அடித்துப் பழக்கப்பட்ட எருதுகளில்லை நாம்; 20ஆவது திருத்தத்தை எதிர்க்கத் திரளுமாறு, பசீர் சேகுதாவூத் அழைப்பு

🕔 August 10, 2017

– முன்ஸிப் அஹமட் –

ரசியலமைப்பில் கொண்டுவரப்படவுள்ள இருபதாவது திருத்தச் சட்டமூலத்தை உள்ளும் புறமும் எதிர்க்கத் தயாராகுமாறு, தூய முஸ்லிம் காங்கிரசின் பிரமுகரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் அழைப்பு விடுத்துள்ளார்.

மேற்படி 20ஆவது திருத்தச் சட்ட மூலமானது, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம், சிறுபான்மையினருக்குக் கிடைத்த அற்ப அதிகாரத்தையும் அபகரிக்கும் திட்டமாகும் எனத் தெரிவித்துள்ள பசீர் சேகுதாவூத்; இந்த திட்டத்தை அடியோடு வேரறுக்க ஒன்றுபடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை ஒரே நாளில் நடத்துதல் மற்றும் மாகாண சபைகளைக் கலைக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்குதல் போன்ற விடயங்களை அரசியலமைப்பில் ஏற்படுத்தும் பொருட்டு, 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தினை அரசாங்கம் கொண்டுவந்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்ட அழைப்பினை பசீர் விடுத்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

“சிறுபான்மை மக்களே, மக்கள் பிரதிநிதிகளே; 1987 இல் கிடைத்ததை நிராகரித்ததன் விளைவுதான் இவ்வளவு கால அழிவும்; ஆக்கமுமாகும்.

வண்டில்களில் நம்மை கட்டி, மீண்டும் 1987 ஆம் ஆண்டுக்குப் பின்னுள்ள காலத்தை நோக்கி இழுத்துச் செல்வதற்கு, நாம் அடித்துப் பழக்கப்பட்ட எருதுகளில்லை.

எனவே, நமது இலக்கைத் தடுக்கின்ற அரசாங்கத்தின் உலக்கையை உடைக்க வேண்டும். இலக்கு என்பது பின்னோக்கியதல்ல; முன்னோக்கியதாகும்.

தமிழர்களே, முஸ்லிம்களே; நமது ஒற்றுமை எனும் நெம்புகோலை
உயர்த்திப் பிடிப்போம் வாருங்கள். தேவைப்பட்டால், இரு இனங்களின் அரசியல் தலைவர்களையும் களைந்து விட்டாயினும், மக்கள் ஒன்று திரள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும், தற்போதைய நிலையினை மதியால் வெல்ல வேண்டும் என்றும், இந்தத் துயரமான நிலையினை துணிந்து  களைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்