சமைக்கும் இறைச்சி கக்கூசுக்குள்: கருணையின்றி தண்டிக்கப்பட வேண்டிய ஹோட்டல் முதலாளி

🕔 May 31, 2017

– முன்ஸிப் அஹமட் –

ட்டக்களப்பிலுள்ள இப்றாகிம் ஹோட்டல் நேற்று செவ்வாய்கிழமை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது, அதிர்ச்சிகரமான பல்வேறு விடயங்கள் அம்பலமாகின.

ஹோட்டல் உரிமையாளர் ஒரு முஸ்லிம்  என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த ஹோட்டலில் சமைக்கப்படும் இறைச்சியை கக்கூசுக்குள் வைத்து ‘சுத்தம் செய்து’ வந்துள்ளமை இந்த திடீர் சோதனையின் போது கண்டு பிடிக்கப்பட்டது.

இது தொடர்பான படங்கள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி அருவருப்பினையும், அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அந்த ஹோட்டலும் அதில் உணவுகளைப் பரிமாறுகின்றவர்களும், மிகவும் அசுத்தத்துடன் காணப்பட்டமையினையும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கண்டு பிடித்தனர்.

இஸ்லாம்  – சுத்தத்தை மிகவும் வலியுறுத்தும் ஒரு மார்க்கமாகும். சுத்தம் என்பது ஈமானின் பாதி என்று இஸ்லாம் கூறுகிறது. இந்த நிலையில், மனிதர்களுக்கு சமைத்து வழங்கும் இறைச்சியை கக்கூசுக்குள் வைத்திருந்த இந்த ஹோட்டல் முதலாளியை ஒரு மோசமான மனித மிருகமாகவே பார்க்க முடிகிறது.

இன்னொருபுறம், இவ்வாறான ஹோட்டல்களை நடத்துகின்றவர்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, தம்மை கண்டு கொள்ளாமல் இருக்குமாறு கூறுவார்கள். ஆனால், அவற்றினையெல்லாம் தாண்டி, இந்த ஹோட்டலை திடீர் சோதனை செய்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பராட்டுக்கும், மரியாதைக்கும் உரியவர்களாவர்.

ஒரு மனிதன் என்கிற வகையில், அடுத்த மனிதனிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு வழங்கும் உணவினை சுத்தமானதாக வழங்க வேண்டியது, தார்மீகப் பொறுப்பாகும். இந்தப் பொறுப்பினை மீறிய ஹோட்டல் முதலாளியை சட்டம் மிகக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.

இன்னொருபுறம், இவ்வளவு காலமாக இந்த ஹோட்டல் ஏன் சோதனை செய்யப்படாமல் இருந்தது என்பதற்கான விளக்கத்தினையும் சுகாதாரப் பிரிவினர் கூற வேண்டும்.

அடிக்கடி உணவகங்கள் திடீர் தோதனைக்கு உள்ளாகுமானால், இவ்வாறான சுகாதாரச் சீர்கேடுகளுடன் உணவகங்களை நடத்துவதற்கு உரிமையாளர்களும் அஞ்சுவார்கள்.

நேற்று சுற்றி வளைக்கப்பட்ட இப்றாகிம் ஹோட்டல் மட்டுமே, சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கவில்லை. இவ்வாறான ஹோட்டல்கள் ஒவ்வொரு ஊரிலும் ஏராளமாக இருக்கின்றன.

அவை குறித்தும் சுகாதார பரிசோதகர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்