37 வயதுக்குள் பாதாள உலகத் தலைவனாகி, நேற்று முன்தினம் பலியான சமயனின் நேர்காணல்

🕔 March 1, 2017

– ஆங்கிலத்திலிருந்து மொழி மாற்றியவர்: மப்றூக் –

மயன் என அழைக்கப்படும் அருண உதயசாந்த எனும் பாதாள உலகத் தலைவர் நேற்று முன்தினம், சுட்டுக் கொல்லப்பட்டார்.

களுத்துறை சிறையிலிருந்து, நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை பஸ்லில் கொண்டு செல்லப்படும் போது, இவர்மீது குழுவொன்று துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தது.

இச் சம்பவத்தில் பஸ்ஸில் பயணித்த ஏனைய கைதிகள் நால்வர் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர் இருவருமாக மொத்தம் 07 பேர் பலியாகினர்.

மேற்படி சமயன் எனப்படும் பாதாள உலகத் தலைவர், 2015ஆம் ஆண்டு, லங்காதீப சிங்கள பத்திரிகைக்கு தொலைபேசி மூலமாக, பேட்டியொன்றினை வழங்கியிருந்தார். அந்த பேட்டியினை நேற்றைய தினம் டெய்லி மிரர் இணையத்தளம் ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்தது. அதனை ‘புதிது’ செய்தித்தளம் தமிழில் வழங்குகிறது.

கேள்வி:  உங்களை சமயன் என்றா அல்லது அருண என்றா நான் அழைக்க முடியும்
பதில்: பிரச்சினையில்லை, அருண என்றே என்னை அழையுங்கள்.

கேள்வி:  ஏன் உங்களை சமயன் என்று எல்லோரும் அழைக்கிறார்கள்?
பதில்: எனது நண்பர்கள் அப்படி என்னை அழைப்பார்கள். எனது குறும்புத்தனத்துக்காக…

கேள்வி: இப்படியொரு சண்டியனாக வர வேண்டுமென்று நீங்கள் நினைத்தீர்களா?
பதில்: ஒரு சண்டியனாகவோ, பாதாள உலக நபராகவோ வரவேண்டுமென்று, ஒருபோதும் நான் விரும்பியதில்லை. அமைதியானதொாரு வாழ்க்கை வாழவே விரும்பினேன். ஆனால், அதற்கு யாரும் என்னை விடவில்லை.

கேள்வி: உங்கள் சொந்த இடம் எது?
பதில்: நான் பிறந்த இடம் பொலநறுவை. அண்மையில்தான் இது குறித்து அறிந்து கொண்டேன்.

கேள்வி: உங்களுடைய தந்தையும், தாயும் ஆசிரியர்களாமே, உண்மையா
பதில்: ஆம், அது உண்மைதான். அவர்கள் என்னை தத்தெடுத்தார்கள்.

கேள்வி: உங்களுக்கு சகோரர்கள் இருக்கின்றார்களா?
பதில்: இல்லை. நான் மட்டும்தான்.

கேள்வி: எங்கே படித்தீர்கள்?
பதில்: பொமிரிய மகா வித்தியாலயத்தில்

கேள்வி: உங்களுடைய சிறு பராயம் எப்படியிருந்தது.
பதில்: எனக்கு ஐந்து வயதாக இருக்கும் போது, என்னுடைய தந்தை மரணித்து விட்டார். எங்கள் குடும்பத்துக்கு போதுமான சொத்துக்கள் இருந்தன. அவற்றை அபகரிப்பதற்கு எல்லோரும் முயற்சித்தார்கள். அந்தச் சொத்துக்களுக்கு எனது தாயும், நானும்தான் வாரிசுகளாக இருந்தோம். அபகரிக்க முற்பட்டவர்கள் எங்களுக்கு பிரச்சினை கொடுக்கத் தொடங்கினார்கள். அவர்களுக்கு எதிராக நான் பேச முற்பட்டபோது, என்னை தத்தெடுக்கப்பட்டவன் என்று முத்திரை குத்தி, ஓரம்கட்டினார்கள்.

கேள்வி: யாராவது உறவினர்கள் உதவி செய்தார்களா?
பதில்: இல்லை. எனது தாயையும் என்னையும் அவர்கள் அனைவரும் ஓரங்கட்டினார்கள்.

கேள்வி: உங்கள் படிப்பு என்னாயிற்று?
பதில்: சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்தேன். ஆனால், உயர் தரம் படிக்கும் போது, நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

கேள்வி: விருப்பமான பாடங்கள் என்ன?
பதில்: பாடசாலைக் காலத்தில் சிங்களமும், கணிதமும் விருப்பத்துக்குரிய பாடங்களாக இருந்தன.

கேள்வி: பிறகென்ன நடந்தது?
பதில்: அந்தக் காலகட்டத்தில் நிறைய பிரச்சினைகளை நான் சந்தித்தேன். ஊரை விட்டு என்னையும், எனது தாயையும் விரட்டியடிக்க முயற்சித்தார்கள். பல தடவை நான் தாக்கப்பட்டேன். ஒரு நாள் 03 லட்சம் ரூபாய் காசு தருமாறு அச்சுறுத்தி, எனது தாய்க்கு ஒரு கடிதம் வந்தது. காசு கொடுக்காமல் விட்டால் என்னை கொன்று விடுவதாக, எனது தாயை அச்சுறுத்தியிருந்தனர். இது தொடர்பில் நவகமுவ பொலிஸ் நிலையத்தில் எனது தாய் முறைப்பாடு செய்தார். அப்போது எனக்கு ஏழு வயது. அந்த பொலிஸ் நிலையத்தில், அப்போது செய்யப்பட்ட முறைப்பாடுகளை பார்வையிட்டால், இதை அறிந்து கொள்ள முடியும்.

