‘எனது’ கட்சி என உரிமைப்படுத்தியதை, ‘எமது’ கட்சி என பொதுமைப்படுத்தும் போராட்டம்

🕔 December 12, 2016

basheer-088– பஷீர் சேகு­தாவூத் (தவிசாளர் – மு.காங்கிரஸ்) –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த காலங்களில் எவ்வளவு உள் முரண்பாடுகளை சந்தித்த போதும், அவை தலைமை – உறுப்பினர்களுக்கு இடையில் மையம் கொண்டிருந்த நபர்கள் சார்ந்த முரண்பாடுகளாக மட்டுமே இருந்தமையைக் காணலாம்.

ஆனால் தற்போது ஏற்பட்டிருப்பது கட்சியின் யாப்பை மையப்படுத்திய நிறுவனமும் சமூகமும் சார்ந்த முரண்பாடாக அமைந்துள்ளமை தெளிவானதாகும்.
சுமார் மூன்று தசாப்த கால – முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றில், இதற்கு முன்னர் எத்தருணத்திலும் இவ்வாறானதொரு சாசன நெருக்கடியினையும், சர்க்கஸ் சாகசத்தையும் கட்சி சந்திக்கவில்லை.

பெருந்தலைவர் அஷ்ரஃப் காலத்திலும், நிகழ்காலத் தலைவர் ஹக்கீம் காலத்திலும் கட்சியின் யாப்பு – பல தடவைகள் திருத்தப்பட்டுள்ளது. புதிதாக சரத்துகள் சேர்க்கப்பட்டும் உள்ளன. ஆயினும் கடந்த வருடம் நவம்பர் மாதம் 06ஆம் திகதி இடம்பெற்ற கட்டாய உச்சபீடக் கூட்டத்தில், தலைவர் திடீரென முன் மொழிந்த யாப்புத் திருத்தம் ஏற்படுத்தியிருக்கும் இன்றைய நெருக்கடி போல் ஒன்றினை, என்றும் சந்தித்ததில்லை.

இரு தலைவர்களின் காலத்திலும் செய்யப்பட இருந்த மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் பற்றிய விபரங்கள், உச்சபீட உறுப்பினர்கள் சிந்தித்து – தமது ஆலோனைகளோடு கட்டாய உச்சபீடக் கூட்டத்துக்கு வருவதற்கு வசதியாக, அவர்களுக்கு முன்னரே அனுப்பி வைக்கப்படும். அல்லது முந்திய மாதம் இடம் பெறும் உச்சபீடக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற – திறந்த நடைமுறை பின்பற்றப்பட்டிருந்தது.

ஆனால், 2015 இல் இடம்பெற்ற திருத்தங்களின் போது, மேற்கூறப்பட்ட கட்சியின் பாரம்பரியம் பின்பற்றப்படவில்லை, மாறாக தலைவர் ஏற்கனவே தயாரித்து, தனது உள்ளங்கைக்குள் மடித்து வைத்திருந்த கடதாசியில் அடங்கியிருந்த திருத்தச் சரத்துக்களையே ஒப்புவித்தார். திருத்தங்கள் முன்மொழியப்படுவதற்கு முன்னர் எந்த உறுப்பினருக்கும் திருத்த விபரம் தெரிந்துவிடக் கூடாது என்பதில் தலைவர் கண்ணும்
கருத்துமாக இருந்தார். இதன் காரணமாகத்தான் அன்று கட்டாய உச்சபீடக் கூட்டத்தில் பிரசன்னமாகி இருந்த சட்டத்தரணிகள் உட்பட ஏனைய உறுப்பினர்களும் திருத்தங்களை எதிர்ப்பதற்கு வழியற்று இருந்தனர். அன்றைய திருத்தங்கள், அப்பாவிகளான நிரபராதிகள் மீது மறைந்திருந்து நிகழ்த்தப்பட்ட கெரில்லாத் தாக்குதல் போன்றதாகும்.

இது – கிழக்கில் தொழுகையில் இருந்த போது பள்ளிவாயில்களிலும், தூக்கத்தில் இருந்த போது கிராமங்களிலும் முஸ்லிம் மக்கள் மீது பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைத் தாக்குதல்கள் போல, இஸ்லாமிய விழுமியங்கள் மீதும் ஜனநாயகத்தின் மீதும் சர்வாதிகாரம் நிகழ்த்திய மரணத் தாக்குதலாகும். அதுவும் யாப்பின் முதல் பக்கத்திலேயே ‘தனது வழிகாட்டி புனித அல்குரானும், ஹதீஸுமாகும்’ என எழுதி ஏற்றுக் கொண்டுள்ள கட்சியின் தலைவர் செய்த காரியமாகும்.

அந்த உச்சபீடக் கூட்டத்தில் பிரசன்னமாகி இருந்த செயலாளர் நாயகம் உட்பட அநேகர்,  நமது வழி முறைக்கு ஒவ்வாத இந்தத் திருத்தங்களை ஏன் எதிர்க்கவில்லை என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர., இக்கேள்வி நியாயமானதும் கூட. ஆனால் நடைபெற்றது மறைந்திருந்து தொடுத்த மர்மத் தாக்குதலாகையால் , விழுந்து எழுந்து நிதானித்துத்தான் எதிர்தாக்குதல் செய்ய முடியும் என்பதை பக்கம் சாரா நிதானிகள் புரிந்து கொள்வார்கள். எதிர்பார்த்திருந்தால்தானே எதிர்வினையாற்ற முடியும். இனி மறைந்திருந்தும் தாக்குதல்கள் வரலாம் என்பதால் தயாரிப்போடும் விழிப்போடும் கூருணர்வோடும் இருக்க முடியும்.

