நுளம்பை அடித்து படம் பிடித்துப் போட்டவரின், கணக்கை மூடியது டுவிட்டர்

🕔 September 1, 2017
நுளம்பினை அடித்து அதனை படமெடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றிய ஜப்பான் நாட்டு நபரின் டுவிட்டர் கணக்கு, அந்த நிறுவனத்தினால் மூடப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதியன்று தனது டுவிட்டர் கணக்கில், தான் அடித்த நுளம்பின் படத்தை காட்சிப்படுத்தியதோடு, “நான் ஓய்வாக தொலைக்காட்சி பார்க்கும் போது, என்னை கடித்து விட்டு எங்கே போகப் பார்க்கிறாய்? சாவு (உண்மையாகவே நீ ஏற்கனவே செத்து விட்டாய்” எனவும் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், அவருடைய டுவிட்டர் கணக்குக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் உங்களது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து புதிய டுவிட்டர் கணக்கை தொடங்கிய அந்த ஜப்பானியர், அதில்; ‘ஒரு நுளம்பினை நான் கொன்று விட்டதாகக் கூறியமைக்காக எனது டுவிட்டர் கணக்கை முடக்கி விட்டனர். இது வன்முறையா? நுளம்பு பற்றி நான் எழுதிய டுவிட்டர் பதிவு 31,000 தடவை டுவீட் செய்யப்பட்டுள்ளது. சுமார் 27,00 பேர் அதனை லைக் செய்துள்ளனர்’ என பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அமெரிக்க வணிக இதழான போர்சூன் வெளியிட்ட செய்தியில்; ‘பயனர்கள்  தமது பக்கத்தில் பதிவிடும் தவறான மற்றும் பிரச்சனைக்குரிய வார்த்தைகளை கண்டறியும் வழிமுறையை டுவிட்டர் அறிமுகப்படுத்தி உள்ளது. அது ஒரு தானியங்கி செயற்பாடாகும். நாம் தவறான வார்த்தைகளை பதிவிட்டால் அதுவாகவே கண்டுபிடித்து தடை செய்துவிடும்’ என குறிப்பிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்