நிலங்களைப் பறிகொடுத்த மறிச்சிக்கட்டி மக்கள், அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு
🕔 May 3, 2017
மறிச்சிக்கட்டியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் சார்பாக அந்தப் போராட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவினர் இன்று புதன்கிழமை மாலை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அரசியல் முக்கியஸ்தர்கள் பலரை சந்தித்து தமது பரிதாப நிலையை எடுத்துரைத்தனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து, உள்ளூர் அரசியல் முக்கியஸ்தர்களும் பள்ளிவாசல் பிரதிநிதிகளும் இந்த சந்திப்பை மேற்கொண்டனர்.
ஜேவிபி தலைவர் அனுர குமார திசாநாயக்க, ஈ பி டி பி செயலாளர் நாயகம் டக்லஸ் தேவனந்தா, ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் அமைச்சருமான பைசர் முஸ்தபா ஆகியோரை மேற்படி குழுவினர் சந்தித்து, தமது நிலங்கள் கையகப் படுத்தப்பட்டிருப்பது தொடர்பிலும், அதற்கான பின்னணி தொடர்பிலும் தெளிவாக எடுத்துரைத்தனர்.
தாங்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்ற போதும், இற்றை வரை நம்பிக்கையான எவ்வித முடிவுகளும் கிடைக்கவில்லையெனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மக்களின் துன்ப நிலையை கேட்டறிந்து கொண்ட அரசியல் முக்கியஸ்தர்கள், இந்தப் போராட்டம் நியாயமானதெனவும் தமது அரசியல் சக்திக்குட்பட்ட வகையில் இதற்கு பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்குவதாகவும் தெரிவித்தனர்.
அரசியல் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு காத்திரமானதாக இருந்ததாகவும் தமது நியாயமான கோரிக்கைக்கு அது வலுவூட்டுவதாகவும் சந்திப்பில் கந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.