மத்திய அரசின் கைகளுக்குள் சிக்கப் போகும் சுக்கான்; அடிமையாகப் போகின்றன மாகாண சபைகள்: விளக்குகிறார் வை.எல்.எஸ். ஹமீட்

🕔 August 6, 2017

– எஸ். அஷ்ரப்கான் –

ரசியலமைப்பின் உத்தேச 20 வது திருத்தத்தின்படி, மாகாண சபைகள் – மத்திய அரசின் அடிமையாகி விடும் என்று வை.எல்.எஸ். ஹமீட்தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகளின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தத்துக்கான சட்டமூல வரைபு, ’20வதுஅரசியலமைப்புத் திருத்தம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக ஊகங்களுக்கு வெளியிட்டுள்ளஅறிக்கையிலே வை.எல்.எஸ். ஹமீட் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்;

இத்திருத்தத்துக்கான வரைபின் சரத்துக்கள் சுருக்கமாக 154DD:

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் புதிதாக உட்புகுத்தப்படவுள்ள இச்சரத்து மூன்று அம்சங்களைக் கொண்டிருக்கின்றது.

01) சகல மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தல் நடத்தப்படல் வேண்டும்.

02) சகல மாகாண சபைகளும் கலைக்கப்படும் திகதி, நாடாளுமன்றத்தினால் தீர்மானிக்கப்படும்.

03) அத்திகதி இறுதியாகத் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபையின் பதவிக்கால முடிவுத் திக்குப் பின்னராக இருக்கக் கூடாது. (அதாவது இறுதியாக ஊவா மாகாணசபைத் தேர்தல் 2014, செப்டம்பர் 20ம் திகதி நடைபெற்றது. எனவே அதன் பதவிக்காலத்துக்கு பிந்தியதாக இருக்கக் கூடாது)

154E: தற்போதைய இச்சரத்தின்படி, ஒரு மாகாண சபையின் ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவடைந்ததும் அது (தாமாக) கலைந்ததாக கருதப்படும். இது, ‘நாடாளுமன்றத்தினால் குறித்துரைக்கப்படுகின்ற திகதியில் கலைந்ததாக கருதப்படும்’ என்று திருத்தப்படுகிறது.

154(A): புதிதாக உட்புகுத்தப்படுகின்ற இந்த உப பிரிவு, ‘ குறித்த திகதிக்கு முன்னால் முடிவடைகின்ற மாகாண சபைகளின்பதவிக்காலம் நாடாளுமன்றத்தினால் குறிப்பிடப்படுகின்ற அத்திகதி வரை நீடிக்கப்பட்டதாக கருதப்படும்; என்று கூறுகின்றது.

அதாவது, கிழக்கு மாகாணத்தின் பதவிக்காலம் அடுத்தமாதம் (செப்டம்பர்) முடிவடைகிறது. ஊவா மாகாணத்தின் பதவிக்காலம் 2019 செப்டம்பரில்/ஒக்டோபரில் முடிவடைகிறது. இத்திகதிக்கு பிற்படாமல் நாடாளுமன்றம் தீர்மானிக்கின்ற திகதி வரை முதலமைச்சரும், அமைச்சர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் பதவியில் தொடர்வார்கள்.

இதன் உப பிரிவு (B) இன் பிரகாரம், ஒரு மாகாண சபையின் பதவிக்கால முடிவுக்கு முன்னர், அக்குறித்த திகதி அமையுமாயின், அத் திகதியில் அம்மாகாண சபை கலைந்ததாக கருதப்படும். உதாரணமாக நாடாளுமன்றத்தினால் தீர்மானிக்கப்படும் அத்திகதி 2018ல் ஒரு திகதியாயின் அத்திகதியில் ஊவா மாகாணசபையும் கலைந்ததாக கருதப்படும்.

