வழிய வழிய வாக்குறுதிகள்

🕔 October 25, 2016

article-mtm-0987
முகம்மது தம்பி மரைக்கார்

‘கீரைக் கடை’களுக்கு எதிர் ‘கடை’கள் உருவாகுவது, அரசியல் அரங்கில் மக்களுக்கும், ஜனநாயகத்துக்கும் நல்லது. எதிர்க்கடைகள் அதிகரிக்க அதிகரிக்க தனிக்காட்டு ராசாக்கள் மதிப்பிழந்து போவார்கள். ஏகபோக வியாபாரம் அங்கு இல்லாமல் போய்விடும். நல்ல கடையில் வர்த்தகம் ஜோராக நடைபெறும். நல்ல கீரைகளை மக்கள் தேடித் தேடிப் பெற்றுக் கொள்ள முடியும். தரமற்ற கீரைகளை வைத்துக் கொண்டு, மக்களை ஏமாற்றி வியாபாரம் நடத்த முடியாது போய்விடும்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்தில், கடந்த ஒரு வருட காலமாக, அரசியல் கட்சிகளின் ‘எதிர்க்கடை வியாபாரம்’ சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முன்னர் முஸ்லிம் காங்கிரசும், முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவும் மட்டுமே கடை விரித்திருந்த சந்தையில், தடாலடியாக நுழைந்து – யாரும் எதிர்பாராத வகையில் எதிர்க்கடை திறந்தார் அமைச்சர் றிசாத் பதியுத்தீன். அதனால், கடந்த பொதுத் தேர்தலின் பிறகு, அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிதேசங்களில் ‘அரசியல் சந்தை’ களைகட்டி வருகிறது.

சவால்கள்

மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுத்தீனும், போட்டி போட்டுக் கொண்டு, அம்பாறை மாவட்டத்துக்கு வந்து போகிறார்கள். அம்பாறை மாவட்டமானது, முஸ்லிம் காங்கிரசுக்கு அதிகளவு ஆதரவுள்ளதொரு தளமாகும். அதனால், அந்தத் தளத்தினை உடைப்பதோடு, அங்கு தனது கொடியை நட்டுவிட வேண்டுமெனும் வேகத்துடன் அமைச்சர் றிசாத் செயற்பட்டு வருகின்றமையினை அவதானிக்க முடிகிறது. இந்த நிலையானது மு.கா.வுக்கு பெரும் சவாலாகும். அதனால், அம்பாறை மாவட்டத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய தேவை மு.கா.வுக்கு எழுந்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலிலே, றிசாத் பதியுத்தீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதன் முதலாக, தனது மயில் சின்னத்தில் போட்டியிட்டது. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைக்கவில்லை. ஆயினும் யாரும் எதிர்பாராத விதமாக அந்தக் கட்சி 33,102 வாக்குகளைப் பெற்று ஆச்சரியப்படுத்தியது. கிட்டத்தட்ட 1500 வாக்குகளால், றிசாத் பதியுத்தீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அம்பாறை மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை இழந்தது. அம்பாறை மாவட்டத்தில் இப்படியொரு பெருந்தொகை வாக்கினைப் பெற்றுக் கொண்டதால், அந்த மாவட்டம் மீதான ஆர்வம் றிசாத் பதியுத்தீனுக்கு இன்னும் அதிகரித்தது. அதனால், அம்பாறை மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலிலே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டவர்களில் அதிக வாக்ககளைப் பெற்றுக் கொண்ட நான்கு பேருக்கு, தனது அமைச்சின் கீழுள்ள நான்கு நிறுவனங்களின் தலைமைப் பதவிகளைக் கொடுத்து, தமது கட்சிச் செயற்பாடுகளை அந்த மாவட்டத்தில் றிசாத் பதியுத்தீன் முடுக்கி விட்டுள்ளார்.

