மேல் மாகாணத்தில் 250 பட்டதாரிகளுக்கு, அடுத்த மாதம் ஆசிரியர் நியமனம்; முதலமைச்சர் பிரசன்ன

🕔 June 24, 2015

Prasanna - 02– அஷ்ரப் ஏ. சமத் –

மேல்மாகாணத்தில் மேலும் 250 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, அடுத்தமாதம் நியமனம் வழங்கப்படும் என்று, மேல் மாகாண முதலமைச்சரும் கல்வியமைச்சருமான  பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கொழும்பு – மட்டக்குளி ஆனந்த மத்திய மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, மஹிந்தோதய ஆய்வு கூடத்தினை திறந்து வைக்கும் வைபவத்தில் – இன்று புதன்கிழமை கலந்து உரையாற்றும் போதே, முதலமைச்சர் பிரசன்ன மேற்கண்டவாறு கூறினார்.

மேல்மாகண சபை உறுப்பினர் மொஹமட் பாயிசின் அழைப்பின் பேரில் வருகை தந்த, முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மஹிந்தோதய ஆய்வு கூடத்தினைத் திறந்து வைத்தார்.

கல்லூரி அதிபர் எம். டபள்யு. திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், முதலமைச்சர் தொடர்ந்து உரையாற்றும் போது மேலும் தெரிவிக்கையில்;

“2009ஆம் ஆண்டு மேல்மாகண முதலமைச்சராக நான்  பதவியேற்கும் போது, ஒவ்வொரு பாடாசலையிலும் ஆசிரியர் பற்றாக்குறை பெருமளவில் நிலவிவந்தது. ஒரு பாடசாலையில் 03 ஆசிரியர்களைக் கொண்டும் வகுப்புகளை நடத்தி வந்தார்கள். தற்பொழுது 70 வீதஆசிரியர்கள் மேல்மாகாண பாடசாலைகளில் நியமனம் பெற்றுள்ளனர்.

அதேபோன்று, மேல் மாகணத்திலுள்ள, சகல தமிழ் மொழி பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை பெருமளவில் நிலவி வந்தது. எனது பதவிக் காலத்தில் – போதியளவு தமிழ் மொழி பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்குச் சான்றாக, கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த. உயர்தரம் மற்றும் சாதாரண தரங்களில் 60 வீதமான மாணவர்கள் சித்தியெய்தியுள்ளனர். மேல் மாகாணத்தில் – கல்வி வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஹிந்த ராஜபக்ஷ, தனது சிந்தனையினூடாக –  நாடு முழுவதும் 1000 மஹிந்தோதய ஆய்வுகூடங்களை ஏற்படுத்தினார். அதில் ஒரு ஆய்வு கூடமே இன்று மட்டக்குளியில் திறந்து வைக்கப்பட்டது. மாகாணசபை உறுப்பினர்கள் முகமட் பாயிஸ் மற்றும் நௌசர் பௌசியின் முயற்சியினாலேயே இந்த ஆய்வு கூடம் இங்குபெற்றுக் கொடுக்கப்பட்டது” என்றார்.

இந் நிகழ்வில், வலயகல்விப் பணிப்பாளர் ஜயந்த விக்கிரமரத்தினவும் கலந்து கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்