லலித் மற்றும் அனுஷ ஆகியோரின் பிணை மனு தொடர்பில் விளக்கமளிக்குமாறு, சட்ட மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவு

🕔 September 14, 2017

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு சம்பந்தமாக விளக்கமளிக்குமாறு சட்ட மா அதிபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 20ம் திகதி இது தொடர்பில் நீதிமன்றத்தில் விளக்கமளிக்குமாறு சட்ட மா அதிபருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஜிஹான் குலதுங்க உத்தரவிட்டுள்ளார்.

குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மேற்படி இருவர் மீதான தண்டனைக்கு எதிராக மேன் முறையீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

இதன் காரணமாக அந்த மேன்முறையீட்டு வழக்கு விசாரணைகள் நிறைவடைந்து தீர்ப்பு வரும் வரை, இருவருக்கும் பிணை வழங்குமாறு அவர்கள் சார்பான சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டார்.

முன் வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற் கொண்ட நீதிபதி, அவர்கள் இருவருக்கும் பிணை வழங்குவது சம்பந்தமாக சட்ட மா அதிபரின் நிலைப்பாட்டை எதிர்வரும் 20ம் திகதி நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு சொந்தமான 600 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி, 2015ம் ஆண்டு சில் துணிகளை விநியோகம் செய்தார்கள் என, இவர்களுக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.

அதன்படி, அந்த வழக்கில் இவர்களை குற்றவாளிகள் என நீதிமன்றம் அடையாளம் கண்டமையினை அடுத்து, இருவருக்கும் மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்