கேள்வி: இப்படியான விடயங்களை உங்கள் பாடசாலை ஆசிரியர்களிடம் சொல்லவில்லையா?
பதில்: அந்த நேரத்தில் எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். அவர்களிடமிருந்து என்னை பிரித்து வைப்பதற்கு எனது தாயார் முயற்சித்தார்.

கேள்வி: காசு சம்பாதிக்க வேண்டுமென அப்போது நினைத்தீர்களா?
பதில்: இல்லையில்லை. எனது தாயார் என்னை நன்றாக கவனித்தார். எங்களுக்கு சொந்தமாக கடையிருந்தது.

கேள்வி: காதல் உறவுகள் ஏதாவது இருந்ததா?
பதில்: நிறைய இருந்தன. ஆனால் அவை எதுவும் சீரியஸானவை அல்ல. காரணம், அந்தக் காலகட்டத்தில் நிறையப் பிரச்சினைகளை எதிர்கொண்டேன். 2004ஆம் ஆண்டு சாதாரணதரப் பரீட்சை எழுதினேன். அதன் பிறகு அநேகமாக, வீட்டில் இருப்பதில்லை.

கேள்வி: முதலாவதாக எப்போது கைது செய்யப்பட்டீர்கள்?
பதில்: 2007 ஆம் ஆண்டு

கேள்வி: என்ன காரணம்?
பதில்: ஆயுதம் வைத்திருந்ததாகக் கூறி, பொலிஸார் என்னை கைது செய்தனர். நான் குண்டு வைத்திருந்ததாக பொலிஸார் என்மீது குற்றம் சாட்டினார்கள். அப்படி நான் எதுவும் செய்யவில்லை. அந்தச் சம்பவம்தான் என் வாழ்க்கையை திருப்பி விட்டது.

கேள்வி: நீங்கள் கைது செய்யப்பட்டபோது என்ன தோன்றியது?
பதில்: மூன்று மாதங்களாக பொலிஸார் என்னை அடித்தார்கள். நான் பயந்து போயிருந்தேன். தாயாரை நினைத்துக் கொண்டேன். என்னைப் பார்ப்பதற்காக எனது தாயார் தினமும் பொலிஸ் நிலையத்துக்கு வருவார். அதனாலேயே, அவருக்கு காலில் பிரச்சினை ஏற்பட்டது. கால் வருத்தத்தினால் அவர் இன்றுவரை கஷ்டப்படுகிறார். நான் இன்றிருக்கும் நிலைக்கு, பொலிஸார்தான் பொறுப்புக் கூற வேண்டும்.

கேள்வி: எப்போது விடுவிக்கப்பட்டீர்கள்?
பதில்: 2009 இல்.

கேள்வி: திருமணமாகி விட்டதா?
பதில்: ஆம் திருமணமாகி விட்டது. எனக்கு ஒரு பிள்ளையும் இருக்கிறது.

கேள்வி: உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: என்னுடைய இந்த வாழ்க்கைக்குள் விழுவதற்கு, எனது பிள்ளையை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். எனக்கென்று தாய், மனைவி, பிள்ளை மட்டுமே உள்ளனர். வேறு யாருமில்லை.

கேள்வி: உங்களுடைய எதிர்த்தரப்பினர் அரசியல் ஆதரவு கொண்டவர்கள் என்பது உண்மையா?
பதில்: ஆம், நான் அப்படித்தான் நினைக்கிறேன்.

கேள்வி: அரசியல்வாதிகளிடம் நீங்கள் உதவி பெற்றிருக்கிறீர்களா?
பதில்: நான் பெறவில்லை. என்னுடைய நண்பர்கள் பெற்றிருக்கலாம்.

கேள்வி: உங்களுடைய வாழ்க்கையை சீரமைக்க வேண்டுமென்கிற எண்ணம் இருக்கிறதா?
பதில்: என்னுடைய வாழ்க்கையை நான் மாற்ற வேண்டும். ஆனால், முடியாது. பிரச்சினைகள் என்னைப் பின் தொடர்கின்றன. என்னுடைய மனைவி, பிள்ளையுடன் வெளிநாட்டில் அமைதியானதொரு வாழ்க்கை வாழ வேண்டும். என்னுடைய வாழ்கையை மாற்ற வேண்டும் என்று சீரியஸாக யோசித்துக் கொண்டிருந்தபோதுதான், கடுவெல நீதிமன்றத்துக்கு அருகில் சுடப்பட்டேன். போதைப் பொருள் விற்பதை நிறுத்துமாறு நான் கூறியமையினால்தான் சுடப்பட்டேன், என்னுடைய நண்பர்கள் கொல்லப்பட்டார்கள்.

கேள்வி: உங்களுக்கு இப்போதுதான் 36 வயது. தற்போதைய நிலையை நீங்கள் மிகவும் விரைவாக அடைந்து விட்டதாக நினைக்கிறீர்களா?
பதில்: சமூகத்தினால்தான் நான் இந்த இடத்துக்கு இவ்வளவு விரைவாகக் கொண்டு வரப்பட்டேன். வதந்திகளில் சொல்லப்படுகின்றவை போல் நான் எதுவும் செய்வதில்லை.  என்னைத் தாக்குகின்றவர்களுக்குத்தான் நான் பதிலடி கொடுக்கின்றேன்.

குறிப்பு: இந்த நேர்காணல் வழங்கப்பட்டு சில நாட்களில், கடுவெல நீதிமன்றத்துக்கு அருகாமையில் சமயன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஆயினும், காயங்களுடன் அவர் தப்பித்துக் கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்