நமது நாட்டில் வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியே உள்ள மாகாணசபைகளைப் பொறுத்தவரை, மத்தியில் ஆட்சியில் உள்ள ஒரு கட்சியே மாகாண ஆட்சியையும் கைப்பற்றுவது வழமை. இந்நிலையில் மத்திய அரசாங்கம் மாறினால் அவ்வரசாங்கம் அனைத்து மாகாண சபைகளையும் நாடாளுமன்றத்தால் ஒரு திகதியைக் குறிப்பிட்டு கலைத்துவிட முடியும். இந்நிலையில் சமஷ்டி கோருகின்ற த. தே. கூட்டமைப்போ அல்லது பெரும்பாலான மாகாண சபைகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற கூட்டு எதிரணியோ இத்திருத்தத்துக்கு ஆதரவளிக்குமா?

ஜனநாயகமும் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை கலைப்பும்

154B (8)(C) இன் பிரகாரம் ஒரு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவடைய முன்னர், அம்மாகாண சபையை ஆளுநர் கலைக்கலாம். ஆனால் அதன் உப பிரிவு (D) யின் பிரகாரம், முதலமைச்சரின் சம்மதம் தேவை. அவரின் சம்மதமின்றி கலைக்கவே முடியாது. இதற்குரிய புதிய திருத்தம் பின்வருமாறு கூறுகின்றது; ‘மேற்படி (C) உப பிரிவின் காரணமாகவோ அல்லது ஏதாவதொரு சட்டத்தில் குறித்துரைக்கப்பட்ட வேறு ஏதாவதொரு காரணமாகவோ ஒரு மாகாணசபை, அதன்பதவிக்காலம் முடிய முன்னர் கலைக்கப்பட்டால், அதன் அதிகாரம் நாடாளுமன்றத்தினால் செயற்படுத்தப்படும். இவ்வதிகாரத்திற்கு தற்போதைய 154 L, 154 M ஆகிய சரத்துக்களை பொருத்தமான விதத்தில் பிரயோகிக்கலாம் அல்லது செல்லுபடியாகும்.

இத்திருத்தம் உண்மையில் கூறுவதென்ன?

இங்கு இரண்டு விடயங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒன்று, முதலமைச்சரின் சம்மதத்துடன் கலைத்தாலும் தேர்தல் நடத்தாமல், மாகாண சபையை அரசியலமைப்புச் சட்டத்துக்கு அமைவாக கொண்டு நடத்த முடியாத ஒரு விசேட சூழ்நிலையில் (வட-கிழக்கு மாகாண சபைக்கு அன்று ஏற்பட்டதுபோன்று) பயன்படுத்துகின்ற அதிகாரத்தின் கீழ் (154 L, 154 M) நிர்வகிக்கப்படும்.

அடுத்தது, ‘எந்த ஒரு சட்டத்திலாவது குறிப்பிடப்பட்ட வேறு ஏதாவதொரு காரணத்துக்காக கலைக்கப்பட்டாலும், மேற்சொன்னது போன்றே நிர்வாகம் செய்யப்படும். அதாவது இவ்விரண்டு சூழ்நிலைகளிலும் நடைமுறையில் ஆளுநரால் நிர்வகிக்கப்படும்.

இங்கு எழுகின்ற பிரதான கேள்வி,’ஏதாவது ஒரு சட்டத்தில் குறிப்பிடப்பட்ட வேறு ஏதாவது ஒரு காரணத்தினால் கலைக்கப்பட்டாலும்’ (or by any other reason specified in any law)  என்ற சொற்றொடர் உள்வாங்கப்பட்டதன் ‘நோக்கம்’ என்ன?

தற்போதைய சட்டத்தின் கீழ், ஒரேயொரு சந்தர்ப்பத்தில் மாத்திரம்தான் மாகாண சபை கலைக்கப்படும்; அதுவும் ஆளுநரால். அதுதான் 154 B (8) (C) மற்றும் (D) இன் கீழ் முதலமைச்சரின் சம்மதத்துடன் கலைப்பது. முதலமைச்சரிடம் பெரும்பான்மை இல்லாவிட்டால், அவருடைய சம்மதம் இல்லாமலும் கலைக்கலாம் என்ற கருத்தும் அங்கு தொக்கி நிற்கின்றது என்பதும்உண்மையாகும். ஆனாலும் அதுவும் 154 B (8) (C)யின் பிரகாரம்தான். எனவே, குறித்த சரத்துக்குள் அது அடங்கிவிடுகிறது.