இதனால் – ரஊப் ஹக்கீமும், றிசாத் பதியுத்தீனும் ஏட்டிக்குப் போட்டியாக அம்பாறை மாவட்ட அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். உதாரணமாக, ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாரிய கடலரிப்பு தொடர்பில் அரசியல்வாதிகள் கவனமின்றியே இருந்து வந்தனர். இந்த நிலையில், ஒலுவில் கடலரிப்பினை பார்வையிடுவதற்கு றிசாத் பதியுத்தீன் ஒருநாள் வருகை தரவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனை அறிந்து கொண்ட மு.கா. தரப்பினர், உடனடியாக தமது கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீமைத் தொடர்பு கொண்டு, ஒலுவிலுக்கு றிசாத் வருவதற்கு முன்னதாக, அதே தினத்தில் ஹக்கீமை அழைத்து வந்தனர். ஹக்கீம் வந்துபோன சில மணித்தியாலங்களில் றிசாத் பதியுத்தீன் ஒலுவிலுக்கு வந்து, கடலரிப்புப் பகுதிகளைப் பார்வையிட்டார்.

இதன் பிறகு, ஹக்கீமும் – றிசாத்தும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சரைச் சந்தித்து, ஒலுவில் கடலரிப்புப் பற்றிப் பேசினர். கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகளையும் சந்தித்தார்கள். இதனையடுத்து ஒலுவில் கடலரிப்புக்கு தற்காலிகமாக தீர்வொன்றினைக் காண்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தது. இப்போது, ஒலுவிலில் கடலரிப்பினைத் தடுக்கும் வகையிலான தற்காலிக நடவடிக்கைகள் நடைபெற்ற வருகின்றன. இந்த நிலையில், ஒலுவில் கடலரிப்பினைத் தடுப்பதற்காக தீர்வினைப் பெற்றுத் தந்தவர்கள் தாங்கள்தான் என்று – ஹக்கீம் தரப்பு ஒருபக்கமும், றிசாத் தரப்பினர் மறுபக்கமுமாகக் கூறிவருகின்றனர். யார் குற்றியும் அரிசி கிடைத்தால் சரிதான் என்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.

சாய்ந்மருது அரசியல்

இவ்வாறானதொரு நிலையில்தான், கடந்த சனிக்கிழமை அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேசத்துக்கு வந்திருந்த அமைச்சர் றிசாத் பதியுத்தீன், மு.கா. தரப்பினரின் தலையில் பாரிய ‘இடி’ ஒன்றினை இறக்கி விட்டுப் போயுள்ளார். சாய்ந்தமருதில் கடந்த சனிக்கிழமை அமைச்சர் றிசாத் பதியுத்தீன் கலந்து கொண்ட பொதுக்கூட்டமொன்று இடம்பெற்றது. அதற்கு முன்னதாக, தனது அமைச்சின் கீழுள்ள அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் கிளையொன்றினை, சாய்ந்தமருதில் அமைச்சர் றிசாத் பதியுத்தீன் திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் கலந்துகொள்ளும் பொருட்டு, உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவை, றிசாத் பதியுத்தீன் கொழும்பிலிருந்து அழைத்து வந்திருந்தார். பைசர் முஸ்தபாவை சாய்ந்தமருதுக்கு றிசாத் அழைத்து வந்தமைக்கு மிகப் பெரியதொரு காரணம் இருந்தது. சாய்ந்தமருதில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பைசர் முஸ்தாபவை – பேச வைத்தமையின் மூலமாக, றிசாத் பதியுத்தீன் அந்தக் காரணத்தை நிறைவேற்றிக் கொண்டார். அதுதான் மு.கா.வினரின் தலையில் இடியாக இறங்கியது.

றிசாத் பதியுத்தீனின் சாய்ந்தமருது பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா; “சாய்ந்தமருது பிரதேசத்துக்கு உள்ளுராட்சி சபையொன்றினை வழங்குவேன்’ என்று வாக்குறுதியளித்தார். அத்தோடு அவர் நிறுத்தவில்லை. ‘இந்தப் பிரதேசத்துக்கு தனியான உள்ளுராட்சி சபை வேண்டுமென்று அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் சகோதரர் ஜெமீல் ஆகியோர், என்னிடம் நீண்டகாலம் வலியுறுத்தி வந்ததன் பிரதிபலன் இப்போது உங்களுக்குக் கிடைத்துவிட்டது” என்றும் கூறினார்.

