முச்சக்கர வண்டி சாரதியை தாக்கிய குற்றச்சாட்டில், மாகாணசபை உறுப்பினர் கைது

🕔 April 26, 2017

– க. கிஷாந்தன் –

லங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி. சக்திவேல் இன்று புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டார்.

முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை மாகாணசபை உறுப்பினர் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டமையினை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் காரணமாக, லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெராயா நகரத்தில் இன்று புதன்கிழமை காலை பதற்ற நிலை உருவானது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

மெராயா நகரத்தில் வசிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி. சக்திவேல் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை இன்று புதன்கிழமை காலை தாக்கினார் எனக் கூறப்படுகிறது.

தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர், லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மத்திய மாகாண சபை உறுப்பினர் சக்திவேலின் வீட்டுக்கு முன்னால் காட்சிப்படுத்தப்பட்டிருந்த வாழ்த்து விளம்பர பலகையை, தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் நபர், இன்று காலை சேதப்படுத்தினார் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து எழுந்த பிரச்சினையின் போதே, குறித்த முச்சக்கர வண்டி சாரதி தாக்கப்பட்டார் எனத் தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் நபர், மெராயா நகரத்தைச் சேர்ந்தவராவார்.

இவ்விடயம் தொடர்பில் மத்திய மாகாண சபை உறுப்பினரை கைது செய்யும்படி, பாதிக்கப்பட்டவர் சார்பில் கோஷங்கள் எழுந்தன. இதனையடுத்து, “உங்களால் முடிந்ததை நீங்கள் செய்யுங்கள், என்னால் முடிந்ததை நான் செய்துக் கொள்கிறேன்”  எனக் கூறிய மாகாணசபை உறுப்பினர் பிரதான வீதியில் அமர்ந்தார்.

இதனையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த லிந்துலை பொலிஸார், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு,  மத்திய மாகாண சபை உறுப்பினரை பொலிஸ் பாதுகாப்புடன் லிந்துலை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார். மத்திய மாகாண சபை உறுப்பினரை கைது செய்தனர்.

அதேவேளை மெராயா நகரத்துக்கும், மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி. சக்திவேல் வீட்டுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் தெரிக்கையில்;

தாக்குதலுக்குள்ளான நபர் பல காலமாக மெராயா நகரத்தில் பெண்களுக்கு இடையூறுகளை விளைவிக்கும் வகையில் நடந்து கொள்பவர். இதனை மக்கள் பிரதிநிதியான என்னிடம் நகர பொது மக்கள் தெரிவித்து வந்தனர்.

அதேநிலையில் குறித்த நபரால் விளம்பர பலகை சேதப்படுத்தப்பட்டது. பாடசாலை செல்லும் மாணவிகளுக்கு இவர் பல இடையூறுகளை விளைவித்துள்ளதாக என்னிடம் முறையிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் மெராயா சென்றகிலாஸ் தோட்டத்தில் பாடசாலை மாணவி ஒருவரிடம் அவர் சேட்டை செய்தார். இதனையடுத்து, பொலிஸில் முறைபாடு செய்யப்பட்டது. பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

எனினும் குறித்த நபரை நான் தாக்கவில்லை” என்றார்.

தாக்குதலுக்குள்ளான நபர் இது தொடர்பில் கூறுகையில்;

மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி. சக்திவேல் என்னை தாக்கினார். எதற்காக தாக்கினார் என்று எனக்கு தெரியாது. ஆனால் விளம்பர பலகையை நான்தான் உடைத்தேன் என கூறி பொல்லாலும், இரும்பாலும் தாக்கினார். எனக்கு உடம்பில் கடுமையாக தாக்கப்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்” என்றார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி. சக்திவேலை, நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

Comments