ஹோட்டல் நிர்மாணிக்க தோண்டிய இடத்தில் மனித எலும்புக் கூடுகள்: கொழும்பில் பதட்டம்

🕔 May 13, 2017

கொழும்பு – கோட்டே, காலிமுகத் திடலுக்கு அருகாமையில், சங்கரி லா ஹோட்டல் நிர்மாணிக்கப்படும் இடத்தில், தோண்டப்பட்டபோது, மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட இடம், முன்னர் இலங்கை ராணுவத்தினருக்குச் சொந்தமானதெனக் கூறப்படுகிறது.

கடற்கரையை ஒட்டிய மேற்படி 10 ஏக்கர் காணியினை, கடந்த அரசாங்கத்திடம் ஹொங்கொங் நாட்டை தளமாகக் கொண்ட சங்கரி லா ஹோட்டல் நிருவாகத்தினர் 125 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (இலங்கை நாணயத்தில் சுமார் 1900 கோடி ரூபாய்) கொள்வனவு செய்திருந்தனர்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், குறித்த எலும்புகள் பற்றி அறிந்து கொள்ளும் பொருட்டு, அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் உதவியை நாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், மேற்படி இடம் – பிரித்தானியர் காலத்தில் மனித உடல்களைப் புதைக்கும் மயானமாகப் பயன்படுத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

Comments