காலை உணவுக்காக 15 லட்சம் கேட்டார் அமைச்சர்; முடியாது எனக் கூறி விட்டு, உர நிறுவன தலைவர் ராஜிநாமா
விவசாய அமைச்சின் கீழுள்ள கொழும்பு வர்த்தக உர நிறுவனத்தின் தலைவர் துசித ஹல்லொலுவ, விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் நடத்தைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தனது பதவினை ராஜிநாமா செய்துள்ளார்.
விவசாய அமைச்சின் கீழுள்ள நிறுவனமொன்று ஏற்பாடு செய்த நிகழ்வொன்றின் – காலை உணவுக்கான கட்டணத்தைச் செலுத்துமாறு, விவசாய அமைச்சர் கோரியமையினை நிறைவேற்ற முடியாது எனக் கூறியே, துசித ஹல்லொலுவ ராஜிநாமா செய்துள்ளார்.
குறித்த காலை உணவுக்கான கட்டணமாக 15 லட்சம் ரூபாவினை செலுத்துமாறு, கொழும்பு வர்த்தக உர நிறுவனத்தின் தலைவர் துசித ஹல்லொலுவவுக்கு கூறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுபோன்று, துசித ஹல்லொலுவ தனது கடமைகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு, அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தடையாக இருந்து வந்தார் எனவும் கூறப்படுகிறது.
துசித ஹல்லொலுவ – நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் நெருங்கிய நண்பராவார். இவர், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் செயற்பாட்டுப் பணிப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார்.
இதேவேளை, அமைச்சர் துமிந்த திஸாநாயக்க – ஜனாதிபதி மைத்திரியின் நம்பிக்கைக்குரியவர் என்பதும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.