பொன்சேகாவுக்கு ஐ.தே.கட்சியில் உப தலைவர் பதவி; குழம்புகிறார் விஜேதாஸ ராஜபக்ஷ

🕔 May 5, 2017

ரசியல் ரீதியிலானதொரு முடிவினை சர்வதேச வெசாக் தினத்தின் பின்னர், தான் மேற்கொள்ளவுள்ளதாக, ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான விஜேதாஸ ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு ஐ.தே.கட்சியில் உப தலைவர் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையிலேயே, அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, அரசியல் முடிவொன்றினை எடுக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.

அமைச்சர்களான சரத் பொன்சேகா மற்றும் விஜேதாஸ ராஜபக்ஷ ஆகியோர் ஐ.தே.கட்சியினைச் சேர்ந்தவர்கள் என்றபோதிலும், நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் இருவரும் கடுமையான கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இவர்கள் பரஸ்பரம் ஒருவர் மீது மற்றவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தும் வருகின்றனர்.

இது தொர்பில் விஜேதாஸ ராஜபக்ஷ மேலும் கூறுகையில்;

“நான் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தேன். எனக்கு அந்தக் கட்சி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கியது. ஐ.தே.கட்சியில் மங்கள சமரவீர இணைந்தபோதும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

எவ்வாறாயினும், சரத் பொன்சேகாவால் கொழும்பு மாவட்டத்தில் 05 ஆயிரம் வாக்குகளைக் கூட பெற முடியவில்லை. அவருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. இது, 50 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற ரோசி சேனநாயக போன்றோருக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாகும்” என்றார்.

ஐ.தே.கட்சியில் மூன்று உப தலைவர் பதவிகளை உருவாக்குவதற்கு அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளதாகவும், அதன் பொருட்டு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை கட்சியின் செயற்குழுவினை கூட்டுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்