ஜெமீல் என்பவர் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவர். முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக, கிழக்கு மாகாணசபை உறுப்பினராகவும் பதவி வகித்தார். மேலும், மு.கா.வின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளராகவும் செயற்பட்டு வந்தார். ஆயினும், மு.கா. தலைவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அந்தக் கட்சியை விட்டும் விலகி, றிசாத் பதியுத்தீனின் மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டார். கடந்த பொதுத் தேர்தலில் றிசாத் பதியுத்தீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட ஜெமீலுக்கு; தற்போது அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியை றிசாத் வழங்கியுள்ளார்.

உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, அந்தப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையினை, மேலும் இவ்வாறு தொடர்ந்தார். “இந்தப் பிரதேசத்துக்கு தனியான உள்ளுராட்சிசபை ஒன்று வேண்டுமென, என்னிடம் வேறுசில அரசியல்வாதிகளும் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவர்கள் இதய சுத்தியாக அந்தக் கோரிக்கையை விடுக்கவில்லை என்பதை நான் உணர்ந்துகொண்டேன். வெறுமனே புகைப்பட விளம்பரங்களுக்காகவே, அவர்கள் அவ்வாறான கோரிக்கையை விடுத்து உங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை நான் அறிந்துகொண்டேன். ஆனால், அமைச்சர் றிசாத்தைப் பொறுத்தவரையில் உங்களின் பிரச்சனைகளை இனங்கண்டு, இதய சுத்தியோடு இந்த முயற்சியில் இறங்கினார் என்பதை பகிரங்கமாகக் கூறுகின்றேன்” என்றார். அப்படிக் கூறியமைதான், பலரின் தலைகளில் இடிகளை இறக்கியது.

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை தொடர்பில் – புகைப்பட விளம்பரங்களுக்காகவும், இதய சுத்தியில்லாமலும் தன்னிடம் கோரிக்கை விடுத்த அரசியல்வாதிகள் யார் என்று, அமைச்சர் பைசர் முஸ்தபா தன்னுடைய உரையில் வெளிப்படையாகக் கூறவில்லை. ஆனால், அவரின் உரை ஊடகங்களில் வெளியாகிய மறுநாள், அமைச்சர் பைசர் முஸ்தபாவை மு.கா.வின் முக்கியஸ்தர்களும், மு.கா. சார்பான இணையத்தளங்களும் வசைபாடத் தொடங்கியுள்ளன. முஸ்லிம் காங்கிரசின் மூத்த துணைத் தலைவர் முழக்கம் மஜீத்; “பைசர் முஸ்தபா அரசியலில் ஒரு கத்துக்குட்டி” என்று சாடியிருக்கின்றார். அப்படியென்றால், இதய சுத்தியில்லாமலும் – புகைப்பட விளம்பரங்களுக்காகவும், சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக்கான கோரிக்கைகளை தன்னிடம் விடுத்ததாக, பைசர் முஸ்தபா கூறியது முஸ்லிம் காங்கிரஸ் அரசியல்வாதிகளைத்தான் என்பதை, இங்கு புரிந்துகொள்ள முடிகிறது. சில மாதங்களுக்கு முன்னர், சாய்ந்தமருது பிரதேசத்துக்கான உள்ளுராட்சி சபைக் கோரிக்கையுடன், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தலைமையில், அந்தக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் – முக்கியஸ்தர்களும், உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவைச் சந்தித்திருந்தமையும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

தவிர்க்க முடியாத நியாயங்கள்

சாய்ந்தமருது பிரதேசம் தற்போது கல்முனை மாநகரசபையின் நிருவாகத்தின் கீழ் உள்ளது. ஆனாலும், மிக நீண்ட காலமாக தமக்கு தனியானதொரு உள்ளுராட்சி சபையொன்று வேண்டுமென சாய்ந்தமருது பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சுமார் 09 சதுர கிலோமீற்றர் பரப்பளவினைக் கொண்ட சாய்ந்தமருதில் கிட்டத்தட்ட 29 ஆயிரம் பேர் வாழ்கின்றனர்.

