புலிகள் முகாமாகப் பயன்படுத்திய, கிளிநொச்சி பள்ளிவாசலை மீள் நிர்மாணிக்க உதவுமாறு கோரிக்கை

🕔 June 22, 2015

Kilinochi mosque - 02– பாறுக் ஷிஹான் –

விடுதலை புலிகளின் காலத்தில், அவர்களின் மினி முகாமாகவும், சிறிய வைத்தியசாலையாகவும் இயங்கி வந்த – கிளிநொச்சி முஹிதீன் ஜூம்மா பள்ளிவாசல்,  மீளவும் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

குறித்த பள்ளிவாசல், தற்போது புதிதாக நிர்மாணம் பெற்று வரும் நிலையில், அப்பிரதேசத்தில் முன்பு வாழ்ந்த முஸ்லிம் மக்கள் – மீளவும் குடியேறுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஏ 9 வீதியின் கிழக்கு பக்கமாக உள்ள 55 ஆம் கட்டை பிரதேசத்துக்கும், இரணைமடு பகுதிக்கும் நடுவே, கரைச்சி பிரதேச செயலக பிரிவிற்குட்ட  KN-18 கிராமசேவகர் பிரிவில் இப்பள்ளிவாசல் அமைந்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறும் மக்களுடன், தொழில் மற்றும் ஏனைய தேவைகளுக்காக, இங்கு வரும் பலரும் – இப்பள்ளிவாசலில் தொழுகையை நிறைவேற்றுகின்றனர்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், மேற்படி முஹிதீன் ஜூம்மா பள்ளிவாசலினை  மீளவும் கட்டியெழுப்புவதற்கு – உதவி புரிந்து வருவதாக, பள்ளிவாசலின் உப தலைவர் சாஹூல் ஹமீத் முஹமட் பைசல் தெரிவித்தார். இதேவேளை, பள்ளிவாசல் நிர்மாணத்துக்காக நிறுவனமொன்றும் பங்களிப்பினை வழங்குவதாகவும் அவர் கூறினார்.

இப்பள்ளிவாசலை சூழவும் 18 குடும்பங்களைச் சேர்ந்தோர் – தற்போது வாழ்ந்து வருகின்றனர்.

இந்தப் பள்ளிவாசலானது முழுவதுமாகக் கட்டி முடிக்கப்படாமல், பல்வேறு தேவைகளுடன் இயங்கி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வுழு செய்யும் தடாகம், வசதியான மலசல கூடம், சுற்றுமதில், இமாம் தங்குமிட வசதி,
பெண்களுக்கான தொழுகை அறை, மதரஸா போன்றவற்றினை – இப் பள்ளிவாசலுக்காக நிர்மாணிக்க வேண்டிய தேவை உள்ளது.

கிளிநொச்சி முஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசலுக்காக மேற்படி தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு, உதவி செய்ய விரும்புகின்றவர்கள்,  பள்ளிவாசல் தலைவர் சரபுல் அனாம் (தொலைபேசி: 0776590632), உப தலைவர் முஹமட் பைசல் (தொலைபேசி: 0778311883) ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

அல்லது பள்ளிவாசலின் கொமர்சல் வங்கி கணக்கிலக்கத்தில் (8155017941) உதவித் தொகையை  வைப்பிலிடலாம். Kilinochi mosque - 07Kilinochi mosque - 05Kilinochi mosque - 01Kilinochi mosque - 06

Comments

புதிது பேஸ்புக் பக்கம்