பொதுபலசேனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை, சம்பிக்க ரணவக்க தடுத்தார்: மஹிந்த குற்றச்சாட்டு

🕔 December 30, 2016

mahinda-022ம்பிக்க ரணவக்கவின் எதிர்ப்புக் காரணமாகவே, பொதுபலசேனா அமைப்புக்கு எதிராக, தன்னுடைய அரசாங்கத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தமது அரசாங்கத்தை தோற்கடிக்க பொதுபல சேனா அமைப்பும், அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டதாகவும் மஹிந்த குற்றம் சாட்டியுள்ளார்.

வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பில் நேற்று வியாழக்கிழமை சந்திப்பொன்றினை மேற்கொண்டார். இதன்போதே, அவர் இவ்விடயங்களைக் கூறினார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்;

“அளுத்கமவில் 2014 ஆம் ஆண்டு நடந்த மோதலில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இறந்து போனதை நேற்றுத்தான் அறிந்து கொண்டேன்.

எனது அரசாங்கத்தை தோற்கடிக்க பொதுபல சேனா அமைப்பும், அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டனர்.

முஸ்லிம் மக்களை தாக்கி திட்டமிட்டு, அவர்களை என்னிடம் இருந்து பொதுபல சேனா பிரித்து விட்டது.

நான் மீண்டும் பதவிக்கு வந்த பின்னர் பொதுபல சேனா போன்ற அமைப்புகளை கட்டுப்படுத்தும் விதம் பற்றி அறிந்து வைத்துள்ளேன்” என்றார்.

இதன்போது, உங்கள் ஆட்சிக்காலத்தில் இப்படியான அமைப்புகளின் செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காதமைக்கான காரணம் என்ன என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி “எனதுஅரசாங்கத்தில் அமைச்சராக இருந்த சம்பிக்க ரணவக்க அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்