சதொச நிறுவனத்தில் பிளாஸ்டிக் அரிசி; வதந்தி, நம்ப வேண்டாம்

🕔 June 5, 2017

 

தொச நிறுவனத்தில் பிலாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும், அதனை யாரும் நம்ப வேண்டாமெனவும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் ஊடகப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

சதொச நிறுவனத்தினூடாக பாவனைக்குப் பொருத்தமில்லாத றப்பர் பாஸ்மதிஅரிசி விற்கப்பட்டு வருவதாக சில திட்டமிட்ட குழுக்கள் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இந்த திட்டமிட்ட நடவடிக்கையானது கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு மற்றும் சதொச நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க மேற்கொள்ளப்பட்டுவரும் செயலாகும் என்றும் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 2017.05.15 ஆம் திகதி 20 மெட்ரிக்தொன் பாஸ்மதி அரிசி சத்தொச நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்டது. சகல சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு சகல பரீட்சார்த்த நடவடிக்கைகளும்  பூர்த்தி செய்யப்பட்ட பின்னரேயே  இறக்குமதி செய்யப்பட்டது.

இந்த பாஸ்மதி அரிசி பசைத்தன்மை கூடியதாகும். மக்களுக்கு சுகாதாரமான,ஏற்ற  உணவுப்பொருட்களையே சதொச நிறுவனம் எப்பொழுதும்  விநியோகித்து வருகின்றது என்பதை பொறுப்புடன் அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

சதொச நிறுவனத்தின் நற்பெயருக்கு இழுக்கையும் களங்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் சதிமுயற்சியாகவே இதனை நாங்கள் கருதுகின்றோம். எனவே, பாவனையாளர்கள்  இவ்வாறான பொய் வதந்திகளை நம்ப வேண்டாம். இது தொடர்பாக அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு  அதே அரிசி சமைத்தும் பரீட்சித்துப் பார்க்கப்பட்டுள்ளது.

இந்த அரிசியில் சிறிதளவேனும் றப்பர்  சேர்க்கப்படவில்லை என்பதும்  உணவுக்கு உகந்த அரிசி  என்பதும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்