அவ்வாறாயின் அம்மேலதிக சொற்றொடர் (ஏதாவதொரு சட்டத்தில் குறிப்பிடப்பட்ட வேறு ஏதாவது ஒரு காரணத்திற்காக) ஏன்உள்வாங்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறான காரணங்கள் எவை? அவ்வாறான காரணங்கள் இருந்தால், யாரால் மாகாண சபைகலைக்கப்படும். ‘ஏதாவது சட்டம்’ என்று 13 வது திருத்தத்தைத் தவிர, அவ்வாறு மாகாண சபையைக் கலைப்பதற்கு வேறுஎன்ன சட்டம் இருக்கின்றது? இதுவரை எந்த ஒரு ஏற்பாடும், வேறு எந்த ஒரு சட்டத்திலும் இல்லை.

அடுத்த இரண்டு சூழ்நிலைகள். ஒன்று – மாகாணசபை அதிகாரத்தை ஜனாதிபதி தம்வசப்படுத்துவது (154 L). இங்கு மாகாண சபை கலைக்கப்படுவதில்லை. அதே நேரம் அதற்கான ஏற்பாடு ஏற்கனவே இருக்கின்றது. அதன் சரத்துக்களே இப்புதிய சூழலுக்கும் பாவிக்கப்பட இருக்கின்றது. அதுவும் 13வது திருத்தத்திலேயே இருக்கின்றது. எனவே ‘ஏதாவதொரு சட்டம்’ என்பது இதனைக் குறிக்கவில்லை என்பது தெளிவாகும்.

‘பதவிக்காலம் முடிந்து மாகாணசபை கலைதல்’ இதுவும் ‘ஏதாவதொரு சட்டத்தில் உள்ள வேறு ஏதாவது காரணம்’ என்ற பதத்திற்குள் உள்வாங்கப்படவில்லை என்பது தெளிவு. ஏனெனில் புதிய திருத்தத்தின்படி ‘பதவிக்காலம் முடிந்து மாகாணசபை கலைதல்’ என்பது, நாடாளுமன்றத்தால் குறிக்கப்படும் திகதிவரை நடைபெறாது. ஏனெனில், அத்திகதி வரை மாகாண சபையின்பதவிக்காலம் நீடிக்கப்பட்டதாக கருதப்படும். நாடாளுமன்றத்தால் குறிக்கப்பட்ட திகதியில், மாகாண சபைகள் கலைந்ததும் புதிய திருத்தத்தின்படி தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். எனவே அதுவும் குறித்த சொற்றொடருக்குள் உள்வாங்கப்படவில்லை.

அவ்வாறாயின் ‘ஏதாவதொரு சட்டத்தில் குறிப்பிடப்பட்ட வேறு ஏதாவதொரு காரணத்துக்காக கலைத்தல், அதை நாடாளுமன்றத்தின் கீழ் கொண்டுவருதல், அதற்கு 154 L, 154 M செல்லுபடியாதல் (அதாவது முன்கூறப்பட்டது போல், நடைமுறையில் ஆளுநர் ஆட்சி) இதன் பொருளென்ன?

குறித்த சொற்றொடரில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன.
1) ஏதாவதொரு சட்டத்தில். 
2) குறிப்பிடப்பட்ட வேறு ஏதாவதொரு காரணத்துக்காக.

