்கும் தெளிவினை வழங்குவதற்காக, பேராசிரியர் ஹஸ்புல்லாவின் உதவியை அமைச்சர்களான றிசாத் பதியுத்தீன் மற்றும் ரஊப் ஹக்கீம் ஆகிய இருவரும் கோரியிருந்தனர். அதன் போது, இருவருக்காகவும் சமூக நலனை அடிப்படையாகக் கொண்டு பேராசிரியர் ஹஸ்புல்லா தனது உதவியினை வழங்கியிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

இது போலவே, அமைச்சர் றிசாத் பதியுத்தீனுடன் இணைந்து சமூக நலனுக்காக கலாநிதி கபூர் சில வேலைகளைச் செய்திருக்கக் கூடும். அதற்காக, அவரை றிசாத் பதியுத்தீனின் ஆதரவாளர் என்று முத்திரை குத்துவது கேவலமானதொரு செயற்பாடாகும்.

எல்லை மீள் நிர்ணய நடவடிக்கைகளின் போது, கிழக்கு மாகாணத்தில்தான் அதிக சர்ச்சைகளையும், பிரச்சினைகளையும் முஸ்லிம்கள் சந்திக்க வேண்டியிருக்கும். இதன்போது, அந்தக் குழுவில் கிழக்கு மாகாணத்தின் புவியியல் தொடர்பில் சிறந்த அறிவுள்ள ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தால், அது முஸ்லிம் சமூகத்துக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கும்.

அந்த வாய்ப்பினை ரஊப் ஹக்கீம் தட்டி விட்டுள்ளார் என்பதைத்தான் ஜீரணிக்க முடியாமல் உள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்