‘கான்ஸ்’ விருதினை ‘தீபன்’ வென்றது

🕔 May 25, 2015

Dheepan movie 2பிரான்ஸை சேர்ந்த இயக்குநர் ஜாக்கஸ் அடியார்ட் (Jacques Audiard) இயக்கிய ‘தீபன்’ என்ற திரைப்படம், கான்ஸ் (Cannes) விழாவின் சிறந்த திரைப்படத்துக்கான உயரிய விருதை வென்றுள்ளது.

இலங்கை உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிக்கும் முன்னாள் ராணுவ வீரன், ஓர் இளம்பெண் மற்றும் ஒரு சிறுமி மூவரும் பாரீஸில் தஞ்சமடைய ஒரு குடும்பமாக நடிக்க முற்படுகின்றனர். மூவரும் இணைந்து புதியதொரு வாழ்க்கையைத் துவங்க முயற்சிப்பதே ‘தீபன்’ திரைப்படத்தின் கதை.

இதில் முதன்மை கதாபாத்திரங்கள் மூவருமே பெரும்பாலும் தமிழிலேயே பேசுவது போல படம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக அரங்கில் மிக உயரியதாக கருதப்படும் – கான்ஸ் (Cannes) திரைப்பட விழாவில் வழங்கப்படுகின்ற தங்கப் பனை விருதை ‘தீபன்’ படம் வென்றுள்ளமையானது, இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இம்முறை சிறந்த திரைப்படத்துக்கான விருதுக்கு 19 திரைப்படங்கள் போட்டியிட்டன.

‘தீபன்’ படத்தின் இயக்குநர் அடியார்ட், இதற்கு முன் மூன்று முறை கான்ஸ் விழாவில் போட்டியிட்டுள்ளார். 1996-ஆம் ஆண்டு ‘எ செல்ஃப் மேட் ஹீரோ’ (A Self made Hero) திரைப்படத்துக்காக – சிறந்த திரைக்கதைக்குரிய விருதினை வென்றிருந்தார். 2009-ஆம் ஆண்டு ‘பிராஃபட்’ (Prophet) படத்துக்காக நடுவர்கள் தேர்வு சிறப்புப் பரிசை பெற்றார்.

‘தீபன்’ திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில்  – இலங்கைத் தமிழரான, தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்ட ஷோபா சக்தி நடித்துள்ளார்.Dheepan movie

Comments

புதிது பேஸ்புக் பக்கம்