அவ்வாறான, வேறு சட்டம் இதுவரை இல்லாததினால் இனிமேல்தான் அந்த சட்டம் ஆக்கப்படப் போகின்றது என்பது ஊகிக்கக் கூடியது. அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையில்லை. சாதாரண பெரும்பான்மை போதும். ஏனெனில் அங்கு பாவிக்கப்பட்டிருக்கின்ற சொல் ‘ Law’ (சட்டம்) என்பதாகும். இது நாடாளுமன்றத்தால் ஆக்கப்படுகின்ற எந்த சட்டத்தையும் குறிக்கும்.

‘குறிப்பிடப்பட்ட வேறு ஏதாவதொரு காரணத்துக்காக’: அவ்வாறான வேறு ஒரு காரணம், வேறு எந்த சட்டத்திலும் குறிப்பிடப்படவில்லை. எனவே இனிமேல்தான் காரணம் கண்டுபிடிக்கப்பட்டு, அல்லது சிருஷ்டிக்கப்பட்டு புதிய சட்டத்தில் உள்வாங்கப்படவேண்டும்.

அதாவது மாகாணசபைத் தேர்தலுக்கான திகதியை நாடாளுமன்றம் 2019 ம் ஆண்டில் ஒரு திகதியாக நிர்ணயித்தால், அதுவரை சகல மாகாணசபைகளும் இயங்கும். அதே நேரம், இன்று பல மாகாணசபைகள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. கலைப்பதற்கு முதலமைச்சர்களும் விரும்ப மாட்டார்கள். எந்த முதலமைச்சர் கலைக்க சம்மதம் கொடுத்துவிட்டு வீட்டுக்கு செல்ல விரும்புவார். ஏனெனில் நாடாளுமன்றத்தால் குறிக்கப்பட்ட திகதி வரும்வரை தேர்தல் நாடத்த முடியாது. அதே நேரம், இன்றைய நிலையில் மொத்த மாகாணசபைகளையும் கலைத்துவிட்டு, புதிய தேர்தல் நடத்துகின்ற தைரியம் அரசாங்கத்துக்கு இல்லை. உள்ளூராட்சித் தேர்தலையே நடத்த முடியாமல் தத்தளிக்கின்றது. இந்நிலையில் தன் கட்டுப்பாட்டில் இல்லாத மாகாணசபைகளைக் கலைத்து ஆளுநரின் கீழ் கொண்டுவருவதற்கு அல்லது கலைப்பு பயத்தைக் காட்டி அம்மாகாண சபை முதலைமைச்சர்களையும் ஏனையவர்களையும் அசாங்கம் தம் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு, இந்த உத்தேச 20வது திருத்தச் சட்டம் வழிசெய்யும். அதற்குரிய ‘களமாகவே’ ‘ஏதாவதொரு சட்டத்தில் குறிப்பிடப்பட்ட வேறு ஏதாவதொரு காரணத்திற்காக கலைத்தல்/கலைதல் இடம்பெற்றாலும், அது ‘நாடாளுமன்றத்தின் கீழ் நிர்வகிக்கப்படும்’ என்ற சொற்றொடர் புகுத்தப்படுகின்றது.

இச்சொற்றொடர் மிகவும் கவனமாக கையாளப்பட்டிருக்கின்றது. ‘யாரால் கலைக்கப்படும் என்று குறிப்புடப்படவுமில்லை. அதேநேரம், கலைத்தலுக்கும், கலைதலுக்கும் பொருந்தக்கூடிய விதத்தில் ‘in the event of dissolution’ என்று மிகவும் கவனமாக சொற்கள் கையாளப்பட்டிருக்கின்றன.

எனவே, குறித்த அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால், அதன்பின் வேண்டிய ஒரு சாதாரண சட்டத்தைக் கொண்டுவரலாம். அதில் ஆளுநருக்கு, குறித்த காரணங்களுக்காக கலைக்கின்ற அதிகாரத்தை வழங்கலாம். அல்லது ஜனாதிபதியோ, மாகாணசபைகள் அமைச்சரோ, குறித்த காரணங்கள் நிகழ்ந்திருப்பதால் குறித்த மாகாணசபைகள் தாமாக கலைந்து விட்டதாக வர்த்மானிப் பிரகடனம் செய்வதற்குரிய சரத்து உள்வாங்கப்படலாம். சுருங்கக் கூறின் இத்திருத்தம் நிறைவேறினால், எதிர்காலத்தில் மாகாணசபைகளின் ‘சுக்கான்’, மத்திய அரசின் கைகளுக்குள் வந்து விடும். பிறகு வேண்டிய விதத்தில் ஆட்டுவிக்கலாம்.

