தேசிய ஐக்கியம் என்பது பெரும்பான்மைக்கு சேவகம் செய்வதல்ல: அமைச்சர் மனோ கணேசன் தெரிவிப்பு

🕔 January 29, 2017

Mano Gneshan - 033– எம்.வை. அமீர், யூ.கே. காலிதீன் –

தேசிய ஐக்கியம் என்றால், பெரும்பான்மை மொழிக்கும் பெரும்பான்மை மதத்துக்கும் பெரும்பான்மை இனத்துக்கும் கைகட்டி சேவகம் செய்வது என சிலர் நினைத்துக் கொண்டிருப்பதாகவும்,  அவ்வாறு கைகட்டி அடிமைப்படுவது  – சரணடைவதற்கு ஒப்பானதாகும் என்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல், அரசகரும மொழிப்பெயர்ப்பு அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

மக்களின் எதிர்பார்புக்களை கஷ்டம் பாராது நிறைவேற்றிக் கொடுப்பவனே உண்மையான அரசியல்வாதி. நான் நாடாளுமன்றம் சென்றிருப்பதும் அமைச்சராக இருப்பதும் அங்கே சென்று  தேங்காய் திருவுவதற்காகவல்ல. பணியாற்றுவதற்காகவே சென்றுள்ளேன் எனவும் அவர் கூறினார்.

தேசிய சகவாழ்வு மற்றும் தலைமைத்துவ இளைஞர் மாநாடு – 2017,  சிமாட் ஒப் சிறீலங்கா அமைப்பின் தலைவர் கே.ஆர்.எம். றிஸ்கான் தலைமையில் சாய்ந்தமருது லீமெரிடியன் வரேவேற்பு மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் பிரதமஅதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“தொலைபேசி அழைப்புவந்தால் அதற்கு பதிலளிக்கமாட்டேன், சமூக ஊடகங்களிலே மக்களுடன் கலந்துரயாடமாட்டேன், மக்களை சந்திக்கமாட்டேன், கோரிக்கைகளை செவிமடுக்கமாட்டேன் என்று சொல்லிக்கொண்டிகும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்தப் பதவியில் இருக்க லாயக்கற்றவர்கள். என்னால் முடிந்த அனைத்தையும் மக்களுக்குச் செய்கிறேன். நான் செய்யும் மக்கள் பணி, எப்போது எனக்கு தொல்லையாக தெரிகிறதோ, அன்றே அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்வேன்.

தேசிய சகவாழ்வை கட்டியெழுப்புவதற்கான மிக முக்கியமான அமைச்சு என்னிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சு –  ஏனைய அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதைப் போன்று பாலம் கட்டுவதற்கோ அல்லது கட்டிடங்கள் கட்டுவதற்கோ உருவாக்கப்பட்தல்ல. இந்த அமைச்சு மூலம் மனித மனங்களுக்கிடையே சகவாழ்வை கட்டியெழுப்புவதற்கான பணியை செய்துவருகிறோம். இன்றைய காலகட்டத்துக்கு அதுவே மிகப்பிரதானமான செயற்பாடாகும்.

இலங்கையில் மூன்று மொழிகளும் நான்கு மதங்களும் பத்தொன்பது இனக்குழுக்களும் இருக்கின்றன. இவை எல்லாம் சேர்ந்ததே இலங்கையாகும். ஒரு மொழி, ஒரு மதம் என்ற கதை இலங்கையில் இருக்கமுடியாது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய ஐக்கியம் என்றால், பெரும்பான்மை மொழிக்கும் பெரும்பான்மை மதத்துக்கும் பெரும்பான்மை இனத்துக்கும் கைகட்டி சேவகம் செய்வதுதான் என்று சிலர் நினைக்கின்றனர். அது அப்படியில்லை கைகட்டி அடிமைப்படுவது என்பது – சரணடைவது போன்றதாகும்.

ஆண்டானுக்கும் அடிமைக்கும் சமத்துவம் வராது. ஐக்கியம் என்ற பெயரில் எங்களது மொழியை, மதத்தை, இனத்தை, கலாச்சாரத்தை மற்றும் பண்பாட்டு விழுமியங்களை விலைபேசி விற்கமுடியாது.

கட்சிகளுக்கு மத்தியில் முரண்பாடுகள் இருக்கலாம், ஆனால் – இனம், மதம், மற்றும் மொழி என்று வரும்போது நாங்கள் ஒன்றுபட்டே ஆகவேண்டும். அதுதான் சகவாழ்வு. சிறுபான்மையினர் ஒன்று சேர்வது சிங்களமக்களுக்கு எதிரானதல்ல. பெரும்பான்மை சமூகத்தில் நேர்மையானவர்கள் அதிகம் இருக்கின்றனர். அவர்களுக்குள் இருக்கின்ற சிறுகுழு ஒன்றுதான் அந்தமக்களை தவறாக வழிநடத்த முற்படுகின்றது.

இப்போது ஆட்சிசெய்யும் அரசாங்கம் தொடரவேண்டும். இந்த ஆட்சியின் ஊடாகவே உண்மையான சகவாழ்வை உருவாக்கமுடியும்” என்றார்.

இந் நிகழ்வுக்கு அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம், கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே. அரசரட்ணம் ஆகியோர் கௌரவ அதிதிகளாக வருகை தந்திருந்தனர்.Mano Gneshan - 011 Mano Gneshan - 022

Comments