மஹிந்த காலத்து மோசடிகள் தொடர்பில், அமைச்சரவையில் வாதம்; மக்களை எதிர்கொள்ள முடியாதுள்ளதாகவும் தெரிவிப்பு

🕔 August 16, 2017

ஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடி தொடர்பாக நேற்று செவ்வாய்கிழமை இடம் பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, அங்கு வாதங்களும், பதட்டமான சூழ்நிலையும் நிலவியதாகத் தெரியவருகிறது.

கடந்த அரசாங்கத்தில் நடைபெற்ற ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில், அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறி விட்டதாக, பல அமைச்சர்கள் இதன்போது குற்றம் சாட்டினர்.

அமைச்சர் ஜயவிக்ரம பெரேரா இங்கு  கூறுகையில்; விரைவில் தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும், தற்போதைய நிலையில் தம்மால் மக்களை எதிர்கொள்ள முடியாததொரு நிலை உள்ளதாகவும் குறிப்பிட்டார். கடந்த ஆட்சியில் நடைபெற்ற மோசடிகள் தொடர்பில் இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்படாமையே, இதற்கான காரணமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, உடனடியாக கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க, மங்கள சமரவீர மற்றும் சரத் பொன்சேகா உள்ளிட்டோரும் இந்த விவகாரம் தொடர்பில் பேசினர்.

கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பிரத்தியேக நீதிமன்றம் ஒன்றை உருவாக்க வேண்டுமெனவும் அவர்கள் இதன்போது வேண்டிக் கொண்டனர்.

கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல், மோசடி தொடர்பான விசாரணைகள் குறித்து, அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் ஜனாதிபதி இதன்போது வினவினார். அதற்கு அமைச்சர் சாகல பதிலளிக்கையில்; விசாரணைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகக் கூறினார்.

இதன்போது அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ கூறுகையில்; பிரத்தியேக நீதிமன்றம் ஒன்றை நிறுவுவதாயின் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கோள்ள வேண்டுமென்று, தன்னிடம் சட்ட மா அதிபர் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்