ஞானசார தேரருக்கு எதிராக அமைச்சர் றிசாத் பதியுதீன், பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு
🕔 December 3, 2016


பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் ஞானசார தேரர், அல்லாஹ்வையும் முஹம்மது நபியவர்களையும், குர்ஆனையும், முஸ்லிம்களையும் தகாத வார்த்தைகளால் தொடர்ந்தும் நிந்தித்து வருவதற்கெதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு இன்று சனிக்கிழமை பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முறையிட்டுள்ளார்.
ஞானசார தேரரின் நடவடிக்கைகள் மிகவும் உக்கிரமடைந்துள்ளதாகவும், அண்மையில் அவர் நடத்திய ஊடக சந்திப்பில் அல்லாஹ்வை மிகவும் கீழ்த்தரமான முறையில் ஏசியுள்ளதையும் தமது முறைப்பாட்டில் பதிவு செய்துள்ள அமைச்சர் ரிஷாட், அதற்கான ஆதாரமாக ஊடகவியலாளர் சந்திப்பின்போது – தேரர் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய ஒளிப்பதிவு நாடாவையும் பொலிஸ் மா அதிபரிடம் சமர்ப்பித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் கூறியதாவது;
“ஞானசார தேரர் இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்துவதில் மிகவும் கீழ்த்தரமாக செயல்படுகின்றார். தொடர்ச்சியாக அவர் மேற்கொண்டுவரும் இனவாத பேச்சுக்களும் வெறுப்பூட்டும் நடவடிக்கைகளும் முஸ்லிம்களை வெகுவாகப் பாதித்துள்ளது. அழுத்கம கலவரத்தின் சூத்திரதாரியான ஞானசார தேரர் மீது, அந்தப் பிரதேச மக்கள் பல வழக்குகளை பதிவு செய்துள்ள போதும், இற்றை வரை அவர் விசாரிக்கப்படவுமில்லை, அவர் மீது நடவடிக்கை எடுக்கப் படவுமில்லை.
அந்த சம்பவத்தின் முன்னரும் அந்த சம்பவத்தின் பின்னரும் முஹம்மது நபியவர்களையும், குர் ஆனையும், முஸ்லிம்களையும் இழிவான வார்த்தைகளால் ஞானசார தேரர் திட்டித்தீர்த்தார். அவர் வெறுப்பூட்டும் துவேசப் பேச்சுக்களை பேசி வருகின்ற போதும், கடந்த அரசைப்போன்று தற்போதும் எத்தகைய நடவடிக்கைகளும் அவருக்கெதிராக மேற்கொள்ளப்படாமை முஸ்லிம்களை கவலையடையச் செய்துள்ளது.
சிங்கள மக்களையும் முஸ்லிம் மக்களையும் மோதச்செய்து, ஓர் இனக்கலவரத்தை உருவாக்குவதே ஞான சார தேரரின் உள்ளார்ந்த நோக்கமாக இருக்கின்றது. இதற்கு இந்த நல்லாட்சி இடமளிக்கக் கூடாது.
நல்லாட்சியைக் கொண்டு வருவதில் பாரிய பங்களிப்புச் செய்த முஸ்லிம்கள், ஞானசார தேரரின் நடவடிக்கைகள் எல்லை மீறிச் சென்றுள்ளமையால் வேதனையடந்துள்ளனர். அவருக்கெதிராக உடனடியாக நடவடிக்கை எடுத்து இனங்களுக்கிடையே சுமூக நிலையை ஏற்படுத்துமாறு குரலெழுப்புகின்றனர்.
தேரரின் முஸ்லிம்களுக்கெதிரான துவேசச் செயற்பாடுகளை கைவிடச்செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியே, எமது கட்சி முறைப்பாடு செய்துள்ளது” என்றார்.
மக்கள் காங்கிரஸின் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்டி ஹபீப் ஊடாக இந்த முறைப்பாடுகளை பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் பதிவு செய்தார். மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதியமைச்சருமான அமீர் அலி, மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் ஆகியோரும் இதன்போது பொலிஸ் தலைமையகத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.
(அமைச்சரின் ஊடகப் பிரிவு)
வீடியோ

Comments

