இரு மாவட்டங்களில் மரத்திலும், ஏனைய இடங்களில் யானையிலும் மு.கா. போட்டி

🕔 July 10, 2015

SLMC - Press con - 001

– ஜம்சாத் இக்பால் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக, அக்கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மு.காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இத்தகவலை வெளியிட்டார்.

அந்தவகையில், அம்பாறை, திருகோணமலை, புத்தளம், களுத்துறை, குருணாகல், கண்டி மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில், ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் மு.காங்கிரஸ் போட்டியிடவுள்ளதாக இதன்போது ரஊப் ஹக்கீம் கூறினார்.

ஆயினும், மட்டக்களப்பு மற்றும் வன்னி ஆகிய மாவட்டங்களில் மு.காங்கிரஸ் தனது மரச்சின்னத்தில் தனித்துப் போட்டியிடும் எனவும் இதன்போது ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி

இதேவேளை,முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளது. இந்த நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியினால் முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்படவுள்ள இரு வேட்பாளர் நியமனங்களில் ஒன்றினை, நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு வழங்கவுள்ளதாகவும் மு.கா. தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

மு.கா. ஏமாற்றம்

மஹிந்த ராஜபக்ஷவுக்கு, நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட ஜனாதிபதி மைத்திரிபால இடமளித்தது குறித்து, உங்களது அபிப்பிராயம் என்னவென்று ஊடகவியலாளர் ஒருவர் ஹக்கீடம் கேட்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஹக்கீம்; இது தொடர்பில் தமது கட்சி பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளது என்றார்.

இச்சந்திப்பில் மு.கா. தவிசாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பஷீர்சேகுதாவூத், ராஜாங்க அமைச்சரும், கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.ரீ. ஹஸனலி, உள்ளகப் போக்குவரத்து பிரதியமைச்சர் எம்.எஸ். தௌபீக், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான முத்தலிப் பாவா பாறூக், எம். அஸ்லம், பைசல் காசிம், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், அதன் செயலாளர் நஜா முகம்மட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.SLMC - Press con - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்