மயோன் முஸ்தபாவுக்கு எதிரான வழக்கு; விமல் ஆஜராகாமையினால் ஒத்திவைப்பு

🕔 March 27, 2017

முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவுக்கு எதிரான வழக்கில், பிரதான சாட்சிகளில் ஒருவரான விமல் வீரவன்ச, இன்று திங்கட்கிழமை ஆஜராகமையினால், குறித்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில், உயர்கல்வி பிரதியமைச்சராக பதவி வகித்த மயோன் முஸ்தபா, 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது அரசாங்கத்தை விட்டும் விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் இணைந்தார்.

இந்த நிலையில், அப்போது நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்த மயோன் முஸ்தபா, தேசிய சுதந்திர முன்னணியின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் முஸம்மிலிடம், சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குமாறு  கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்காக, முஸம்மிலுக்கு ஒரு தொகைப் பணத்தை லஞ்சமாக வழங்குவதற்கு மயோன் முஸ்தபா ஒத்தக் கொண்டார் எனவும், முதற்கட்டமாக 42 லட்சம் ரூபா பணத்தை மயோன் முஸ்தபா தனது கைப்பட முஸம்மிலிடம் லஞ்சமாக வழங்கினார் எனவும் குற்றம்சாட்டப்படுகிறது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது சாட்சியமளிப்பதற்காக அழைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, நீதிமன்றத்துக்கு சமூகமளிக்கவில்லை.

உண்ணாவிரதம் காரணமாக, உடல் நலம் பாதிப்படைந்துள்ளமையினால், விமல் வீரவன்ச நீதிமன்றுக்கு சமூகமளிக்க முடியாத நிலையில் உள்ளார் என்று, சிறைச்சாலை மருத்துவமனை தலைமை மருத்துவர் எழுத்து மூலம் நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தார்.

இதனையடுத்து வழக்கு எதிர்வரும் ஜுன்மாதம் 15 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Comments