மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டம்: கலப்பு முறையில் மாற்றம்

🕔 September 21, 2017

மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தில் வேட்பாளர்களின் நியமனமானது தொகுதிவாரியாக 60 வீதமும், வீதாசார ரீதியாக 40 வீதமும் அமைந்திருத்தல் வேண்டும் எனும் நிபந்தனையானது, 50:50 என திருத்தப்பட்டுள்ளதாக, உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம், நேற்று புதன்கிழமை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

இதுவரையில் வீதாசார முறையில் நடைபெற்று வந்த மாகாணசபைகளுக்கான தேர்தலானது, திருத்தம் காரணமாக தொகுதிவாரியும், வீதாசார முறைமையும் கொண்ட, கலப்பு முறைத் தேர்தலாக நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றில் முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் திருத்தச் சட்டமூலத்தில் வேட்பாளர்களின் நியமனமானது தொகுதிவாரியாக 60 வீதமும், வீதாசார ரீதியாக 40 வீதமும் அமைந்திருத்தல் வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்புக்கு முன்னதாக, வேட்பாளர்களின் நியமனமானது தொகுதிவாரியாக 50 வீதமும், வீதாசார ரீதியாக 50 வீதமுமாக இருக்குமாறு மாற்றப்படுதல் வேண்டும் என்று, சிறுபான்மை கட்சிகள் வலியுறுத்தியிருந்தன.

அதற்கிணங்க, இறுதி நேரத்தில் மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தில், 50:50 எனும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்