சாய்ந்தமருது பிரதேசத்துக்கென்று 1928 ஆம் ஆண்டிலிருந்து, உள்ளுராட்சி சபையொன்று இருந்துள்ளது. அதன் பெயர் ‘கரைவாகு தெற்கு கிராம சபை’ என்பதாகும். அந்த சபையில் 10 உறுப்பினர்கள் அங்கம் வகித்துள்ளனர். ஆயினும், 1987 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரதேச சபைகள் சட்டத்தின் காரணமாக, கல்முனை உள்ளுராட்சி சபையுடன் சாய்ந்தமருது இணைக்கப்பட்டு விட்டது.

தற்போதைய கல்முனை மாநகரசபையானது, கல்முனை தொகுதிக்கென உள்ள ஒரேயொரு உள்ளுராட்சி சபையாகும். கல்முனை மாநகரசபை நிருவாகத்தின் கீழ் சுமார் 01 லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளனர். ஒரு தொகுதியே – ஒரு உள்ளுராட்சி சபையாக இருக்கும் போது, அதை நிருவகிப்பதென்பது மிகவும் சிரமமாகும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வெளியேறும் குப்பைகளை அகற்ற முடியாமல் கல்முனை மாநகரசபை, பல தடவை திணறியிருக்கிறது. அந்த நாட்களில் கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பல பிரதேசங்கள் நாறியிருக்கின்றன.

இப்படியான நிலைவரங்களை அடிப்படையாகக் கொண்டுதான், சாய்ந்தமருது பிரதேச மக்கள் தமக்கான உள்ளுராட்சி சபையொன்றினை வழங்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். சரியாகக் சொன்னால், ‘எங்களுக்கு நீங்கள் ஒன்றும் புதிதாக வழங்கத் தேவையில்லை. எங்களிடமிருந்து எடுக்கப்பட்டதை மீளத் தாருங்கள்’ என்கின்றார்கள் அந்த மக்கள். சாய்ந்தமருதை விடவும் குறைவான சனத்தொகையினைக் கொண்ட பல பிரதேசங்களுக்கு, உள்ளுராட்சி சபைகள் வழங்கப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும். காரைதீவு பிரதேச சபை, நாவிதன்வெளி பிரதேச சபை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றினை அதற்கு உதாரணங்களாகக் கூறலாம்.

மு.கா.வின் வாக்குறுதி

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை எனும் கோரிக்கையினை தமக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதிகளும், கட்சிகளும் ‘நாங்கள் அதனைப் பெற்றுத் தருவோம்’ எனக்கூறி, அந்தப் பிரதேச மக்களின் வாக்குகளை ஆண்டாண்டு காலமாகப் பெற்று வருகின்றனர். ஆயினும், தமது முக்கிய பிரச்சினையொன்றினை வைத்துக் கொண்டு, அரசியல்வாதிகள் விளையாடுகின்றமையினை அனுமதிக்க முடியாது என்பதை உணர்ந்துகொண்ட சாய்ந்தமருது பிரதேசத்தின் பள்ளிவாசல் நிருவாகம் உள்ளிட்ட சிவில் அமைப்புக்கள் களத்தில் குதித்தன. தமது கோரிக்கை தொடர்பில் தேவையான தரப்பினர்களுடன் பேசத் தொடங்கின.

கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் ‘சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை’ எனும் கோசத்தினை அப்பிரதேச மக்கள் தூக்கிப்பிடித்தனர். இந்த நிலையில், கல்முனை பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் கூட்டமொன்றில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார். அதன்போது, சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக்கான வாக்குறுதியை வழங்குமாறு மு.காங்கிரஸ் கேட்டுக்கொண்டது. அதற்கிணங்க, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், சாய்ந்தமருதுக்கு பிரதேசசபை வழங்குவோம்’ என்று, அந்தக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

தமது தேர்தல் மேடையில் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய அந்த வாக்குறுதியினை தூக்கிப் பிடித்துக்கொண்ட மு.காங்கிரஸ், அதனை வைத்து – சாய்ந்தமருதில் தனது தேர்தல் பிரசாரங்களைச் செய்து வந்தது. ஆனாலும், பொதுத் தேர்தல் நடைபெற்று 01 வருடம் கடந்து விட்ட நிலையிலும் – ரணில் மூலமாக, மு.காங்கிரஸ் பெற்றுக் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

