ஞானசாரரின் உயிருக்கு அச்சுறுத்தலாம்; மூன்றாவது தடவையாகவும் ஆஜராகாமல் தவிர்ந்தார்

🕔 June 12, 2017

ஞானசார தேரரை இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன் முறையீட்டு நிதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தபோதிலும், அவர் ஆஜராகவில்லை.

ஏற்கனவே, இரண்டு தடவை நீதிமன்றுக்கு வருகை தராத நிலையில், இன்று மூன்றாவது தடவையாவும் அவர் நீதிமன்றத்துக்கு வருகை தராமல் நழுவியுள்ளார்.

சுகயீனம் காரணமாக ஞானசார தேரருக்கு நீதிமன்றில் ஆஜராக முடியவில்லை என, ஏற்கனவே இரண்டு தடவையும் அவரின் சட்டத்தரணி தெரிவித்திருந்த நிலையில், தற்போது உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஞானசார தேரருக்க நீதிமன்றல் ஆஜராக முடியாமலுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இன்றைய தினம் குற்றச்சாட்டு பத்திரத்தை சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

ஆயினும், ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, அவர் சார்பில் சட்டத்தரணியொருவர் முன்னிலையாகியிருந்தார்.

தேரரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதனால், தேரரால் இன்றும் நீதிமன்றுக்கு ஆஜராக முடியவில்லை என்று, அவரின் சட்டத்தரணி கூறினார்.

இந்த நிலையில் ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்குமாறு அரச சட்டத்தரணி விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

எவ்வாறாயினும், ஜூலை மாதம் 18, 19, 20 ஆம் திகதிகளில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Comments