எதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்

🕔 October 4, 2017

– ஆசிரியர் கருத்து –

சூரியன் எப்.எம். வானொலியின் செய்தி அறிக்கையொன்றில் ரோஹிங்ய அகதிகளை, ‘ரோஹிங்ய எதிரிகள்’ என்று கூறப்பட்டதாகத் தெரிவித்து, முஸ்லிம்களில் ஒரு தொகையினர், சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர் – வருகின்றனர்.

இதனைக் காரணம் காட்டி, சூரியன் வானொலியை புறக்கணியுங்கள் என்று, பேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் போர்க்கொடி தூக்கப்படுவதையும் காணக்கிடைக்கிறது.

இவை அனைத்துக்கும் கிரீடம் வைத்தால் போல், மௌலவி என நம்பப்படும் ஒருவரின் குரல் பதிவொன்று வட்ஸப்பில் உலவி வருகிறது. அதில் அந்த மௌலவி; சூரியன் எப்.எம். வானொலி, முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக நடந்து விட்டதாகத் தெரிவித்து, ஒரு குர்ஆன் வசனத்தையும் கூறி, சூரியன் வானொலியைப் புறக்கணிக்கக் கோரியுள்ளார்.

உண்மையில், விளங்கா மடையர்கள்தான் இத்தனை கூத்துக்களுக்கும் காரணமாகும்.

சூரியனின் செய்தியறிக்கையில் ‘ரோஹிங்ய ஏதிலிகள்’ என்றுதான் கூறப்பட்டது. ‘ஏதிலி’ என்றால், ‘எதுவும் இல்லாதவர்’ என்று பொருள்படும். ஏதிலி என்பது உண்மையில் நல்லதொரு தமிழ் சொல்தான் என்பதில் இரண்டு பட்ட கருத்துக்கள் இல்லை.

ஆனால், இங்கு ஒரு கேள்வி உள்ளது. ஏதிலிகள் என்கிற சொல்லை செய்தியறிக்கையொன்றில் பயன்படுத்துவது உகந்ததா என்பதே அந்தக் கேள்வியாகும்.

ஒரு செய்தியறிக்கையில் பயன்படுத்தப்படும் சொற்கள் சாதாரண புழக்கத்தில் உள்ளவையாக அமைதல் வேண்டும். ‘கொச்சை நீக்கிய பேச்சு வழக்கினை, செய்தியில் பயன்படுத்துங்கள்’ என்று, ஊடகத்துறை வல்லுநர்கள் கூறுவர். அப்போதுதான் சமூகத்திலுள்ள கடைக்கோடி உறுப்பினரும், அந்த செய்தியை விளங்கிக் கொள்ள முடியும்.

ஆனால், இந்த விடயத்தில் சூரியனின் செய்திப் பிரிவினர் தலைகீழாகவே செயற்பட்டு வருகின்றனர். இது – இன்று நேற்றல்ல; பல ஆண்டுகளாக செய்தியறிக்கையில் அகராதிச் சொற்களை மிக வலிந்து அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

கார் என்பதை மகிழூந்து என்றும், பொலிஸ் என்பதை காவல்துறை என்றும், ரயில் என்பதை தொடரூந்து எனவும், ஹெலிகொப்டர் என்பதை உலங்கு வானூர்தி என்றும், சூரியன் வானொலி, தனது செய்தியறிக்கையில் கூறிவருகிறது.

சூரியன் பயன்படுத்தி வரும் – மேலே உள்ள சொற்கள், சாதாரண புழக்கத்தில் உள்ள சொல்களா என்று கேட்டால்; இல்லை.

அகராதிகளை வைத்துக் கொண்டு, பொதுமக்கள் செய்திகளைக் கேட்கவும் முடியாது.

தமிழிலுள்ள அகராதிச் சொற்களை சூரியன் செய்திப் பிரிவு பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பலரும், பல தடவை வேண்டுகோள் விடுத்திருந்த போதும், அதனை சூரியன் செய்திப் பிரிவினர் கணக்கில் எடுக்கவில்லை.

இப்போது, அதற்கான விளைவினை வட்டியும், முதலுமாக சூரியன் செய்திப் பிரிவினர்  வாங்கிக் கட்டியிருக் கொண்டிருக்கிறார்கள்.

ஏதிலி என்கிற சொல்லினை அறியாத கணிசமான மக்களிடம் அந்தச் சொல்லை, தனது செய்தியறிக்கையினூடாக வலிந்து புகுத்த நினைத்த அல்லது மக்களிடம் தமது மேதாவித்தனத்தை காண்பிக்க முயற்சித்த சூரியன் செய்திப் பிரிவினர், இப்போது ‘குய்போ முறையோ’ என்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

மேலும், சூரியன் வானொலிக்கு எதிராக விசமப் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாகவும், அந்த வானொலியின் செய்திப் பிரிவினர் கடந்த சில நாட்களாக அலறிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையாக சூரியனுக்கு எதிரான விசமப் பிரசாரம் என்று, இதில் எதுவுமில்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். மக்களுக்கு பரீட்சயமற்ற சொற்களை திணிக்க முயற்சித்ததால் வந்த வினைதான் இதுவாகும்.

ரோஹிங்ய அகதிகள் என்கிற சொல்லைப் பயன்படுத்தியிருந்தால், இந்தப் பிரச்சினையே வந்திருக்காது.

ஆக, தவறு எங்கிருக்கிறது என்பதை சூரியன் செய்திப் பிரிவினர் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இனியாவது மேதாவித்தனமான சொற்களை செய்தியறிக்கைகளில் பயன்படுத்துவதை சூரியன் வானொலியின் செய்திப் பிரிவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இதில் ஈகோ எதுவும் பார்த்துக் கொண்டிருக்கத் தேவையில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்