ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு கதவுகளைத் திறந்து விடுங்கள், செலவுகளை நாங்கள் பொறுப்பேற்கிறோம்: பங்களாதேஷுக்கு துருக்கி அழைப்பு

🕔 September 2, 2017

மியன்மாரில் நடைபெறும் வன்முறைகளின் காரணமாக ரகைன் மாநிலத்திலிருந்து தப்பியோடும் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு, பங்களாதேஷ் தனது கதவுகளைத் திறந்து விட வேண்டும் என்று, துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லுட் சுவுசோக்லு அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஹஜ் பெருநாள் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இந்த அழைப்பினை அவர் விடுத்தார்.

மேலும் ரோஹிங்ய மக்களுக்காக பங்களாதேஷ் தனது கதவுகளைத் திறப்பதனால் ஏற்படும் செலவுகள் அனைத்தினையும், துருக்கி பொறுப்பேற்கும் என்றும் இதன்போது அவர் உறுதியளித்தார்.

“இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பினை நாங்கள் ஒன்று கூட்டியுள்ளோம். ரகைன் மாநிலம் தொடர்பில் இந்த வருடம் ஒரு மாநாட்டை நடத்தவுள்ளோம். அதன்போது, இந்தப் பிரச்சினைக்கு தீர்க்கமானதும், நிரந்தரமானதுமான முடிவொன்றினை நாங்கள் காண வேண்டியுள்ளது”  என்றும், அமைச்சர்  மெவ்லுட் சுவுசோக்லு மேலும் கூறினார்.

மியன்மாரில் நடக்கும் மனிதப் படுகொலைகளுக்கு எதிராக, துருக்கி – உணர்வுகளை வெளிக்காட்டுவதாகவும், வேறு எந்தவொரு முஸ்லிம் நாடுகளும் இதுபோன்று நடந்து கொள்ளவில்லை எனவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.

உலகில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதில், அமெரிக்காவுக்கு அடுத்ததாக இரண்டாமிடத்தில் துருக்கியே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மியன்மாரில் நடைபெறும் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, துருக்கி ஜனாதிபதி எதுர்கான் இதுவரை 13 முஸ்லிம் நாடுகளின் தலைவர்களுடன் பேசியுள்ளதோடு, தனது கவலையினையும் வெளிப்படுத்தியுள்ளார் எனவும் அமைச்சர் மெவ்லுட் சுவுசோக்லு தெரிவித்தார்.

Comments