யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமையால் இறந்துள்ளனர் என தெரிவிப்பு
🕔 October 21, 2016



– பாறுக் ஷிஹான் –
யாழ்ப்பாணம் கொக்குவில் – குளப்பிட்டி சந்தியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் பலியானதாக கூறப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும், துப்பாக்கி சூட்டு காயங்களால் உயிரிழந்துள்ளனர் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரேத பரிசோதனையின்போது, இந்த உண்மை தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இந்த மாணவர் மீதான துப்பாக்கி சூட்டை பொலிஸார் மேற்கொள்ளவில்லை என, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சிரேஸ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளதுடன், சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அருகாமையில் துப்பாக்கி சூட்டு சத்தங்கள் கேட்டதாக பொதுமக்கள் தம்மிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் உத்தியோக பூர்வமாக இன்னும் இக்கருத்தை உறுதிப்படுத்த முடியவில்லை.
தற்போது, யாழ் போதனா வைத்தியசாலை பிரேத அறை அருகில் பதற்ற நிலை ஏற்பட்டது.
மேற்படி மாணவர்களின் மரணம் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டதல்ல என்றும், விபத்தினால் ஏற்பட்டது எனவும் தெரிவித்து பிரேத பரிபோதனை முடிவுகளை வெளியிடுமாறு, வைத்தியசாலை நிர்வாகத்தை பொலிஸ் தரப்பு நிர்ப்பந்தித்து வந்திருந்தனர் என அங்குள்ள ஊழியர் ஒருவர் மாணவர்களிற்கு தெரிவித்தார். இதனையடுத்து அடுத்து இப்பதற்ற நிலை எழுந்தது.
எனினும் வைத்தியசாலை நிர்வாகம் அதற்கு ஒப்புதல் தெரிவிக்காது, துப்பாக்கி சூட்டு காயங்களினால்தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையை வெளியிட முனைப்பு காட்டி வருகின்றது.
ஆயினும் இதுவரை உத்தியோக பூர்வமாக அந்த முடிவு வெளியிடப்படவில்லை.
இதே வேளை சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு – காலை சென்ற யாழ் நீதிமன்ற நீதிவான் எஸ். சதீஸ்கரன், இவ்விரு மாணவர்களும் விபத்து காயங்களினால் ஏற்பட்ட பலமான அடி காரணமாக உயிரிழந்துள்ளதாக அறிக்கையிட்டுள்ளதாக கூறி சென்றுள்ளார்.
எனவேதான் இவ்விடயம் தொடர்பாக முன்னுக்குப் பின்னான தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தில் 03 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23) மற்றும் சுன்னாகத்தைச் சேர்ந்த பவுண்ராஜ் சுலக்ஸன் (வயது 24) ஆகிய இருவரும், குறித்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் இருந்த மதிலொன்றுடன் மோதியதாலேயே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தனர்.
இதனையே சில ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டிருந்தன.
தற்போதைய வைத்தியசாலை தகவலின் படி, மோட்டர் சைக்கிளை ஓட்டிச் சென்ற மாணவனின் கையின் ஊடாக துப்பாக்கி குண்டு துளைத்து கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் தற்போது யாழ் வைத்தியசாலை பிரேத அறைக்கு அருகில் உள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் குழப்ப நிலையேற்பட்டுள்ளது.
இவர்களை கட்டுப்படுத்த யாழ்ப்பாண பொலிஸ் சமரச முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனை அடுத்து கொலை குற்றவாளிகளை கைதுசெய்யும் வரை குறித்த மாணவர்களின் சடலத்தை வைத்தியசாலையில் இருந்து வெளியில் கொண்டு செல்ல, தாம் அனுமதிக்கப் போவதில்லையென மாணவர்கள் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வைத்தியசாலைக்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுடன், மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டமையினர்.
ஒரு மாணவனின் மரணம் துப்பாக்கி சூடு காரணமாகவும், மற்றைய மாணவன் தலையில் காயம் ஏற்பட்டமையால் மரணித்துள்ளார் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
இந்த நிலையில் இன்று குறித்த மாணவர்களின் மரணத்திற்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் எனக் கூறி, யாழ் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டன.




Comments