இவ்வாறான ஒரு திருத்தத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்குமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இச்சட்டமூலத்தை உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்தல்

இச்சட்டமூலம், அரசியலமைப்பின் மூன்றாவது சரத்தில் குறிப்பிடப்பட்ட வாக்குரிமையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அதே நேரம், இது ஒரு பாரிய ஜனநாயகப் படுகொலையாகவும் அமைகின்றது. ஐந்து வருடங்களுக்கு மாத்திரம் மக்கள் ஆணைகொடுக்க, அதன் ஆயுட்காலம் மக்களின் சம்மதமில்லாமல் நீடிக்கப்படுகின்றது அல்லது குறைக்கப்படுகின்றது அல்லது பறிக்கப்படுகின்றது.

‘ஜனநாயகம் என்ற சொல், நீதிமன்றினூடாக அமுல்படுத்தக் கூடிய உரிமை எதனையும் வழங்குவதில்லை. மாறாக, சட்டத்தை வியாக்கியானப் படுத்துவதற்கு அது துணைபுரியும். அதேநேரம் ‘ இறைமை’ என்ற சொல், சட்ட நியாயாதிக்கம் செய்யக் கூடியது. சரத்து மூன்று, ‘இறைமை’ மக்களுக்குரியது. ‘வாக்குரிமை’யை அது உள்ளடக்குகின்றது என்று கூறுகின்றது. இதில் ஏதாவது மாற்றம் செய்வதற்கு சர்வஜன வாக்குரிமையூடாக மக்களிடம் அனுமதி பெறவேண்டும். எனவே, இங்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வாதிடலாம்.

மறுபுறம் மாகாணசபை முறைமையையே மக்களின் அனுமதி பெறாமல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் மாற்றுவதற்கு ஏற்பாடு இருக்கின்றது. அதை உயர்நீதிமன்றமும் ஏற்றிருக்கின்றது. அதாவது, மாகாணசபை முறைமையை நீக்கி, மாகாணசபைத் தேர்தலில் வாக்களிக்கின்ற சந்தர்ப்பத்தையே இல்லாமல் ஆக்கலாம். அவ்வாறாயின் இம்மாற்றத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படுமா? பெரும்பாலும் சர்வஜன வாக்கெடுப்புத் தேவைப்படாது.

இங்கு இருக்கின்ற ஒரேயொரு கேள்வி, அவ்வாறான ஒரு சட்ட ஏற்பாடு இருந்து அதனைத் தெரிந்து கொண்டு மக்கள் வாக்களித்து, அதன்பின் அவ்வாறு பதவிக் காலத்தை நீட்டலாம். அதாவது எதிர்காலத்தில் வேண்டுமானால், அவ்வாறு செய்யலாம். ஏற்கனவே ஐந்து வருடங்களுக்கு அவ்வாறான ஏற்பாடு எதுவுமில்லாத நிலையில், மக்கள் ஆணையை பெற்றுவிட்டு, அந்த மாகாணசபையின் பதவிக்காலத்தை எவ்வாறு நீட்டலாம் என்பதாகும்.

இவ்வாறான கேள்வி எழுப்பப்பட்டால், சிலவேளை மாகாணசபையின் பதவிக்காலத்தை இம்முறை நீடிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்புத் தேவை, ஆனால் தேர்தலை ஒத்திவைக்க (ஆளுநரின் கீழ் மாகாணசபை) சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை என்ற நிலைப்பாடும் வரலாம். எனவே, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்