ஹக்கீமின் இயலாமைகளை விமர்சித்த அன்சிலின் உரை; கேட்கிறது கத்திச் சத்தம்

🕔 September 6, 2016

Anzil - 098– றிசாத் ஏ காதர் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், அண்மையில் பாலமுனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து கட்சியின் தவறுகளை வெளிக்காட்டியும், கட்சித் தலைவரின் இயலாமைகளை சுட்டிக்காட்டும் கையிலும் ஆற்றிய உரை தொடர்பில் தற்போது கட்சிக்குள் பரவலாகப் பேசப்படுகிறது.

பாலமுனை வைத்தியசாலையில் அண்மையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இந்த நிலையில், ரஊப் ஹக்கீம் முன்னிலையில், கட்சியில் இடம்பெறும் பல்வேறு தவறுகளை சுட்டிக் காட்டும் வகையில் அன்சில் உணர்ச்சிகரமானதொரு உரையினை ஆற்றியிருந்தார்.

அன்சிலின் இந்த உரையானது, மு.கா. தலைவருக்கு கடுமையான அசௌகரியங்களை ஏற்படுத்திருந்தமையினை, அதன்போது அவர் வெளிப்படுத்திய உடல் மொழியினை (Body language) வைத்தும், நிகழ்வின் இறுதியில் ஆற்றிய உரையிலிருந்தும் புரிந்து கொள்ள முடிந்தது.

பாலமுனையில் குறித்த நிகழ்வு நடைபெறவிருந்த நிலையில், அதற்கு முந்தைய நாள் இரவு, மு.காங்கிரசின் பாலமுனை மத்தியகுழுவினர் அந்த நிகழ்வினை ரத்துச் செய்வதாக அறிவித்ததோடு, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் பிரதியமைச்சர் பைசால் காசிம் ஆகியோர் பாலமுனைக்கு வரக் கூடாது என்றும் அறிவித்திருந்தனர். இது தொடர்பான முழு விபரங்களையும் ‘புதிது’ செய்தித் தளம் வெளியிட்டிருந்தது.

ஆயினும், மு.கா. தலைவர் இந்தக் கூட்டத்தை வலிந்து நடத்தி, அதில் அதிதியாகக் கலந்து கொண்டார். இருப்பினும் பிரதியமைச்சர் பைசால் காசிம் இந்தக் கூட்டத்துக்கு வருகை தரவில்லை.

இந்த நிலையில், குறித்த கூட்டதில் கலந்து கொண்ட மு.கா. ஆதரவாளர் ஒருவர் ரஊப் ஹக்கீமைப் பார்த்து, “கட்சியை நடத்த முடியாவிட்டால் ஒப்படைத்து விட்டுப் போங்கள். கட்சியை நடத்துவதற்கு இங்கு ஆட்கள் இருக்கிறார்கள். உண்டியலில் பணம் சேகரித்து, அந்தப் பணத்தில் ஆரம்பிக்கப்பட்ட கட்சி இது” என்று திட்டியமையும், இதன்போது ஹக்கீம் கடுமையான சங்கடத்தினை எதிர்கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், ஹக்கீமை அவ்வாறு நபரொருவர் திட்டியமைக்குப் பின்னணியில் அன்சில் இருந்தார் என்று, ஹக்கீமிடம் ஒரு  மனப்பதிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. ஆனால், கூட்டத்தைக் காணவந்த நபர் ஒருவர் எதிர்பாராத விதமாகவே, மு.கா. தலைவரை அவ்வாறு திட்டியிருந்தார்.

இதேவேளை – கட்சிக்குள் தலைவர், செயலாளர் மற்றும் தவிசாளருக்கிடையில் தோன்றியுள்ள பிரச்சினை தொடர்பில், அன்சில் போன்றோர் தலைவரின் பக்கம் சாராமல் நியாயத்தின் பக்கம் சார்ந்து செயற்பட்டு வருகின்றமையானது, ‘தலைவருக்கு எதிராக அன்சில் செயற்படுகின்றார்’ என்கிற தோற்றப்பாடு ஒன்றினையும் ஏற்கனவே ஹக்கீம் சார்பானவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

மட்டுமன்றி, இறுதியாக நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தில், கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாம் விவகாரத்தில், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீமிடம் அன்சில் காரசாரமாக கேள்விகளைத் தொடுத்திருந்தமையும் இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

இந்த நிலையில், பாலமுனையில் நடந்த நிகழ்வினை வைத்து, அன்சிலுக்கு எதிராக கட்சிக்குள் செயற்படுகின்றவர்கள், தலைவரிடம் போட்டுகொடுத்து, அன்சிலுக்கு எதிரான கத்தியைத் தீட்டக்கூடும் என்று, கட்சிக்குள் உள்ள நடுநிலையாளர்கள் கூறுகின்றனர்.

அன்சிலும் இதுகுறித்து அறியாமலில்லை.

அன்சிலின் உரை – வீடியோ

Comments