பொலிஸ் மா அதிபருக்குரிய பண்பு ரீதியான தகுதியினை பூஜித் ஜெயசுந்தர இழந்துள்ளார்: நாமல் விசனம்

🕔 August 18, 2017

ர்வதிகாரப் போக்கில் சாதாரண ஊழியர்களை தாக்கும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கல்கிஸ்சை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசும்போதே, நாடாளுமன்ற உறுப்பினர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, பொலிஸ் திணைக்களத்தில் வைத்து இரண்டு பணியாளர்களை சேர்ட் கொலர்களை பிடித்து தாக்கும் காட்சி சமூக வலைத் தளங்களில் பரவியுள்ளது. இது தொடர்பில்அவருக்கு எதிராக சிறியதொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக அறிய முடியவில்லை.

இது போன்ற செயல்களை கூட்டு எதிரணி செய்திருந்தால் உடனே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். அண்மையில், சிறு பிள்ளையொன்றினை பெண்ணொருவர் தாக்கினார் என்ற காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியமையினை அடுத்து, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. குறித்த பெண்ணுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமாக இருப்பின், பொலிஸ் மா அதிபருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்க முடியாது?

பொலிஸ் மா அதிபர் தாக்க முனைந்த குறித்த ஊழியர்கள் இருவரும் சட்ட ரீதியாக குற்றம் புரிந்திருப்பின், அவர்கள் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். அதனை விடுத்து பொலிஸ் மா அதிபர் சட்டத்தை கையில் எடுத்தமையானது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய செயலல்ல. இவர் பொலிஸ் மா அதிபர் என்ற பதவிக்கான பண்பு ரீதியான தகுதியை இதனூடாக இழந்துள்ளார்.

இதே விடயம் எமது ஆட்சியில் இடம்பெற்றிருந்தால் இதனை நாமே செய்வித்தது போன்று விமர்சித்திருப்பார்கள். எமது ஆட்சியில் இவ்வாறான விடயங்களுக்கு நாம் இடம் கொடுக்காமல் மிகக்கடுமையாக இருந்ததால் எம்மை சர்வதிகாரிகளாக விமர்சித்தார்கள். தேவையில்லாமல் அப்பாவிகளிடத்தில் அதிகார பலத்தை காட்டுவதே சர்வதிகாரமாகும்.

இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் தைரியம் இவ் அரசாங்கத்துக்கு இருப்பதாக நான் கருதவில்லை. இச்செயலினூடாக பொலிஸ் மா அதிபர் தனக்கு கீழ் உள்ள ஏனைய அதிகாரிகளுக்கும் தவறான முன்மாதிரியை வழங்கியுள்ளார்.

இவருக்கு வழங்கப்படும் தண்டனை ஏனையோருக்கு பாடமாக அமைய வேண்டும். எனவே, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர, குறித்த இரு பணியாளர்களிடம் மன்னிப்பு கேட்பதோடு பொலிஸ் மா அதிபர்பதவியில் இருந்து அகற்றப்படல் வேண்டும்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்