ஞானசார தேரரை பொலிஸார் பாதுகாக்கின்றனர்; சந்தேகம் எழுவதாக குற்றச்சாட்டு

🕔 June 20, 2017

ஞானசார தேரரை பொலிசார் பாதுகாக்கின்றார்களா என்ற அச்சம் எழுவதாக பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் அண்மைக்கால செயற்பாடுகளை அவதானிக்கின்ற போது, இந்த சந்தேகம் எழுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

இலங்கையில் முஸ்லிம்கள் மீது அண்மைக் காலமாக மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல் சம்பவங்களை,  அமெரிக்கா போன்ற வல்லரசு உட்பட உலக நாடுகள் கண்டிக்குமளவுக்கு நிலைமை சென்றுள்ளது.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் முஸ்லிம்கள் மீது அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களை, மிகச் சிறிய விடயம் எனக் கூறியுள்ளார். இவ்வாறு இவர் கூறுவதன் மூலம், முஸ்லிம்களுக்கு இலங்கையில் இடம்பெற்ற அநீதிகளை ஒரு பொருட்டாகவே கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

அதேபோன்று, ஞானசார தேரரின் பின்னால் அமைச்சர்கள்  ஒழிந்துள்ளார்கள் என்கிற கூற்றுக்கள் அரசியல் நோக்கம் கொண்டதாக இருக்கலாம் என, பிரதி பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார். இதன் மூலம், குற்றம் சாட்டுபவர்களை விசாரணை செய்யும் நோக்கம், அவருக்கு இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.

இவ்வாறு குற்றச் சாட்டுக்களை முன் வைப்பவர்கள் முதலில் விசாரணை செய்யப்பட வேண்டும். அதன் பிறகே பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்தாலும் சரி  இது தொடர்பான விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவது சிறந்ததாகும். அவ்வாறில்லாமல் விசாரணைகள் எதுவுமின்றி இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது கண்டிக்கத்தக்கதாகும்.

இவ்வாறான குற்றச் சாட்டுக்களை இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள் முன் வைத்துள்ளனர். இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள், ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டிருப்பது, சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் விடயமல்ல.  அவ்வாறு இருக்கையில், இவ்விடயம் தொடர்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் இவ்வாறு கூறுவது, இவ்விடயத்தில் அவருடைய  அலட்சியப்போக்கை எடுத்துக்காட்டுகிறது.

இலங்கை அரசியல்வாதிகள் ஒருவரையொருவர் குற்றம் சுமத்தி விளையாட, இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வாழ்வு அவர்களுக்கு விளையாட்டுப்பொருளல்ல. இவர்கள் இது விடயத்தில் அவ்வாறு கூறுவது,  அரசியல் நோக்கம் கொண்டதென்றால் இதன் பிறகு அவர்களின் எந்தப் பேச்சையும் நம்பக்கூடாதென, இவ் அறிவிப்பை விடுத்த பிரதி பொலிஸ் மா அதிபர், மேலுமொரு அறிவிப்பையும் விடுக்க வேண்டும்.

ஞானசார தேரர் தொடர்பில் பொது மக்களின் உதவியை பொலிசார் நாடினார்கள். நீதி அமைச்சர் விஜய தாசபக்ஸவின் நெருங்கிய ஒருவராக தன்னை அடையாளப்படுத்திய நபர், “ஞானசார தேரரின் பின்னால், நீதி அமைச்சர் விஜய தாசபக்ஸ உள்ளார்” என்ற விடயத்தை பகிரங்கமாக கூறியுள்ளார். ஆனால், இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அப்படி என்றால் எதற்காக பொலிசார் மக்களை நாடினார்கள்?

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments