கலவரத்தை ஏற்படுத்துவதற்காக, சில பௌத்த பிக்குகள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர்: அதாஉல்லா தெரிவிப்பு

🕔 May 16, 2017

– அஸ்மி அப்துல் கபூர் – 

“நாட்டில் பிரச்சினையொன்றினை உருவாக்குவதற்கு வெளிச்சக்திகள் முனைகின்றன. அதற்கு, சிங்கள – முஸ்லிம் கலவரமொன்று தேவையாகவுள்ளது. இதன்பொருட்டு, சில பெளத்த துறவிகள் விலைக்கு வாங்கப்பட்டு வேலைகள் நடந்து வருகின்றன” என்று, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

நேற்றிரவு தாக்குதலுக்குள்ளான வெல்லம்பிட்டி பள்ளிவாசலில், இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற சர்வ மத பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

முன்னாள் அமைச்சர் மேலும் கூறுகையில்;

“எமது நாட்டிலுள்ள மக்களிடையே ஒரு போதும் குரோதங்கள் இருக்கவில்லை. வெளிச்சக்திகளின் தலையீடுகள்தான் எம்மை பிரித்தாளுகின்றது.

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் முன்னர் இந்தியாவின் கொலனி போன்று ஆக்கப்பட்டது. அதனைப் போன்ற ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்க வெளிச்சக்திகள் முனைகின்றன.

இதன் பொருட்டு சிங்கள – முஸ்லிம் இனக்கலவரம் ஒன்று அவசியமாகிறது. இதற்காக சில பெளத்த துறவிகள் விலைக்கு வாங்கப்பட்டு வேலைகள் நடைபெறுவதை நாம் உணரந்த கொள்ள வேண்டும்.

இங்கு நாம் எல்லோரும் சகோதரர்களாக ஒன்று கூடி இருக்கிறோம். எம்மில் வேற்றுமை இல்லை. மதங்கள் தர்மத்தையே போதிக்கின்றன. எம்மை குழப்புவதற்கு எங்கோ திட்டமிடப்படுகிறது  என்பதை மக்களுக்கு உணர வைப்பதுதான் நமது பணியாகும்.

பொலநறுவையிலுள்ள ஏழைகளின் குடிசைகளை துவம்சம் செய்கிறார்கள். அந்த முஸ்லிம்கள் என்ன அநியாயம் செய்தார்கள்? யுத்தம் நிறைவடைந்த கையோடு இந்த நாட்டை பிளவுபடுத்த சக்திகள் தயாராகி விட்டன. இவற்றை உணர்ந்து நாம் ஒற்றுமையோடு வாழ வழி வகைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

இக்கூட்டத்தில் கொடிக்காவத்தை விகாரையினுடைய விகாரதிபதி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், பள்ளி நிருவாகிகள், மற்றும் பிரதேசத்தை சேர்ந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் அணைவரும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்