அமைச்சர்களின் காரியாலய வாடகை கோடிகளில்: பட்டியலிடுகிறார் அனுர குமார திஸாநாயக்க
அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் காரியாலயத்துக்கான மாதாந்த வாடகை 210 லட்சங்கள் என, ஜே.வி.பி. தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, அமைச்சர் சரத் பொன்சேகாவின் காரியாலய வாடகை 110 லட்சங்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்;
“அமைச்சர் துமிந்த திசாநாயக்கவின் காரியாலயத்துக்கு மாதாந்தம் 210 லட்சங்கள் வாடகைப்பணம் கொடுக்கப்பட்டு வருகின்றது.
என்றாலும் கடந்த 08 மாதங்களாக அந்தக் காரியாலயம் செயற்படவில்லை. இதனால் அரசுக்கு 16 கோடி ரூபா வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவற்றினை பொருட்படுத்துவது இல்லை.
இந்த நட்டத்தினை ஈடு செய்ய அரசு குறித்த காரியாலயத்தை விற்க வேண்டும். துமிந்தவோடு சேர்த்து விற்று விட வேண்டும்.
அதேபோல் சரத் பொன்சேகாவின் காரியாலயத்திலும் எந்த விதமான லாபமும் இல்லை. ஆனால் வாடகை மட்டும் 110 இலட்சங்கள். அதேபோல் 700 இலட்சங்களுக்கு வாகனம் கொண்டு வருகின்றார்கள். இது எந்த வகையில் நியாயம்.
இந்த ஆட்சியில் பணத்தை வீணாக்கும் தலைவர்களே இருக்கின்றார்கள். அதனாலேயே நாடு வீழ்ச்சியடைந்துள்ளது. பொறுப்பற்ற ஆட்சியே நடந்து வருகின்றது.
கடந்த கால ஆட்சியாளர்கள் துறைமுகங்களை அமைக்கும் போது கொள்ளையிட்டார்கள். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள், அவற்றினை விற்கும் போது கொள்ளையிட்டு வருகின்றார்கள்.
அநுராதபுரம் ராஜதானி வீழ்ச்சி பெற்றதைப் போன்ற நிலையே இப்போது ஏற்பட்டுள்ளது. ஆட்சியாளர்களால்தான் இந்த நாட்டின் பொளுளாதாரம் வீழ்ச்சியடைகிறது. ஆட்சி வீழ்ச்சியடையும் அறிகுறிகளே இவையாகும்.
இவை திருத்தப்பட வேண்டும். நாம் நாட்டை பொறுப்பேற்க தயாராக இருக்கின்றோம்” என்றார்.