பெற்றோல் டேங்கர் விபத்தில் ஏற்பட்ட தீயில் கருகி, 140 பேர் பலி: பாகிஸ்தானில் சோகம்

🕔 June 25, 2017

பெற்றோல் ஏற்றிக் கொண்டு பயணித்த டேங்கர் புரண்டு விபத்துக்குள்ளான போது ஏற்பட்ட தீயில் சிக்கி, ஆகக்குறைந்தது 140 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து பாகிஸ்தானில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றது.

குறித்த டேங்கர், கராச்சியிலிருந்து லாஹுருக்கு செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

டேங்கர் புரண்டபோது, அதிலிருந்து வெளியேறிய பெற்றோலை சேகரிப்பதற்காக கூடியவர்களே தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

டேங்கரிலிருந்து வெளியான பெற்றோலினை சேகரிப்பதற்காக மக்கள் ஒன்று கூடியிருந்த போது, பெற்றோலின் அருகிலிருந்து  நபரொருவர் சிகரட் புகைக்க முயற்சித்ததாகவும், அதன்போதே தீப் பற்றிக் கொண்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

விபத்துக்குள்ளான டேங்கரில் இருந்து 50 ஆயிரம் லீட்டர் பெற்றோல் வெளியேறிப் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தீ விபத்தில் காயமடைந்த 100 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீயில் கருகி உயிரழந்தவர்களில் கணிசமானோரை அடையாளம் காண முடியாதிருப்பதாகத் தெரிவித்த அதிகாரியொருவர், டி.என்.ஏ. பரிசோதனை மூலமாகவே அவர்களை அடையாளம் காண வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்போது, 06 கார்களும், 12 மோட்டார் சைக்கிள்களும் எரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரும் துயரமென, அரசாங்க அதிகாரியொருவர் இந்த விபத்தை விபரித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்