நியாயமற்ற அச்சம்

சாய்ந்தமருது – தனியான உள்ளுராட்சி சபையொன்றினைப் பெற்றுக் கொண்டு, கல்முனை மாநகரசபையிலிருந்து பிரிந்து செல்வது தொடர்பில், கல்முனை பிரதேச மக்களில் அதிகமானோருக்கு விருப்பம் கிடையாது. கல்முனை மாநகரசபையிலிருந்து சாய்ந்மதருது எனும் முஸ்லிம் பிரதேசம் பிரிந்து சென்று விட்டால், பிறகு – கல்முனை மாநகரசபையின் ஆட்சி, தமிழர்களின் கைக்கு சென்று விடும் என்கிற அச்சம் கல்முனையிலுள்ள முஸ்லிம் மக்களுக்கு உள்ளது. ஆனால், சாய்ந்தமருது பிரதேசம் – கல்முனை மாநகரசபையிலிருந்து பிரிந்து சென்றாலும், கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் முஸ்லிம்கள்தான் பெரும்பான்மையாக இருப்பார்கள்.

ஹரீஸின் திரிசங்கு நிலை

முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் எச்.எம்.எம். ஹரீஸ் கல்முனையை சொந்த இடமாகக் கொண்டவர். தற்போது பிரதியமைச்சராக உள்ளார். சாய்ந்தமருதில் திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில், சாய்ந்தமருது மக்களின் உள்ளுராட்சி சபைக் கோரிக்கையை ஆதரிப்பதா அல்லது கல்முனை மக்களுடன் இணைந்து சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை எதிர்ப்பதா என்பதில் பிரதியமைச்சர் ஹரீசுக்கு திரிசங்கு நிலை உள்ளது. ஆனாலும், சாய்ந்மருது மக்களின் கோரிக்கைக்கு – தான் ஆதரவளிப்பதாக ஹரீஸ் கூறிவருகின்ற போதிலும், சாய்ந்மருதுக்கு உள்ளுராட்சி சபையொன்று கிடைப்பதில் தடையாக இருப்பவர்களில் ஹரீசும் ஒருவர் என்கிற பேச்சுக்களும் உள்ளன.

றிசாத்தின் அதிரடி

இவ்வாறானதொரு நிலையில்தான், சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபைக் கோரிக்கையினை கையிலெடுத்தார் றிசாத் பதியுத்தீன். அது தொடர்பான அமைச்சர் பைசர் முஸ்தபாவைச் சந்தித்துப் பேசினார். இப்போது, பைசர் முஸ்தபாவை சாய்ந்தமருதுக்கே அழைத்து வந்து, வாக்குறுதி வழங்க வைத்து விட்டுப் போயுள்ளார். அமைச்சர் றிசாத்தின் இந்த அதிரடி நடவடிக்கையினால் மு.கா. தரப்பு கலங்கிப்போய் கிடக்கிறது.

ஆனாலும், சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை தொடர்பில், அந்த மக்களுக்கு வாக்குறுதியளிக்கப்படுவது இது முதன்முறையல்ல. உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சராக அதாஉல்லா பதவி வகித்த காலத்தில் சாய்ந்தமருதுக்கு வந்து, ‘உங்களுக்கு உள்ளுராட்சி சபை வழங்குவேன்’ என்று கூறிச் சென்றிருந்தார். ஆனால், நடக்கவில்லை. பின்னர், தற்போதைய பிரதமர் – எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அவரை அழைத்து வந்து – மு.கா. வாக்குறுதியளித்தது. அதுவும் நிறைவேறவில்லை. இப்போது, பைசர் முஸ்தபாவை அழைத்து வந்து அவர் மூலமாக றிசாத் வாக்குறுதி வழங்கியிருக்கிறார்.

இப்படி, சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை தொடர்பில் அரசியல்வாதிகள் வழிய வழிய வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றார்கள்.

தற்போதைய சந்தர்ப்பம் அமைச்சர் றிசாத்துக்கானதாகும். அவரினூடாக சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக்கான காரியம் நடக்குமா, இல்லையா என்பதை இப்போதைக்குக் கூற முடியாது.

நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்துவிடும்.

நன்றி: தமிழ் மிரர் (25 ஒக்டோபர் 2016)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்