அமைச்சர் றிசாத்தின் பெயரைப் பயன்படுத்தி பொய் பிரசாரம்; ஊர்வலத்துக்கு ஆட்சேர்க்கவும் முயற்சி

🕔 November 18, 2016

rishad-098மைச்சர் ரிஷாட், கடும் போக்கு இயக்கங்களுக்கு சவால் விட்டதாக பொய்பிரசாரங்களை கூறி, நாளை கண்டியில் இடம்பெறவுள்ள கடும்போக்காளர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு அவர்களின் முகநூல்களின் மூலம் ஆட்சேர்க்கும் யுக்திகள் வருகின்றன.

இதுதொடர்பாக, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று மாலை முறைப்பாடு செய்துள்ளதாக, அக்கட்சியின் சட்டப்பணிப்பாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ருஷ்தி ஹபீப் தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வில்பத்தை அழிக்கின்றார்” என கடும்போக்காளர்கள் முன்வைத்த மோசமான திட்டமிட்ட குற்றச்சாட்டுக்கு விளக்கமளிக்கும் வகையில், கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போது, “வில்பத்துவில் ஒரு மரத்தையாவது, நானோ அல்லது நான் சார்ந்த சமூகமோ அழித்திருந்தோம் என யாராவது நிரூபிக்கும் பட்சத்தில் நான் ராஜினாமா செய்வேன்” என தெரிவித்திருந்த கூற்றை, இலங்கையின் முக்கிய இலத்திரனியல் ஊடகத்தின் பதிவில் இருந்து எடுத்து, அதனை தமக்குத் தேவையான வடிவங்களில் உருமாற்றி தற்போது கடும்போக்காளர்கள் தமது முகநூல்களில் வேகமாக பரப்பி வருகின்றனர்.

நாளை அவர்கள் ஏற்பாடு செய்துள்ள ஊர்வலத்தில் 5000 பேர் சேர்ந்தால், அமைச்சர் ரிஷாட் பதவியிலிருந்து ராஜினாமாச் செய்வதாக கதை பரப்பி, சிங்கள சமூகத்தை  உஷார் படுத்தி, அவர்களை உசுப்பேற்றி  தமது ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டம் சேர்ப்பதே இவர்களின் நோக்கமாகும்.

இந்த விடயம் தொடர்பாக அண்மைய காலங்களிலோ, எந்தக்காலத்திலோ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எவ்விதமான ஊடகவியலாளர் மாநாடுகளையோ அல்லது எந்தவொரு தனியான ஊடகத்திற்கோ இவ்வாறான எந்தச் சவாலையும் விடுக்கவில்லை எனவும் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்டி ஹபீப் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சார்பில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் பொய்யான கருத்தை வெளியிட்டமைக்காக, குறிப்பிட்ட முகநூல் ஒன்றுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்