உசைன் போல்ட் சாதனை; 100 மீற்றர் பந்தயத்தில், மூன்றாவது முறை தங்கம்
🕔 August 15, 2016



உலகின் வேக மனிதன் என வர்ணிக்கப்படும் ஜமெய்கா நாட்டின் குறுந்தூர ஓட்ட வீரர் உசைன் போல்ட், றியோ ஒலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்று, தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துக் கொண்டார்.
அந்தவகையில், 100 மீற்றர் ஓட்டப்பந்தையத்தில் மூன்றாவது முறையாக ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தினை தொடர்ச்சியாக உசைன் போல்ட் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
29 வயதுடைய உசைன் போல்ட், 9.81 செக்கன்களில் ஓடி முடித்து, ரியோ ஒலிம்பிக்கில் 100 மீற்றர் போட்டியில் வெற்றிபெற்றுள்ளார்.
இந்த நிலையில், உசேன் போல்ட்டுக்கு பலமான போட்டியாளராகக் கருதப்பட்ட அமெரிக்க வீரர் ஜஸ்ரின் கற்லின் 9.86 செக்கன்களில் தனது தூரத்தைக் கடந்து, இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
100 மீற்றர் குறுந்தூரப் போட்டியில், உசேன் போல்ட்டை, அமெரிக்க வீரர் ஜஸ்ரின் கற்லின் தோற்கடிப்பார் என்று, நேற்றைய தினம் சர்வதேச விளையாட்டு விமர்சகர்கள் எதிர்வுகூறியிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.
இந்தப் போட்டியில், கனடிய வீரர் அன்ரூ டி க்ராஸ் – மூன்றாமிடத்தைப் பெற்று, வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளார். இவர் 100 மீற்றர் தூரத்தை ஓடிக்கடக்க 9.91 செக்கன்களை எடுத்துக்கொண்டார்.
2008 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கங்களை உசைன் போல்ட் பெற்றிருந்தார்.


Comments



