ஹர்த்தால்: இழுப்பவர்களின் பின்னால், அலையும் சமூகமாக முஸ்லிம்கள் மாறி விடக் கூடாது

🕔 May 23, 2017

– ஆசிரியர் கருத்து –

முஸ்லிம்களுக்கெதிரான இனவாத செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. ஆனாலும், இனவாத செயற்பாட்டில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. போதாக்குறைக்கு, சட்டம் – ஒழுங்கினை நிறைவேற்ற வேண்டிய பொலிஸாரும், இனவாதிகளின் மோசமான நடவடிக்கைகளைக் கை கட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் அடுத்து என்னதான் செய்வது என்கிற கேள்வி, முஸ்லிம்களின் முன்னால், மலையாக எழுந்து நிற்கிறது.

அதற்காக,  இழுப்பவர்களின் பின்னாலெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு அலையும் சமூகமாக முஸ்லிம்கள் மாறி விடக் கூடாது.

முஸ்லிம்கள் மீதான இனவாதச் செயற்பாடுகளைக் கண்டிக்கும் வகையில், நாளை புதன்கிழமை ஹர்த்தால் மேற்கொள்ளுமாறு, சமூக வலைத்தளங்கள் ஊடாக வேண்டுகோளொன்று முன்வைக்கப்பட்டுள்ளமையினைக் காண முடிகிறது. இந்த அழைப்பினை யார் விடுக்கின்றார்கள் எனத் தெரியாது. அடையாளமில்லாதவர்கள் அல்லது தங்களை அடையாளப்படுத்த தைரியமற்றவர்களின் அழைப்புகளுக்கெல்லாம், சாதகமாக வினையாற்ற வேண்டிய அவசியம் முஸ்லிம் சமூகத்துக்குக் கிடையாது.

ஞானசார தேரர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நாளை புதன்கிழமை மன்றுக்கு வருகிறது. இதில் – என்ன நடக்கிறது எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும், சமூக அடையாளம் கொண்டதும் – தம்மை வெளிப்படுத்திக் கொள்வதற்கு தைரியமுள்ளதுமான அமைப்புக்களின் வழி காட்டுதல்களுடன் வேண்டுமானால், ஹர்த்தால் ஒன்றினை மேற்கொள்வது பற்றி யோசிக்கலாம்.

அதனை விட்டு, பேஸ்புக்கில் ஹர்த்தால் செய்யுமாறு அழைப்பு விடுகின்ற முகமூடிப்  பேர்வழிகளின் வேண்டுகோள்களின் பின்னால் அலையும் மந்தைகளாக, முஸ்லிம் சமூகம் மாறி விடக் கூடாது என்பதில், நாம் கவனமாக இருக்க வேண்டும்.

ஆத்திரப்பட்டு நம்மை நாம் அசிங்கப்படுத்திக் கொள்வதை விடவும், திட்டமிட்டு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலம் – நமது பலத்தை வெளிப்படுத்துவதுதான் புத்திசாலித்தனமாக அமையும்.

Comments