நவம்பர் 16 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்ரிய அனுப்பியுள்ள கடிதம் பற்றி ஊடகங்கள் வாயிலாக அனைவரும் அறிந்திருப்பீர்கள். இந்நிலைமை புதிய யாப்பு திருத்தத்தினால் ஏற்பட்டதாகும்.

செயலாளர் நாயகம் என்ற ஒரு பதவி நிலை இருக்கத் தக்கதாக, அப்பதவியின் அதிகாரத்தை உள் நோக்கத்தோடு பிடுங்கி எடுத்து தலைவரினால் நியமிக்கவும், நீக்கவும், சம்பளம் வழங்கவும் கூடியதாக புதிய செயலாளர் ஒருவரை நியமிக்கும் அதிகாரத்தை தலைவர் பெற்றுக் கொள்ளும் வகையில், சரத்து ஒன்று யாப்பில் புதிதாக கொண்டு வரப்பட்டமைதான், வரலாற்றில் முஸ்லிம் காங்கிரஸ் என்றும் முகம் கொடுத்திராத புதிய நெருக்கடிக்கு காரணமாகும்.

கையெழுத்திடும் அதிகாரம் பெற்றிருக்கும் செயலாளரை தெரிவு செய்யும் அதிகாரமும், பொறுப்பும் இவ்வளவு காலமும் உச்சபீட உறுப்பினர்கள் வசமும், இந்நியமனம் பிரதிநிதிகள் மாநாட்டில் உறுதிப்படுத்தப்பட வேண்டி இருந்ததால் ஆயிரக் கணக்கான கட்சி உனுப்பினர்களிடமும் இருந்தது. அதாவது கட்சிப் போராளிகள், ஆதரவாளர்கள் மற்றும் அபிமானிகள் ஆகியோர் கட்சியின் பங்குதாரர்களாக (Stakeholders) இருந்தனர். ஆனால், புதிய சரத்தின் மூலம் தலைவரே செயலாளரை நியமிக்கவும், நீக்கவும் அதிகாரம் பெறுவதனால் அவரே கட்சியின் மொத்தமான ஒற்றை பங்கை வைத்திருக்கும் முதலாளியாகிவிட்டார். மற்றெல்லோரும் அவரின் கூலியாட்கள் போலவும் கொத்தடிமைளாகவும் ஆகிவிட்டோம்.

ஆகவே, இன்று தோன்றியுள்ள பிச்சினை தனிப்பட்ட ஹசனலியினதோ அல்லது செயலாளர் பிரச்சினையோ அல்ல. மாறாக, இது – முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரதும் பிரச்சினையாகும். இன்னும் தெளிவாக கூற விளைந்தால், இது – கட்சி பங்கு கொண்ட அனைத்து தேர்தல்களிலும் கட்சியை நம்பி வாக்களித்த இலட்சக் கணக்கான மக்களின் பிரச்சினையாகும். இந்தக்கட்சி மக்களுக்கு உரித்தான பொதுச் சொத்தாகும். நாம் ஒவ்வொருவரும் அதன் பங்காளிகளாவர். உயிரும், உடமையும், தியாகங்களும் நமது முதலீடுளாகும்.

இன்றைய கணிப்பில், செயலாளர் நாயகம் சகோதரர் ஹசனலி – ஆயுதம் கொலோச்சிய காலத்தில் உயிரை தியாகம் செய்ய தாயாரான தீரத்தை முதலீடு செய்த முதன்மைப் போராளியும் பங்காளியுமாகும். இன்றைய தலைவரை விட கூடுதலாக முதலீடு செய்தவர் என்ற வகையில் அவர் பெறுமானம் உடையவராகிறார்.

இது பதவி தொடர்பான விடயமல்ல,கட்சியில் உள்ள உரிமை சம்மந்தமான விடயமாகும்.

இன்று – கட்சியைக் காப்பாற்றுவதும், கட்சியினுள்ளே மக்களுக்கு இருக்கும் உரிமையை மீள உறுதிப்படுத்துவதும், மக்களின் பங்கை உறுதிப்படுத்துவதும், தனியொருவரின் கையில் சுழலும் சாட்டையாக மாற்றப்பட்டிருக்கும் நமது கட்சியை இலங்கை முஸ்லிம்களின் கோட்டையாக மீட்டெடுப்பதும், ஹசனலி செயாளர் ‘நாகம்’ அல்ல அவர் செயலாளர் ‘நாயகம்’ என்று நிரூபிப்பதும் இலட்சக்கணக்கான மக்களிடம் அல்ல, வெறும் 90 உச்சபீட உறுப்பினர்களின் விழிப்புணர்விலும், அரசியல் நேர்மையிலும், சுயநலத்தை துறப்பதிலும், அவர்களின் ஈமானின் திடகாத்திரத்திலும் தங்கியிருக்கிறது.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் பதினான்காம் திகதி நடைபெறும் உச்சபீடக் கூடல் பதில் தர வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்