இந்து மதகுருவும், முஸ்லிம் சகோதரரும்: கிட்டங்கி பாலமருகில் உளப்பூரிப்பை ஏற்படுத்திய சம்பவம்

🕔 June 3, 2017

– அஹமட் –

னித நேயம் என்பது, மத வேறுபாடு கடந்து இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதனை, தனது அண்மைக் கால அனுபவத்தில் கண்டு கொண்ட,  கல்முனை மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ், உளப்பூரிப்புடன் அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தமையினைக் காணக் கிடைத்தது.

அந்தப் பதிவின் அவசியம் கருதி, அதனை அவர் எழுதிய படியே, வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.

“இன்று நண்பகல் மத்திய முகாமிலிருந்து கல்முனை நோக்கி வந்து கொண்டிருந்த வேளையில் கிட்டங்கி ஆற்றுக்கருகாமையி நடந்த சம்பவமொன்று சற்று மனிதம் வாழ்வதை உறுதிப்படுத்தியது.

வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளருகில் முஸ்லிம் 18 – 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணொருவர் நின்று கொண்டிருந்தார்.

அப்பெண்ணிலிருந்து சுமார் 15 மீற்றர் தூரத்தில் இன்னுமொரு மோட்டார் சைக்கிளை சரிபார்ப்பது போன்ற பாவனையில் தலைக்கவசத்துடன் இருவர் காணப்பட்டார்கள்.

நானோ எனது வானத்தை ஓரமாக்கிவிட்டு இறங்கியபோதுதான் நிலைமையை உணர்ந்து கொண்டேன். அவ்விருவரில் ஒருவர் அந்தப் பெண்ணின் தந்தையும், மற்றையவர் இந்து மத குருக்கள்.

கல்முனையில் இருந்து தனது மகளை ஏற்றிக்கொண்டு முஸ்லிம் கொலணிக்கு சென்றவரின் மோட்டார் சைக்கிள் பாதை நடுவில் நின்றதை கண்ட; நாவிதன்வெளியிருந்து சேனைக்குடியுப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்து மதகுருக்கள் உதவி செய்ய முயன்றுள்ளார்.

இறுதியில் முஸ்லிம் சகோதரரின் மோட்டார் சைக்கிளில் எரிபொருள் (பெற்றோல்) இல்லை என அறியப்பட்டு தனது சைக்கிளிலிருந்து பெற்றோல் எடுத்து கொடுத்து உதவி செய்தார் அந்த குருக்கள்.

இது நான் நேரில் கண்ட சாட்சியம். இன்றைய கால சூழலில் இனங்களுக்கிடையில் பல அவதூறுகளை கூறிக்கொண்டு கலவரங்களை ஏற்படுத்த பல அமைப்புக்கள் கலத்திலிறங்கி செயற்பட்டுவருகின்றன.

யார் என்ன சொன்னாலும் யார் எதை செய்தாலும் தன்னிலுள்ள மனித நேயத்தை அழித்துவிட்டு ஜடமாக வாழ விரும்பாத எத்தனையோ மனிதம் நிறைந்த மனிதர்கள் நாம் காணாதவகையில் எம்மை சூழவுள்ளனர்”.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்